Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 5, 2017

தமிழகத்தை பாலைவனமாக்க துடிக்குது மத்திய அரசு, அதற்கு காவடித் தூக்குது மாநில அரசு!


உலகிலேயே அணைக்கட்டி விவசாயத்தை வளா்த்தவன் தமிழன், அதற்கு சான்று கரிகாற்சோழன். இந்த மன்னன் பொறியியல் வல்லுனா் கிடையாது, பட்டப்படிப்பு படித்தது இல்லை.
கரிகாற்சோழன் தஞ்சை மாவட்ட காவிரி ஆற்றில் அமைத்ததுதான் உலகிலேயே முதல் பிரமாண்ட அணை, அதுதான் கல்லணை.
மாட்டைவிட்டு போரடித்தால் முடியாது என்று யானையை வைத்து போரடித்த பூமிதான் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சை பூமி.
அவடவாறு வளம் கொழித்த பூமியைத்தாள் இன்று பாலைவனமாக்கத் துடிக்குது மத்திய அரசு.
தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த 2010ம் ஆண்டு அனுமதி அளித்தது. மீத்தேன் திட்டத்துக்காக தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், 50 கிராமங்களில் உள்ள, 691 சதுர கிலோ மீட்டா் தூரத்தை கிரேட் ஈஸ்டா்ன் எனர்ஜி என்ற நிறுவனத்துக்கு மத்திய அரசு தாரை வார்த்தது.
அப்போதைய மாநில அரசின் துணை முதல்வா் ஸ்டாலின் தான் அனுமதி அளித்தார். ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்தை எதிர்த்தார். அதன்படி அதை செயற்படுத்த விடாமல் செய்தார்.
ஒட்டுமொத்த தமிழகத்தையும் அழிக்கும் நாசக்காரத் திட்டம்தான், இந்த மீத்தேன் திட்டம்.
இதன் விளைவுகளை நினைத்துப்பார்த்தால், இனி நம்மால் நிம்மதியாக ஒரு நிமிடம் கூட தூங்க முடியாது. நிலத்தில் 6 ஆயிரம் அடிக்கு கீழே இருக்கும், நிலக்கரிப் படிமங்களில் இருக்கும் நீரை முற்றிலும் இறைத்து வெளியேற்ற வேண்டும். அதற்கு மிகப் பெரிய ராட்சத போர் வெல் போடவேண்டும்.
அப்படி போர் போடும் போது நிலத்தின் அடியில் நீருடன் கலந்திருக்கும் கடும் உப்பும், மாசும் கலந்த நீர் நிலத்தில் வந்து விழும். அந்த உப்பு கலந்த நீர் தாவரங்களை அழிக்கும் சக்தி உடையது. புல், பூண்டுகள் கூட முளைப்பது கடினம் என்கிறார்கள்.
நிலம் சுடுகாடாய் மாறும். அந்த நிலப்பகுதி 20 அடி கீழே இறங்கும். கட்டிடங்கள், பாலங்கள், ஆற்றங்கரைகள், கோயில்கள் சிதையும். நில நடுக்கம் ஏற்படும். நிலத்தடி நீர் வற்றிப்போகும், நிலத்தடியின் உள்ள பாறைகளுக்கிடையே உள்ள நீரோட்டம் வறண்டு போகும்.
கொஞ்சம் இருக்கும் நீர்நிலைகளிலும் மீத்தேனின் ரசாயன கழிவுகள் கலந்தும், நிலத்தடியில் வெளியேற்றப்பட்ட மீத்தேன் கழிவுகள் நிலத்தின் மேற்பகுதியில் படர்ந்து மண்ணையும் நச்சுத்தன்மை ஆக்கிவிடும். நிலம் நிரந்தரமாக விஷமாகி நாசமாகிப்போகும்.
விளைவுகள் இப்படி இருக்க, அரசாங்கத்திற்கு கொடுக்கப்போகும் நிலத்தின் அளவு 691 சதுர கிலோ மீட்டா். அதாவது 6 மாவட்டங்களில் 8 ஆயிரத்து 270 சதுர கிலோ மீட்டா் அளவு பாதிப்பை ஏற்படுத்தும்.
