அன்று எடப்பாடி எட்டுப்பட்டிக் கவுண்டர் தெருக்கள் பரபரப்பாக இருந்தன. ஊரில் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் பதற்ற முணுமுணுப்புகள். நெடுங்குளம் கிராமமே பதற்றச் சூறாவளியின் பிடியில் இருந்தது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், ஈட்டியால் சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டதும், அதைச் செய்தவர்கள் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதும்தான் அத்தனை அமளிதுமளிகளுக்கும் காரணம்.
அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர்கள் எனத் தேடப்பட்டவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளுக்குள் மாயமாகிப்போனார்கள்.
அவர்களில் அந்த இளைஞரும் ஒருவர். வழக்கு, நீதிமன்ற படி ஏறி முடிவுக்கு வந்து, பிறகு ஊர் சொந்தங்களின் மத்தியஸ்த முயற்சி, அதே ஊரைச் சேர்ந்த அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் முத்துச்சாமியின் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் ஊருக்குள் தலைகாட்டினார் அந்த இளைஞர்.
அவர்தான் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி!
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுங்குளம் கிராமம் சிலுவம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தின் கடைக்குட்டி பழனிசாமி.
கல்லூரியில் படிக்கப் பிடிக்காமல் மூட்டை ஒன்றுக்கு இரண்டு ரூபாய் கமிஷன் வைத்து வெல்ல வியாபாரம் செய்தவர்.
காடு காடாக அலைந்துதிரிந்து வெல்ல மூட்டைகளைக் கொண்டு வருவதால் ‘வெல்ல மூட்டை’, ‘சர்க்கரை மூட்டை’ என ஊருக்குள் பழனிசாமிக்கு அடைமொழிவைத்தார்கள்.
ஆனால், ‘அதற்கு எல்லாம் கோபப்பட்டால் வேலைக்கு ஆகுமா?’ எனச் சிரித்துக்கொண்டே கூறிவிட்டு, வேலையில் கண்ணும்கருத்துமாக இருந்தார்.
அந்த வட்டாரத்தில் ‘பங்காளிச் சண்டை’ மிகப் பிரசித்தம். அப்படி பழனிசாமி குடும்பத்தின் பங்காளி வகையறாவுக்குள் 10 அடி நிலத்துக்காக மூண்ட மோதல், எதிர்த்தரப்பைச் சேர்ந்த மூவர் கொலையாகும் வரை சென்றது.
அந்த வழக்கில் சிக்கிய பழனிசாமியோடு சேர்ந்து சிலர் மீது நீதிமன்றத்தில் வருடக்கணக்கில் வழக்கு நடந்தது. சாட்சிகள் பல்டி அரங்கேற, வழக்கு தள்ளுபடி ஆனது.
சமரச உடன்படிக்கை எல்லாம் ஏற்பட்டு ஒருவழியாக மீண்டார்கள் பழனிசாமி தரப்பினர். அதன் பின்னர் ஆவேசத்தை அடக்கியேவாசித்தார் பழனிசாமி.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.