February 28, 2017
மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவன நலனுக்காக எரிவாயு திட்டத்தை அமைக்கிறது: ஆளூர் ஷாநவாஸ்
மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவன நலனுக்காக இயற்கை எரிவாயு திட்டத்தை அமைக்கிறது என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கூறினார்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
கேள்வி: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வருவது ஏன்?
பதில்: தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதிகள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன. காவிரி நீர்வரத்து தடைபட்டதால் விவசாயம் முற்றிலும் அழிந்து விட்டது. மூன்று போகம் விளைந்த மண்ணில் ஒரு போகம் விளைச்சல் கூட கேள்விக் குறியாகிவிட்டது.
காவிரி மட்டுமின்றி முல்லைப் பெரியாறு பாலாறு என, பிற மாநிலங்கள் வழியாக தமிழகத்துக்கு வரும் நீர் ஆதாரங்கள் அனைத்துமே பிரச்சனைகளுக்குள் சிக்கியிருக்கின்றன.
இத்தகைய நிலையில், நமக்கு இருக்கும் ஒரே கையிருப்பு நிலத்தடி நீர் தான். அதையும் அடியோடு ஒழித்துக் கட்டும் முயற்சிதான் இந்த நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள். வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இந்தத் திட்டங்களின் அடிப்படை ஒன்றே. அது, எரிவாயு எனும் பெயரில் நிலத்தை மலடாக்கும் தன்மை உடையவை.
நிலத்தடி நீரை பாழாக்கும் குணம் கொண்டவை. எனவே அதை எதிர்ப்பதன் மூலமே நமது மண்ணையும் மக்களையும் நாம் பாதுகாக்க முடியும்.
கே: அரசு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டத்தையும் இப்படி எதிர்த்துக் கொண்டிருந்தால், அது வளர்ச்சியை பாதிக்காதா?
ப: கட்டாயம் பாதிக்கும். ஆனால், அது யாருடைய வளர்ச்சி என்று பார்க்க வேண்டும். இந்தத் திட்டங்களில் ஒன்றுகூட மக்களின் வளர்ச்சிக்கானது அல்ல. முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளின் நலனுக்கானது. அது பாதிக்கப்படுகிறது என்பதனால் தான் அரசுக்கு ஆத்திரம் வருகிறது.
மக்கள் நலத்திட்டம் என்றால், அதை ஏன் மக்கள் எதிர்க்கப் போகிறார்கள்? காமராஜர் அணைகளை கட்டினார், பாலங்களை போட்டார், மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார், அரசே நடத்தும் ஆலைகளைத் தொடங்கினார். அதையெல்லாம் யாராவது எதிர்த்தார்களா? எனவே, மக்களுக்குத் தெரியும் எது நல்லது எது கெட்டது என்பது.
கே: இதுபோன்ற திட்டங்களை எதிர்க்காமல், நாட்டுக்காக ஒரு மாநிலம் தன்னை தியாகம் செய்ய வேண்டும் என்று இல.கணேசன் கூறியுள்ளாரே?
ப: நாட்டுக்காக தியாகம் செய்வதைப் பற்றி தமிழகத்துக்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை. நாட்டின் வளர்ச்சியில் தமிழகம் முதன்மைப் பங்களிப்பைச் செய்துள்ளது.
அதே நேரம், மாநில நலனையும் விட்டுத்தராது. மற்ற மாநிலங்களில் செய்ய முடியாதவற்றையெல்லாம் தமிழகத்தின் தலையில் கட்டுவதை அமைதியாக ஏற்க வேண்டும் என்பது நியாயமா? கூடங்குளம் அணு உலையை அமைக்க முதலில் கேரளாவில்தான் இடம் பார்த்தார்கள். ஆனால், அங்கு அதை அமைக்க முடியவில்லை. விரட்டி விட்டார்கள்.
பின்பு, தமிழ்நாட்டில் கொண்டு வந்து எதிர்ப்பையும் மீறி வைத்து விட்டார்கள். கூடங்குளம் அணு உலையிலிருந்து வெளியாகும் அணுக் கழிவுகளை புதைக்க கர்நாடகத்தின் கோலாரில் இடம் பார்த்தார்கள். அதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், இப்போது அந்தக் கழிவுகளையும் கூடங்குளத்திலேயே புதைக்கிறார்கள்.
அணு உலை நாட்டுக்கானது என்றால், அதை ஏன் கேரளாவும் கர்நாடகாவும் எதிர்க்கின்றன. நாட்டுக்காக தியாகம் செய்ய அந்த மாநிலங்கள் ஏன் முன்வரவில்லை? எனவே, இல.கணேசன் தமது அறிவுரையை அந்த மாநிலங்களுக்குத்தான் சொல்ல வேண்டும்.
கே: அரசின் திட்டங்களைப் பற்றி தவறான கருத்துகள் பரப்படுவதால் தான், மக்கள் அதை நம்பி எதிர்க்கிறார்கள் என சொல்லப்படுகிறதே?
ப: தவறான கருத்துகளை நம்பி அல்ல; அரசின் திட்டங்களால் இதற்கு முன்பு கிடைத்த கசப்பான அனுபவங்களில் இருந்தே மக்கள் எதிர்க்கிறார்கள். போபாலில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 30 ஆண்டுகள் ஆன பிறகும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. அந்த பாதிப்பை ஏற்படுத்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தாரை அரசால் தண்டிக்கவும் முடியவில்லை.
குற்றவாளிகள் தப்பி விட்டனர். அது மட்டுமின்றி, பேரிடரோ விபத்தோ ஏற்பட்டால் அதை எதிர் கொள்ளும் அளவுக்கு அரசுக் கட்டமைப்பு வலிமையின்றி இருப்பதும் மக்களின் அவநம்பிக்கைக்கு முக்கிய காரணமாகும். அண்மையில், எண்ணூர் கடல்பகுதியில் கப்பல்கள் மோதி கச்சா எண்ணை கொட்டியபோது, அதை வாளிகளில் அள்ளிய நமது அரசின் பேரிடர் மேலாண்மையைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அணு உலை விபத்தோ, எரிவாயு குழாய் வெடிப்போ ஏற்பட் டாலும் வாளிகளோடு தான் அரசு வருமா என்று இளைஞர்கள் கேள்வி கேட்கின்றனர். எனவே, மக்களின் பார்வையும் ஐயமும் சரிதான்.
கே: மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநிலத்தில் முட்டுக்கட்டைகள் தொடர்வது ஆரோக்கியமானது தானா?
ப: இதில் மாநிலத்தின் குற்றம் ஏதுமில்லை. மாநில மக்கள் கேட்பதை மறுப்பதும், கேட்காததை திணிப்பதுமாக நடந்து கொள்ளும் மத்திய அரசுதான் தொடந்து தவறு செய்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை நாம் கேட்கிறோம்.
மத்திய அரசோ அதை மறுத்துவிட்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தருகிறது. கல்வி மாநிலப் பட்டியலில் தொடர வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். மத்திய அரசோ நீட் தேர்வை நம் மீது திணிக்கிறது.
மூன்று தமிழர் விடுதலை, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி, சேதுக்கால்வாய் திட்டம், அரசியல் சட்ட அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சம உரிமை, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பு என நாம் கேட்பது ஒன்றும் டில்லியிலிருந்து நம் மீது திணிப்பது வேறொன்றுமாக இருப்பதுதான் பிரச்சனையே.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவன நலனுக்காக எரிவாயு திட்டத்தை அமைக்கிறது: ஆளூர் ஷாநவாஸ்
Reviewed by மறத்தமிழன்
on
February 28, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.