February 19, 2017
பதுங்கி வாழ்கிறேன் : ஆணவ கொலையில் பிழைத்த ஒரு அப்பாவிக் காதலி
ஆணவகொலையில் கணவனைப் பறி கொடுத்துவிட்டு தானும் வெட்டுக் காயத்தில் இருந்து தப்பி இன்று அப்பா, அம்மாவிற்கு பயந்து தலைமறைவாக இருக்கிறார் அந்த அப்பாவிக் காதலி.
கல்லூரி ஆண்டு விழாவுக்காக சங்கருக்கு ஒரு சட்டை வாங்க கடைக்குப் போனோம். கடையில இருந்து வெளியே வந்தப்போ…. இப்போ நினைச்சாலும் மனசும் உடம்பும் நடுங்குது. என் கண் முன்னாடியே சங்கரை துள்ளத் துடிக்க வெட்டினாங்க” – பேச்சுத் தடுமாற, எச்சில் விழுங்கி சமாளித்துத் தொடர்ந்தார்.
”சங்கரை காப்பாத்தப்போன என்னையும் தலையில வெட்டுனாங்க. நான் ‘காப்பாத்துங்க காப்பாதுங்க’னு அழுதப்போ, ரோட்டுல நின்னுட்டு இருந்தவங்க எல்லாருமே வேடிக்கை பார்த்துட்டுதான் இருந்தாங்க.
அவங்க உயிர் பயம் அவங்களுக்குன்னாலும், ஆளுக்கொரு கல்லை எடுத்தாவது வீசியிருக்கலாம்.
மொத்தத்துல, எந்தத் தடையும் இல்லாம எங்க ரெண்டு பேரையும் ரத்தச் சகதியில வீசிட்டு, சாவகாசமா கிளம்பினது அந்தக் கும்பல். சங்கருக்கு உயிர்போக, நான் தலையில் பலத்த காயத்தோட உயிர் பிழைக்கனு… அடுத்து நடந்ததுதான் எல்லாருக்கும் தெரியுமே.
சிகிச்சைக்குப் பிறகு நான் சங்கர் வீட்டில் தங்கியிருந்தேன். சங்கரோடு எல்லாமே முடிஞ்சிட்டதா இருந்த எனக்கு, அந்த நேரத்தில் என்னைப் பார்க்க வந்தவங்க எல்லாம் கொடுத்த ஆறுதலும் தன்னம்பிக்கையும்தான் என்னை மெல்ல அந்தச் சூழல்ல இருந்து வெளியே கொண்டுவந்தது.
குறிப்பா, ‘எவிடன்ஸ்’ கதிர், கார்த்தி, கோயம்புத்தூர், தந்தை பெரியார் திராவிடக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், இளங்கோவன் அண்ணன், கீதா அக்கா, முத்தமிழ் அக்கா உள்ளிட்ட பலர் எனக்கு மனபலம் தந்தாங்க, பண உதவி செஞ்சாங்க.
கவுன்சிலிங் கொடுத்தாங்க. ப்ளஸ் டூ முடிச்சிருந்த என்னை டைப்ரைட்டிங் முடிக்கவெச்சு, அரசுப் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தாங்க. கீதா இளங்கோவன் அக்கா லேப் டாப் வாங்கித் தந்தாங்க.
இப்போ இடைநிலை உதவியாளரா ஒரு அரசு வேலையில் சேர்ந்திருக்கேன். 15 ஆயிரம் சம்பளம் வாங்குறேன். மாதம் ஒரு முறை சங்கர் வீட்டுக்குப் போவேன்.
சங்கர் தம்பிகள் விக்கி, குட்டிக்கு என்னால முடிஞ்ச பண உதவி செய்வேன். ரெண்டு பேரும் தினமும் எங்கிட்ட போன்ல பேசிடுவாங்க.
