Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 11, 2017

சசிகலாவுக்கு அழைப்பு அனுப்ப கவர்னர் தாமதம் செய்வது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.


தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சி அமைக்க ஓ.பன்னீர்செல்வத்தை அழைப்பதா அல்லது சசிகலாவை அழைப்பதா என்பது பற்றி கவர்னர் வித்யாசாகர்ராவ் இன்னும் எந்த முடிவும் எடுக்க வில்லை.

அவர் தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறார். மத்திய உள்துறை மற்றும் சட்ட நிபுணர்களுடன் அவர் தேவைக்கு ஏற்ப ஆலோசனைகளையும் பெற்று வருகிறார்.

கவர்னர் வித்யாசாகர்ராவ் இந்த விவகாரத்தில் தொடர்ந்து நிதானமான போக்கை கடைபிடிப்பது பற்றி பலரும் அதிருப்தி கூறியுள்ளனர்.ஆனால் எதிர்வரும் மாதங்களில் அடுத்தடுத்து குழப்பங்களும், சர்ச்சைகளும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே கவர்னர் இந்த விஷயத்தில் மிகவும் நிதானமாக, பல் வேறு அம்சங்கள் பற்றி ஆய்வு செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் சென்னை வந்ததும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா இருவரும் அவரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரி கடிதம் கொடுத்தனர். அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம் பொறுமையாக உள்ளார். உடனே ஆட்சி அமைக்கும் எந்த முயற்சிகளிலும் அவர் அவசரம் காட்டவில்லை.

ஆனால் சசிகலா தரப்பினர், கவர்னர் உடனே  தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். நேற்று எப்படியும் தங்களுக்கு அழைப்பு வந்து விடும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கவர்னர் யாருக்கும், எந்த அழைப்பும் விடுக்க வில்லை.

தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் வித்யா சாகர் ராவ் அறிக்கை அனுப்பி இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியானது. ஆனால் இதுவரை கவர்னர் எந்த அறிக்கையையும் அனுப்பவில்லை என்று கவர்னரின் முதன்மைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா தெரிவித்துள்ளார். அப்படியானால் கவர்னர் எதற்காக இந்த விவகாரத்தில் தாமதம் செய்கிறார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

கவர்னரை, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து மனு கொடுத்தபோது, தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தனர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கடத்தி வைத்துள்ளனர், சசிகலா தேர்வு சரியான நடைமுறை அல்ல என்பன போன்ற விஷயங்களை விளக்கமாக எடுத்துக் கூறினார். ஓ.பன்னீர்செல்வம் கூறிய இந்த விஷயங்கள் ஒவ் வொன்று பற்றியும் கவர்னர் விசாரித்து வருகிறார்.

இந்த நிலையில் சசிகலா, கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்தபோது, அதில் தன்னை முதல்வராக தேர்வு செய்ய ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்து இருப்பதாகவும் தனக்கு 134 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறினார். சசிகலாவின் இந்த கூற்று, கவர்னருக்கு ஒரு வினோதமான அரசியல் சூழ்நிலையை உணர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்தே கவர்னர் அடுத்த ஆய்வில் இறங் கினார்.

எம்.எல்.ஏ.ஆக இல்லாத ஒருவரை, எப்படி முதல்-அமைச்சராக பதவி ஏற்க வருமாறு அழைப்பு விடுப்பது என்பதில் கவர்னர் வித்யாசாகருக்கு மிகுந்த தயக்கம் எழுந்தது. சசிகலா தனக்கு பெரும்பான்மை எல்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதை உரிய சான்றுகளுடன் கொடுத்துள்ள போதிலும், இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளை காரணம் காட்டி கவர்னர் தனது தயக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

எம்.எல்.ஏ-.ஆக இல்லாத ஒருவர் அமைச்சராகவோ அல்லது முதல்-அமைச்சராகவோ பதவி ஏற்க முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 164-வது பிரிவின் 4-வது உட்பிரிவில் இது பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.வாக இல்லாத ஒருவர் முதல்-அமைச்சராக பதவி ஏற்று விட்டு, பிறகு 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகிக் கொள்ளலாம் என்று அந்த சட்டபிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2001-ம் ஆண்டு, சுப்ரீம் கோர்ட்டு 164(4) அரசிய லமைப்பு சட்டப்பிரிவு பற்றி புதிய தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த தீர்ப்பில், எம்.எல்.ஏ.ஆக இல்லாத ஒரு வரை அமைச்சராகவோ, முதல்-அமைச்சராகவோ நியமனம் செய்ய, அரசியல மைப்பு சட்டப்பிரிவு 164(4)ஐ அதிகார மூலமாக கொள்ள கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை கவர்னரிடம் சட்ட நிபுணர்கள் தெளிவுபடுத்தி யுள்ளனர்.

இதைத் தொடர்ந்தே எம்.எல்.ஏ. ஆக இல்லாத சசிகலாவை உடனே முதல் வராக பதவி ஏற்க அழைப்பு விடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற உறுதியான முடிவுக்கு கவர்னர் வந்துள் ளார்.

இதற்கிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மீது சுப்ரீம் கோர்ட்டில் சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கு விசாரணைகள் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அந்த தீர்ப்பு வருகிற 14-ந்தேதி (செவ் வாய்க்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலாவுக்கு முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்த பிறகு, 14-ந்தேதி அவருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டால் அது நெருடல்களை ஏற்படுத்தி விடும் என்றும் சட்டநிபுணர்கள் கவர்னரிடம் அறிவுறுத்தி உள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்றால் அவர் தேர்தலிலேயே போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும்.

தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வாய்ப்பே இல்லாத ஒருவர், முதல்- அமைச்சர் பதவியில் இருந்தால் அது அடுத்தடுத்து நெருக்கடிகளுக்கு வழி வகுத்து விடும் என்று கவர்னர் வித்யாசாகர்ராவ் கருதுகிறார். எனவே சொத்துக்குவிப்பு வழக்கில் 14-ந்தேதி தீர்ப்பு வரட்டும். அந்த தீர்ப்பில் சசிகலா நிரபராதி என்று விடுதலை செய்யப்படுகிறாரா? என்று பார்க்கலாம் என்று கவர்னர் வித்யாசாகர்ராவ் காத்திருக்கிறார்.

சட்ட ரீதியாக சசிகலாவுக்கு இனி எந்த பிரச்சினையும் இல்லை. அவர் அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.ஆக முடியும் என்ற நிலை தெளிவான பிறகு அவரை முதல்-அமைச்சராக பதவி ஏற்க வருமாறு அழைப்பு விடுக்கலாம் என்று வித்யாசாகர்ராவ் உறுதியான முடிவுக்கு வந்துள்ளார்.

அடுத்த ஆட்சி அமைவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதற்கு இதுவே முக்கிய காரணமாகும். மத்திய உள்துறையும் இந்த விஷயத்தில் கவர் னர் வித்யாசாகர் ராவ், சட்ட நிபுணர்கள் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப சட்டத்துக்கு உட்பட்டு சரியானபடி செயல்படட்டும் என்று சுதந்திரமும், அதிகாரமும் வழங்கியுள்ளது.

எனவே தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்? என்பது அடுத்த வாரம் வரப்போகும் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பைப் பொருத்தே உள்ளது. அதற்கு நாம் இன்னும் 2 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.