கடலில் கொட்டிய எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஓபிஎஸ். ஓரிரு நாட்களில் எண்ணெய் முழுவதுமாக அகற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
எண்ணூர் துறைமுகம் அருகில் நடைபெற்ற கப்பல்கள் விபத்தில் கச்சா எண்ணெய் கொட்டி பரவியது. இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னையை அடுத்துள்ள எண்ணூர் கடலோரப் பகுதிகளில் எண்ணெய் பரவிக் கிடக்கும் பகுதிகளை ஓபிஎஸ் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
கப்பல்கள் மோதிய விபத்தில் கடலில் கொட்டிய கச்சா எண்ணெய்யை அகற்றும் பணிகளில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் இந்த இடத்திலேயே முகாமிட்டு செய்து வருகின்றனர். 5,700 பேர் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 25 குழுக்களாக பிரிக்கப்பட்டு கச்சா எண்ணெய்யை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இந்தப் பணிகள் நடைபெற்று கடலில் கொட்டிய எண்ணெய் ஓரிரு நாளில் முழுமையாக அகற்றப்படும். பாதிக்கப்பட்ட இடங்களில் பிடிக்கப்பட்ட மீன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த மீன்களில் நச்சுத் தன்மை எதுவும் இல்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கடல் வாழ் உயிரினங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
மீன் பிடி தொழிலும் பாதிக்கப்பட்டு, மீன் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளதால் அது குறித்து ஆலோசனை செய்து, மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். மீனவர்களின் உபகரணங்கள் ஏதாவது சேதம் அடைந்திருந்தால் அவை மதிப்பிடப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும்.
இந்த விபத்துக் குறித்து தெரிய வந்த உடன் அரசு இறங்கி எண்ணெய்யை போர்கால அடிப்படையில் அகற்றி வருகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றிகள் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.