February 19, 2017
பாவனாவை கடத்திய 6 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு; கோவையில் பதுங்கிய இருவர் கைது
மலையாளம், தமிழ் உள்பட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளவர் பிரபல நடிகை பாவனா. தற்போது நடிகை பாவனா ‘ஹனிபீ-2’ என்ற புதிய மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு திருச்சூரில் உள்ள தனது வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அந்த காரை டிரைவர் மார்ட்டின் (வயது 24) என்பவர் ஓட்டிச் சென்றார். இரவு 9 மணியளவில் பாவனா சென்ற கார், கொச்சி அருகே அங்கமாளி அத்தானி என்ற இடத்தில் சென்றபோது, அவரது காரை ஒரு டெம்போ டிராவலர் வேன் பின் தொடர்ந்து வந்தது. திடீரென்று அந்த வேன் வேகமாக வந்து பாவனாவின் காரின் பின் பகுதியில் இடித்தது.
இதனால் டிரைவர் மார்ட்டின் காரை நிறுத்தினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அந்த வேனில் வந்த 5 பேர் கும்பல் நடிகை பாவனாவின் காருக்குள் அத்துமீறி ஏறியது. டிரைவர் மார்ட்டினை மிரட்டி காரை தொடர்ந்து ஓட்டச் செய்தனர். இதைப்பார்த்ததும், நடிகை பாவனா அதிர்ச்சியில் உறைந்து போனார். அவரை அந்த கும்பல் ஓடும் காரில் பாலியல் தொல்லை கொடுத்து கொடுமைபடுத்தியது. மேலும் தங்களது செயல்களை அவர்கள் செல்போனில் படம் பிடித்தனர். நடிகை பாவனாவை ஆபாசமாக வீடியோவும் எடுத்துக் கொண்டனர்.
அதன் பிறகு அந்த கும்பல் காரை நிறுத்தி கீழே இறங்கியது. அந்த காரை பின் தொடர்ந்து வந்த தங்கள் வேனில் ஏறி தப்பிச் சென்றது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட நடிகை பாவனா அந்த பகுதியில் உள்ள பிரபல சினிமா டைரக்டரும், தனது உறவினருமான லாலின் வீட்டிற்கு டிரைவர் மார்ட்டினுடன் காரில் சென்றார். அங்கு அவரிடம் தனக்கு நடந்த கொடூர சம்பவம் பற்றி கூறினார். அவர் உடனே போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். கொச்சி போலீஸ் கமிஷனர் தினேஷ் மற்றும் களமச்சேரி போலீசார், டைரக்டர் லாலின் வீட்டிற்கு சென்று நடிகை பாவனாவிடம் விசாரணை நடத்தினார்கள்.
மேலும் களமச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நடிகை பாவனாவை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. அது தொடர்பான அறிக்கையும் களமச்சேரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சம்பவங்கள் பற்றி நடிகை பாவனாவிடம் விசாரணை நடத்திய உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஓடும் காரில் நடிகை பாவனா பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் சுனில் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டுள்ளது.
டிரைவர் மார்ட்டினும் அவர்களது செயல்களுக்கு உடந்தையாக இருந்துள்ளதால் அவரும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிதான்.
சுனில் மீது போலீசில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இதுபற்றி தெரிய வந்ததால் அவரை நடிகை பாவனா டிரைவர் பணியில் இருந்து நீக்கி உள்ளார். அதன் பிறகு மார்ட்டின் டிரைவராக சேர்ந்துள்ளார். மார்ட்டினை டிரைவராக்க சிபாரிசு செய்ததும் சுனில்தான். சம்பவம் நடந்த அன்று மார்ட்டினும், சுனிலும் தங்கள் செல்போன் மூலம் 40 தடவை பேசி உள்ளனர். மேலும் அவர்கள் ஏராளமான எஸ்.எம்.எஸ். தகவல்களையும் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
அந்த தகவல்களில் உள்ளவை பற்றி விசாரணை நடந்து வருகிறது. முதல் கட்டமாக டிரைவர் மார்ட்டின் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுனில் உள்பட மற்ற 5 பேர் பற்றி முக்கிய துப்பு கிடைத்துள்ளது. அவர்கள், விரைவில் கைது செய்யப்படு வார்கள். இந்த சம்பவம் தொடர்பாக கற்பழிப்பு, கொலை மிரட்டல், சைபர் கிரைம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகை பாவனா, தன்னை டிரைவர் வேலையில் இருந்து நீக்கியதால் அவரை பழி வாங்குவதற்காக சுனில் தனது கூட்டாளிகளுடன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சுனில் கூட்டாளிகள் ஆலப்புழா, அம்பலபுழாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் பதுங்கி இருந்த அவர்களை கேரள போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். ஓடும்காரில் நடிகை பாவனாவுக்கு நடந்த சம்பவம் கேரள திரையுலகில் மட்டும் அல்லாமல் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாவனாவை கடத்திய 6 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு; கோவையில் பதுங்கிய இருவர் கைது
Reviewed by மறத்தமிழன்
on
February 19, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 19, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.