February 4, 2017
தூத்துக்குடி: போலீஸ் விசாரணையில் வாலிபர் மரணம்
தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் பாண்டியராஜன்(வயது 34). இவர் கிளினிங் பவுடர் ஏஜென்சி எடுத்து தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ள அபிஷேகநாதர் ஆலய அசன விழாவிற்கு சென்ற பாண்டியராஜனுக்கும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் ரூபா ரோஸ்லினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து ரூபாரோஸ்லின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திசெல்வி சம்பவஇடத்துக்கு சென்று பாண்டியராஜனை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். பின்னர் பாண்டியராஜன் மீது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
போலீசார் விசாரணை நடத்திக்கொண்டு இருந்தபோது பாண்டியராஜனுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பாண்டியராஜன் இறந்து விட்டதை அறிந்த உறவினர்கள் நேற்று அதிகாலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். போலீசார் தாக்கியதால் பாண்டியராஜன் இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும், இறந்த பாண்டியராஜன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு அண்ணாமலை மதியம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் இறந்த பாண்டியராஜனின் உடலை பார்வையிட்டு பாண்டியராஜனின் உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இந்த விசாரணை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. மாஜிஸ்திரேட்டின் விசாரணைக்கு பிறகு பாண்டியராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு நடந்த பிரேத பரிசோதனை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. மாலை 5.15 மணி அளவில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டது. ஆனால் உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு வரையிலும் இந்த போராட்டம் நீடித்தது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தூத்துக்குடி உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்ததன் அடிப்படையில் பாண்டியராஜன் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதித்தனர். இதனைத்தொடர்ந்து இரவு 9 மணி அளவில் உடலை பெற்றுக் கொண்டனர்.
பாண்டியராஜனின் உடலை அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தோட்டாக்குடிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆனால் அங்கு இரவு முழுவதும் உடலை வைப்பதற்கு போதுமான வசதிகள் இல்லாததால், பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் உடலை வைக்கவும், இன்று (சனிக்கிழமை) காலை மீண்டும் உடலை எடுத்து சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி: போலீஸ் விசாரணையில் வாலிபர் மரணம்
Reviewed by மறத்தமிழன்
on
February 04, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.