Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 3, 2017

சசிகலா குடும்பம் வழக்கில் இருந்து தப்ப முடியாது! மூத்த வழக்கறிஞர்களின் கருத்துக்கள் அடிப்படையிலான சி


ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு முடிவடைந்து தீர்ப்புக்காக எட்டுமாதங்கள் காத்துக்கிடக்கிறது. இடையே ஜெயலலிதா இறந்து இரண்டு மாதங்கள் ஆயிற்று. தீர்ப்புஎந்த ரகமாக இருக்கும் டி.குன்கா பாணியா?குமாரசாமி பாணியா என்று பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஒரு வேலை டி.குன்கா பாணியிலான தீர்ப்பு என்றால், மறைந்த ஜெயலலிதாவை தவிர இவ்வழக்கில் மீதம் உள்ள குற்றவாளிகளான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை கிடைக்குமா அல்லது அந்த வழக்கின் ஒரே பொது ஊழியர் மற்றும் முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்துவிட்டதால், குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் குமாரசாமி பாணியில் விடுதலை செய்யப்படுவார்களா என்று பட்டிமன்றம் நடந்து வருகிறது.
ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்த காலத்தில் ரூ. 66.5 கோடி வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளார் என்று திமுக அரசு வழக்குதொடர்ந்ததில், சென்னை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. 2001ம் ஆண்டு, ஜெயலலிதா மீண்டும் முதல்வரான பிறகு, பெரும்பாலான சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறியதால், தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், இவ்வழக்கை தமிழகத்தை விட்டு மாற்ற வேண்டும் என்று வழக்கு தொடுத்தார்.
உச்சநீதிமன்றம் வழக்கை பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது.பிறகு செப்டம்பர் 2014ல் சிறப்பு நீதிபதி மைக்கேல் டிகுன்கா தனது தீர்ப்பில் லஞ்சஒழிப்பு சட்டம் பிரிவு 13 (1) (இ) மற்றும் 13 (2)ன் கீழ், முதல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 100 கோடி அபராதம் என்று உத்தரவிட்டார்.
கூட்டு சதியில் ஈடுபட்டதற்காக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120 பி யின் கீழ், ஜெயலலிதாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதித்தார். இதர குற்றவாளிகளான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு குற்றவாளிக்கு உதவிபுரிந்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 109ன் கீழ் தலா நான்காண்டு சிறை தண்டனை, தலா பத்து கோடி அபராதமும், கூட்டு சதியில் ஈடுபட்டதற்காக இந்த மூவருக்கும் ஆறு மாத சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
தண்டனையை ஆட்சேபித்து குற்றவாளிகள் செய்த மேல் முறையீட்டின் முடிவில், அனைத்து குற்றவாளிகளையும் விடுவித்து, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை அடுத்தே, இடைத்தேர்தலில் நின்ற ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானார். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசும், தி.மு.க.வும் மேல் முறையீட்டுக்கு சென்றன. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவராய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 2016 ஜுன் 7ம் தேதி, இவ்வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த சூழலில் தான், ஜெயலலிதா இறந்து விட்டதால் சசிகலா உள்ளிட்டோருக்கு தண்டனை கிடைக்குமா கிடைக்காதா என்று விவாதம் நடைபெறுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மீதான விசாரணை நடைபெற்று, தீர்ப்புஒத்திவைக்கப்பட்ட வழக்கு. 2016 ஜுன் 7 அன்றே தீர்ப்பு ஒத்திவைத்துள்ள நிலையில் ஆறு மாதங்கள் கழித்து நடந்த ஜெயலலிதாவின் மரணத்தை கவனத்தில் கொள்ளாமல்தான் உச்சநீதின்றம் தீர்ப்பு வழங்க வேண்டும். மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு விடுதலை கொடுத்தால் பிரச்சனை முடிந்து விடும். மாறாக தண்டனை விதித்தால், ஜெயலலிதாவால் சிறை செல்ல முடியாது என்பதைத் தவிர வழக்கில் எந்த மாற்றமும் நிகழாது.
ஜெயலலிதா இறந்துவிட்டாலும், அவருடைய சொத்துக்களை விற்று, அதில் வரும் பணத்திலிருந்து 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜெயலலிதா இறந்தாலும் இந்த அபராதத்தை செலுத்தியே தீர வேண்டும் என்றே சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கர்நாடக சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, “ஜெயலலிதா இறந்தாலும், சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான வழக்கு உயிரோடுதான் இருக்கிறது. லஞ்ச ஒழிப்பு சட்டம் தவிர, கூட்டுச் சதியில் ஈடுபட்டது, மற்றும் பொது ஊழியர் சொத்து சேர்க்க உடந்தையாக இருந்தது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை தனியானவை. ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு மட்டுமே ரத்து செய்யப்படும்.
வாத பிரதி வாதங்கள் முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
எனவே தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதை இந்த கட்டுரையை வாசித்த வாசகர்கள் வசமே ஒப்படைக்கிறோம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.