Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 16, 2017

‘பொறுக்கி’ புகழ் சு.சாமியின் முழு ஜாதகம் இங்கே


தமிழர்களை பொறுக்கிகள் என சமூக ஊடகங்களில் விமர்சித்து வரும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் முழு ஜாதகத்தை இக்கட்டுரையில் அலசியுள்ளோம்.
தமிழர்களை Porkkis என, அதாவது பொறுக்கிகள் என சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகிறார் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி. அவரது கம்ப்யூட்டரில் தமிழர்கள் என டைப் செய்தால் பொறுக்கிகள் என்றுதான் ஆட்டோகரெக்ட் செய்யும் போல. அவர் சில குறிப்பிட்ட நபர்களைத்தான் பொறுக்கி என திட்டுகிறாரா என நினைத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் அவர் பொதுவாக தமிழக அரசியல் பற்றி பேசினாலும், மீனவர் பிரச்சினைகள் பற்றி பேசினாலும், ஜல்லிக்கட்டு பற்றி பேசினாலும், நெடுவாசல் பற்றி பேசினாலும் பொறுக்கிகள் என்றே குறிப்பிடுகிறார். இதிலிருந்து ஒட்டுமொத்த தமிழர்களையும்தான் பொறுக்கி என திட்டுகிறார் என்பது தெரிகிறது. தான் யாரை குறிப்பிடுகிறேன் என அவரும் இதுவரை விளக்கம் கொடுத்ததில்லை என்பதால், ஒட்டுமொத்த தமிழினத்தையும்தான் இவ்வாறு குறிப்பிடுகிறார் என ஊர்ஜிதமாகிறது. பொறுக்கிஸ் என்ற ஒற்றை வார்த்தையால் பட்டிதொட்டியில் உள்ள மீம் கிரியேட்டர்களுக்கும் இரையாகினார் இந்த சுவாமி. இப்படியொரு வித்தியாசமான அரசியல்வாதியாக திகழும் இவரின் முழு ஜாதகத்தையும் ஒரு புரட்டு புரட்டுகிறது இக்கட்டுரை.


