'
விவசாயிகளின் வாழ்வை அழிக்கும், ஹைட்ரோ கார்பன் திட்டம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம்' என்ற உறுதிமிக்க கோரிக்கையோடு 18-வது நாளாக நெடுவாசலில் அனல் பறக்கிறது போராட்டம். இந்த நிலையில், தனது அதிரடிப் பேச்சுக்களால் அலறவிடும் பி.ஜே.பி தேசியச் செயலாளர் எச்.ராஜாவிடம் நெடுவாசல் போராட்டம் குறித்துப் பேசினோம்...
''ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில், தீவிரவாதிகள் நுழைந்துவிட்டதாக குற்றம் சுமத்தினீர்கள். இப்போது நெடுவாசல் போராட்டத்திலும் தீவிரவாதிகள் புகுந்துவிட்டதாக சொல்கிறீர்கள்... பிரச்னையை திசை திருப்புகிறதா பி.ஜே.பி?
''நெடுவாசலில் போராடும் உள்ளூர் மக்களின் கோரிக்கை அந்தப் பிரச்னைக்குத் தீர்வு மட்டுமே.
ஆனால், எஸ்.டி.பி.ஐ., ம.க.இ.க, மே 17, நாம் தமிழர் போன்ற தீவிரவாத, நக்சலைட் கூட்டங்களின் நோக்கம் தீர்வு ஏற்படுவது அல்ல. கோயம்புத்தூரில் இருந்து அழைத்துவரப்பட்ட எஸ்.டி.பி.ஐ சார்ந்தவர்கள் போராட்டத்தில் கூச்சல் போட்டதாக செய்திகள் வந்திருக்கிறது. உடனே அந்த ஊர் மக்கள் அவர்களை ஊரைவிட்டு வெளியேற்றியிருக்கிறார்கள். அதேபோல், மே 17 இயக்கம், சுப.உதயகுமார் உள்ளிட்ட அமைப்புகள் ஊருக்குள் வரக்கூடாது என்று சொல்லியதால், அவர்களும் வடகாட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
இந்த நக்சலைட் இயக்கங்கள், ஜிகாதி அமைப்புகள், தமிழ்ப் பிரிவினைவாதிகள் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் நுழைந்திருந்தார்கள். இப்போது நெடுவாசல் போராட்டத்திலும் அவர்கள் நுழைந்திருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எந்தச் சூழ்நிலையிலும், பிரச்னையை திசை திருப்பவில்லை பி.ஜே.பி.''
''எதன் அடிப்படையில், போராட்ட அமைப்புகள் மீது இப்படி தீவிரவாத முத்திரை குத்துகிறீர்கள்?''
'' 'பாராளுமன்றம் என்பது பன்றித் தொழுவம்', 'ஆயுதப் புரட்சியே ஜனநாயகப் பாதை' என்றெல்லாம் பேசக்கூடியவர்களை தீவிரவாதிகள், நக்சல்வாதிகள் என்று சொன்னால் என்ன தப்பு? மே 17, ம.க.இ.க அமைப்புகளின் கொள்கை கோட்பாடுகளைப் படித்துப்பாருங்கள் புரியும். அதனால்தான் 'இவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்' என்று போராடும் மக்களிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.''
''மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் பங்கெடுக்கும் அமைப்புகளை இப்படி தீவிரவாதிகளாக சித்தரிப்பது நியாயம்தானா?''
''ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் 50 வயசு ஆட்களுக்கு என்ன வேலை? அவர்கள் எந்தக் கல்லூரி மாணவர்கள்? மே 17, ம.க.இ.க., ஜிகாதி அமைப்புகளுக்கு அங்கு என்ன வேலை? சீமான் மாதிரியான தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு அங்கு என்ன வேலை? அவர் என்ன ஜல்லிக்கட்டுக் காளை வளர்க்கிறாரா? நாய் வளர்க்கிறார்; அதுவும் வெளிநாட்டு நாய்... எல்லாம் வேஷம். 'தமிழன் என்ன இளிச்சவாயனா? இந்தத் தீய திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு மாத்திரமா? குஜராத்துக்கு கொண்டு போ' என்று நெடுவாசலில் வைகோ பேசியிருக்கிறார். இதே ஹைட்ரோ கார்பன் திட்டம் குஜராத்தில் 5 இடங்களில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், மத்திய அரசு தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படுவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் தீய நோக்கத்தோடு பிரிவினைவாதத்தை விதைப்பவர்கள் தீவிரவாதிகள்தானே?''
''18-வது நாளாக மக்கள் போராட்டம் நீடிக்கிறது. ஆனால், இப்போதும், 'மக்கள் விரும்பவில்லை என்றால், திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்' என்று மட்டுமே தொடர்ந்து சொல்லிவருகிறீர்களே...?'' ''ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் உண்மை நிலையை போராட்டக் களத்திலேயே போய் அந்த மக்களிடம் விளக்கி சொல்லியிருக்கிறேன். ஆனால்,அதன்பிறகும் அந்த மக்களிடம் இதுகுறித்த அச்சம் இருக்கிறது. எனவே, 'மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் பேசி இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்' என்றும் சொல்லியிருக்கிறேன். அதேசமயம், 'தமிழ் மக்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் விரோதமானவர் மோடி' என்று சொல்வதை அனுமதிக்கமுடியாது என்பதையும் உறுதியாக சொல்லியிருக்கிறேன். உள்ளூர் மக்களும் 'நாங்கள் மோடிக்கு விரோதம் இல்லை' என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.