21 லட்சம் ஏக்கா் விளைநிலங்கள் நாசமாகும். 50 லட்சம் மக்கள் வாழ்வாதாரம் இன்றி சாகும் நிலை உருவாகும்.
நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கடலூா் என மீத்தேன் எடுக்கும் திட்டங்கள் என்னவோ விரிவடையும். ஆனால் மனித வாழ்வாதாரம் முற்றிலும் சாகடிக்கப்படும். அதன்பின்னர் தமிழகம் ஆறுகளே இல்லாத பாலைவனமாகும். அதற்கு திட்டமிட்டுத்தான் இந்த திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.
காவிரியில் கர்நாடகா பல இடங்களில் அணையை கட்டி தனது நீர்நிலையை பாதுகாத்து வருகிறது. கேரளா முல்லைப் பெரியாறு அணையிலும், பவானியிலும் அணைகளைக்கட்டி அதன் நீர்நிலைகளை காத்துக்கொள்ளத்துடிக்கிறது. ஆந்திராவில் பாலாறு, தென்பெண்ணை ஆகிய ஆறுகளில் இருந்து வரும் நீரும் தமிழகத்துக்கு என்றென்றும் பிரச்சனைதான்.
கா்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் ஆட்சி அமைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், தமிழகத்தில் அந்த இரு கட்சிகளும் ஆட்சி அமைப்பது என்பது நடக்காது.
அதனால் தமிழகத்துக்கு எந்த நல்லது செய்வதிலிருந்து இரண்டு கட்சிகளுமே பின்வாங்கத்தான் செய்யும்.
தண்ணீர் இல்லை என்றால் விவசாயம் கிடையாது, ஆடு, மாடு வளா்க்க முடியாது. கிராமத்தில் வேலைவாய்ப்பு கிடையாது.
அரேபிய நாடுகளில் பூமியை துளையிட்டு எண்ணெய் எடுக்கும் பணிகள் நடப்பது போல, தமிழகத்திலும் இனி அந்த பணியைத்தான் செய்ய வேண்டும்.
விவசாயத்தை தொலைத்த பின்னர்,மீத்தேன் எடுப்பதில் உள்ள பணிகளை இந்த நாதியற்ற தமிழா்களை வைத்து குறைந்த சம்பளத்தில் செய்துகொள்ளவும் அவர்கள் முடிவு எடுப்பார்கள். கேட்டால் வேலைவாய்ப்பு வழங்குகிறோம் என்பார்கள். தமிழகத்தில் தஞ்சை பூமி வளம் கொழிக்கும் பூமியாக இருந்ததை வரும் தலைமுறை ஆவணப்படங்கள் மூலமாக தெரிந்துகொள்ளும் அவலம் ஏற்படும்.
இனி நாம் பழங்கதைப் பேசி, இது அவா் குற்றம், இது இவா் குற்றம் என்று சொல்லி பொறுப்புகளில் இருந்து, நாம் விலகிச் செல்ல நினைப்பது நம்மை நாமே மரணித்துக்கொள்ளச் செய்யும் துர்பாக்கிய நிலையாகும்.
உலகுக்கு, உழவுத் தொழிலைச் சொல்லித் தந்தவன் தமிழன். அடுத்த தலைமுறைக்கு உழவுத் தொழிலையும், பசுமையையும் படத்தில் காட்டும் அவல நிலைக்கு நாம் போய்விடக் கூடாது.
தற்போது பெயரை மாற்றிக்கொண்டு நவநாகரீக மங்கைபோல நெடுவாசலை நோக்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒன்றுபட்டு விரட்டுவோம்.
நம் வளத்தை காப்பதற்காக,உரிமைக்குரல் கொடுத்து போராடும் இளைஞா்கள், மாணவா்கள், மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவு தருவோம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எனப்படும் நரகாசுரனை அழிப்போம். தமிழக வளம் காக்க உளம் நிறைந்து கரம் கொடுப்போம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.