சென்னையில் பிறந்தவர்:
தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, தன் சிறுவயதில் சென்னை மயிலாப்பூரில்தான் வசித்திருக்கிறார். இவரது தந்தை சீதாராம் சுப்பிரமணியன் ஒரு புள்ளியியல் வல்லுநர். மத்திய புள்ளியியல் நிறுவனத்தில் பணியாற்றியவர். சுவாமி பிறந்து ஆறே மாதங்களில் அவரது தந்தைக்கு தலைநகரமான டெல்லியில் வேலை கிடைத்துவிட்டது. டெல்லியிலேயே குடும்பத்துடன் குடியேறிவிட்டனர்.
பெரிய ‘படிப்ஸ்’:
சிறு வயதிலிருந்தே படிப்பில் கெட்டிக்காரர் இந்த சுவாமி. கணக்கு வாத்தியாருக்கு இவர் பாடம் எடுப்பார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். டெல்லியில் புகழ்மிக்க ஹிந்து கல்லூரியில் இளங்கலை முடித்துவிட்டு, கொல்கத்தாவில் முதுகலை பயின்றார். முதுகலை படிப்பில் பல்கலைக்கழக அளவில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார்.
வம்பு புடிச்ச ஆளு:
இவரது கல்லூரி நண்பர்கள் கூட ‘நாம யாரு வம்பு தும்புக்கும் போறதுல்ல’ என்ற மைன்ட் வாய்சுடன்தான் இவரை நெருங்குவார்கள். பெரிய படிப்ஸ் என்றால் சும்மாவா? தலைக்கணம், திமிரு, பொறாமை, பழிக்குப்பழி என அனைத்து அம்சங்களுடனும் திகழ்ந்துள்ளார் சுவாமி. கல்லூரியின் கடைசி நாள் வரை சக மாணவர்கள் இவருடன் பேசவே தயங்கியிருப்பார்கள். அதனாலே சுவாமி தன்னை ஒரு தனிப்போராளியாக, தனிமை விரும்பியாக மாற்றிக்கொண்டார். திமுகவின் நமக்கு நாமே பயணங்களை சுவாமி அன்றே கடந்து வந்துள்ளார்.
பெரிய இடத்துடன் மோதல்:
கொல்கத்தா புள்ளியியல் கல்லூரியின் தலைவர் மஹாலநோபிஸ், சுவாமியுடைய தந்தையின் தொழில்முறை எதிரி. சுவாமியை இன்னார் மகன் என்று அறிந்துகொண்ட மஹாலநோபிஸ், சுவாமியின் மதிப்பெண்களை குறைத்து பழி தீர்த்துக்கொண்டார். பேராசிரியர்களிடம் என்னதான் நல்ல பெயர் இருந்தாலும், மஹாலநோபிசுடன் எப்போதுமே முரண்பாடுதான். புலியும் பூனையுமாய் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்வார்கள்.
அடிச்சான் பாரு அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டரு:
எக்கனோமெட்ரிக்கா என்ற இதழில் வெளியான ஒரு கட்டுரைதான் மஹாலநோபிஸ்Vs.சுவாமி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அந்த கட்டுரையை எழுதியிருந்தவரே சுவாமிதான். மஹாலநோபிஸ் எழுதியிருந்த புள்ளியியல் பகுப்பாய்வு முறை அவரது சொந்த ஆய்வு அல்ல. அது பழைய சமன்பாடுகளின் மாறுபட்ட வடிவமே என சுவாமி நிரூபித்தார். இதனால் அந்த பெரிய மனிதர் இவர் முன் மண்ணைக் கவ்வினார். இதன் பரிசாக சுவாமிக்கு அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது.
பயமா? கடல்லயே இல்லை:
சுவாமிக்கு பயம் என்பது துளி கூட இல்லை என்பது உலகம் அறிந்த விடயந்தான். அதிகார மையத்தை எதிர்க்கக் கூடிய முரட்டுத் தைரியம் கொண்ட சுவாமி, நம்மை பொறுக்கிகள் என சொல்லி திட்டுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு மாநில மக்களையே திட்டுகிறோமே.. இதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் கொஞ்சம் கூட நினைத்துப்பார்க்க வில்லை. டைம் இல்லை என்கிறார்.
ட்ரான்ஸ்பார்ம் டூ ‘டாக்டர்’ சுப்பிரமணியன் சாமி:
கணக்கில் புலி என்பதால் அசுர வேகத்தில் தன் இருபத்து நான்காம் வயதிலேயே ஹார்வர்டில் டாக்டர் பட்டத்தை பெற்றார். இருபத்து ஏழாம் வயதில் அந்த பல்கலையிலேயே ஆசிரியர் பணியையும் பெற்றார்.
நோபல் பரிசு வென்றவருடன் கூட்டு:
பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு வென்ற முதல் அமெரிக்கர் பால் சாமுவேல்சனுடன் இணைந்து ‘குறியீட்டு எண்களின் கோட்பாடுகள்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதினார்.
சீனாவும் அத்துபடி:
சீனப் பொருளாதாரத்தை மிக்சியில் போட்டு அடித்துக் குடித்த ஒரே இந்தியர் இந்த சுவாமிதான். இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி என்ற ஆய்வுக்கட்டுரையை எழுதிய முதல் இந்திய ஆய்வாளரும் இவரே. சீன அறிஞர்களிடம் சவால் விட்டு சீன மொழியான மாண்டரின் மொழியை மூன்றே மாதங்களில் கற்றார்.
இந்தியா ரிட்டர்ன்:
சீன பல்கலைகழகத்தின் சுவாமிக்கு பேராசிரியர் பணி காத்திருந்தது. பின்னர் சீன பேராசிரியர்களின் போட்டி மிகுதியால் இவருக்கு அப்பணி வழங்கப்படவில்லை. ரீடர் பதவியையே கொடுத்தார்கள். சில மாதங்களுள் இந்தியாவிற்கு வந்தவர், IIT மாணவர்களுக்கு பொருளாதாரத்தை கற்பித்தார்.
இந்திராகாந்தியிடம் கோமாளி பட்டம்:
1970ம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் சுவாமி தன் கருத்துக்களை முன்வைத்தார். அவரது கருத்துக்களை கேட்ட இந்திராகாந்தி சுவாமியை கோமாளி என்றார். அதுவும் ‘சாத்தியமற்ற கருத்துக்களையுடைய சாண்டா கிளாஸ் என்றார். பச்சையாக சொன்னால் அதன் பொருள் கோமாளிதான்.
விரட்டியடித்த IIT:
நம்மாளு எங்கு சென்றாலும் வம்பையும் வாயையும் கட்டி இழுத்துக்கொண்டேதானே செல்வார். IIT நிர்வாகத்திலும் இவருக்கு சனியன் சடை பின்னியது. சேர்ந்த சில மாதங்களிலேயே இவரை பதவி நீக்க ம் செய்து வீட்டுக்குத் துரத்தியது IIT நிர்வாகம். இருந்தாலும் பின்னர் இந்த பணி நீக்கம் தவறானது என கோர்ட்டில் நிரூபணம் ஆனது. ஆனால் இவர் அங்கு செய்த வம்படி வம்படிதான்.
அமரிக்காவுக்கே போக நினைத்த சிவாஜி:
கல்யாணம் ஆகி இளம் மனைவி இருக்கிறார். வேலையை கோட்டை விட்டிருக்கார், கைக்குழந்தை வேறு. இவரது குணமறிந்து புதிதாய் யாரும் வேலை கொடுக்கவில்லை. பேசாமல் அமெரிக்காவுக்கே திரும்ப போய்விடலாமா என அவர் எண்ணிக்கொண்டிருந்தார். திடீரென விதியின் மீது பழிபோட்டு அரசியலில் தொபுக்கடீர் என குதித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.