சங்கரோட அப்பாவும், ‘சாப்பிட்டியாம்மா’னு போன் பேசுவார். இவங்கதான் என் குடும்பம். சில விடுமுறை நாட்களில் கீதா இளங்கோவன் வீட்டுக்குப் போவேன்.
‘எவிடன்ஸ்’ கதிர், கார்த்தி, முத்தமிழ் அக்கானு எல்லோரும் கூடப் பிறந்தவங்க மாதிரி என்னை வழிநடத்திட்டு வர்றாங்க.
இப்போ கரஸ்ல பி.எஸ்சி., ஐடி படிச்சிட்டு இருக்கேன். எம்.எஸ்.டபிள்யூ முடிச்சிட்டு சமூக சேவையாளராகணும்.
நானே சம்பாதிச்சு, சமைச்சு, சாப்பிட்டுனு தனிமை கொல்லுற ஒரு வாழ்க்கை. எந்த ஊருல இருக்கேன்னு இப்பவும் சொல்ல பயமாதான் இருக்கு. ஏதோ பதுங்கு குழியில வாழுற மாதிரி வாழ்ந்துட்டு இருக்கேன்.
அப்படி நான் என்ன தப்பு செஞ்சேன்? மனசுக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணிக்கிறது ஒரு குத்தமா?
கொலை செஞ்சவங்க, கொள்ளையடிக்கிறவங்க எல்லாம் தைரியமா, சுதந்திரமா, சந்தோஷமா வாழுற இந்த சமுதாயத்துல, சங்கருக்கும் எனக்கும் மட்டும் ஏன் இந்த தண்டனை?
யாராச்சும் என்னைக் கண்டுபிடிச்சு இங்க வந்துருவாங்களா, ஏதாச்சும் அசம்பாவிதம் நடந்துருமானு மனசு இன்னும் தவிச்சுட்டேதான் இருக்கு.
நிம்மதியா தூங்கக்கூட முடியல” என்றவருக்கு, கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் போலீஸ் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது.
கௌசல்யா
”அம்மாவோட அம்மா, சொந்தக்காரங்ககிட்ட இருந்தெல்லாம் இன்னும் போன் வந்துட்டேதான் இருக்கு.
என்னை இந்த நிலைக்கு ஆளாக்குனதுக்கு அப்புறமும் எந்த முகத்தை வெச்சுட்டு அவங்களால எங்கிட்ட பேச முடியுதுனு தெரியல.
நான் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுவேன். சிலர் என்கிட்ட, ‘பெத்தவங்கள வெறுக்காத, அவங்கக்கிட்ட பேசு’னு எல்லாம் அறிவுரை சொல்வாங்க.
அவங்களுக்கு நான் எந்த பதிலும் சொல்றதில்ல. மனசுக்குள்ள குமுறினாலும் ஒரு காதுல வாங்கி மறு காதுல விட்டிருவேன்” என்றவர், தன் எதிர்காலம் எதற்கானதாக இருக்க வேண்டும் என்கிற தெளிவுடனும் தீர்க்கத்துடனும் இருக்கிறார்.
”சங்கர் இல்லாத இந்த வாழ்க்கையில நான் எப்படி இருக்கேன்னு எனக்கே சில சமயம் ஆச்சர்யமா, விரக்தியா இருக்கும். ஆனா, நான் கடைசி வரைக்கும் ஆணவக் கொலைக்கு வாழும் சாட்சியா இருந்து, சம்பந்தப்பட்டவங்க மனசாட்சியை உறுத்திட்டே இருப்பேன்.
என்னை இப்படி நிர்கதியா நிறுத்தினது சாதிதான். அந்த சாதி ஒழியணும். அதுக்காகப் போராடுறவங்களோட சேர்ந்து போராடுவேன்.” பரிதாபம்..
பதுங்கி வாழ்கிறேன் : ஆணவ கொலையில் பிழைத்த ஒரு அப்பாவிக் காதலி
Reviewed by மறத்தமிழன்
on
February 19, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 19, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.