March 5, 2017
மராட்டிய மாநில பாரதிய ஜனதா தலைவர் மகனின் ஆடம்பர திருமணம்
மராட்டிய மாநிலத்தில் 30 ஆயிரம் பேர் விருந்தினர்களாக பங்கேற்ற பா.ஜ.க. தலைவர் வீட்டு திருமண விழா அனைத்து தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் பாரதிய ஜனதா தலைவராக இருப்பவர் ராவ்சாகேப் தன்வே. இவரது மகன் சந்தோஷ் தன்வே. இவர் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவருக்கும் மும்பை பட உலக இசை அமைப்பாளர் ராஜேஷ் சர்கதே மகள் ரேணுவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இவர்களுடைய திருமணம் நேற்று முன்தினம் மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள ஜபீந்தா எஸ்டேட் என்ற இடத்தில் நடைபெற்றது.
இந்த திருமணம் மிகப் பெரிய ஆடம்பரமாக நடைபெற்றது. இதற்காக மெடிவால் ராஜவம்ச அரண்மனை போல் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இருந்தது. திருமணத்தில் 30 ஆயிரம் விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அனைத்து மந்திரிகளும், அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர்களும் மற்றும் ஏராளமான அரசியல் தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு தடபுடலான விருந்துகள் நடைபெற்றன. இதற்காக மட்டுமே பல இடங்களில் சாப்பாட்டு கூடம் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு இந்தியாவின் அனைத்து வகை உணவுகளும், சீன உணவுகளும் பரிமாறப்பட்டன.
திருமணத்துக்கு வந்த முக்கிய விருந்தினர்களை மும்பையில் இருந்து அழைத்து வருவதற்காக 10 தனியார் ஜெட் விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அவுரங்காபாத்தில் மணமக்களின் பிரமாண்ட ஊர்வலமும் நடைபெற்றது.
திருமண காட்சிகள் முழுவதும் பறக்கும் ரிமோட் விமானங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டன. நகரின் முக்கிய சாலைகளில் முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
முன்னதாக திருமண அழைப்பிதழ் வித்தியாசமான முறையில் தயாரித்து அனுப்பி இருந்தனர். திருமண அழைப்பிழை திறந்ததும் உள்ளே எல்.இ.டி. திரை கொண்ட மானிட்டர் இருந்தது. அதில், மணமக்கள் தோன்றி திருமணத்துக்கு அழைப்பு விடுத்தனர். அதில் அவர்கள் ஆடிப்பாடுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.
இந்த திருமண அழைப்பிதழ் பல ஆயிரம் ரூபாய் இருக்கும் என கருதப்படுகிறது. திருமணத்துக்கு எவ்வளவு செலவானது என்பதை திருமண வீட்டார் தெரிவிக்கவில்லை. ஆனால், திருமண செலவு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.
இது தொடர்பாக மராட்டிய சமூக சேவகர் அஞ்சலி தமானியா கூறும் போது, இவ்வளவு ஆடம்பரமாக செலவு செய்வதற்கு இவரிடம் எப்படி பணம் வந்தது? ரூ.5 லட்சத்துக்கு மேல் திருமண செலவு செய்ய கூடாது என்று பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா சட்டம் கொண்டு வந்துள்ளது.
ஆனால், பாரதிய ஜனதா தலைவர் இவ்வளவு பணத்தை செலவு செய்து திருமணத்தை நடத்தினார் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
சமீபத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி தனது மகளின் திருமணத்தை மிக பிரமாண்டமாக நடத்தினார். அதை விட பிரமாண்டமாக இந்த திருமணம் இருந்ததாக பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
மேலும் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம், கர்நாடக தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் ஆகியவற்றையும் ஒப்பிட்டு வியப்பு தெரிவித்து வடமாநில பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
மராட்டிய மாநில பாரதிய ஜனதா தலைவர் மகனின் ஆடம்பர திருமணம்
Reviewed by மறத்தமிழன்
on
March 05, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.