சென்னை விடுதியில்தான் எம்.எல்.ஏக்கள் இருப்பதாக தவறான தகவலை தாம் உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்ததாக அரசு வழக்கறிஞர் இன்று அந்தர்பல்டி அடித்தார். இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எங்கே? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசு வழக்கறிஞரிடம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பது தொடர்பாக பாமக வழக்கறிஞர் பாலு, டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கின் விசாரணையின் போது எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் விடுதியில்தான் இருக்கிறார்கள் என அரசு வழக்கறிஞர் அப்பட்டமான பொய்யை கூறியிருந்தார்.
சிறைவைப்பு
அதே நேரத்தில் சென்னை- புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்கள், கைதிகளாக சிறை வைக்கப்பட்டிருப்பது ஊடகங்களில் அம்பலமானது. மேலும் அங்கு 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் உணவை சாப்பிடாமல் போராட்டம் நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஜாமர் மூலம் செயலிழப்பு
அங்கு சிறை வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்கள், செல்போன்களை பயன்படுத்த முடியாத வகையில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் எம்.எல்.ஏக்களின் குடும்பத்தினரும் பரிதவித்து வருகின்றனர். இதனிடையே இன்று இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிடி செல்வம், மதிவாணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.

தவறான தகவல்
அப்போது, எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், எம்.எல்.ஏக்கள் விடுதியில்தான் இருக்கிறார்கள் என நீதிமன்றத்தில் தாம் தவறான தகவலை தெரிவித்ததாக கூறினார். இதை நீதிபதிகள் பதிவு செய்தனர்.
எங்கே எம்.எல்.ஏக்கள்?
மேலும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எங்கே இருக்கிறார்கள்? என்பது உள்ளிட்ட சரமாரி கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். இது குறித்து விரிவான விளக்கத்தை திங்கள்கிழமை தர வேண்டும் என்று அரசுக்கும் காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.