Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 3, 2017

"அ.தி.மு.க வெற்றிடமாகத்தான் இருக்கிறது!" கலங்கும் லதா


ஜெயலலிதாவுக்குப் பிறகு எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்தவர், ஜெயலலிதாவுக்கு முன்பே அ.தி.மு.க-வுக்காக நிதி திரட்டி தந்தவர், ‘அ.தி.மு.க-வுக்கு  வரவேண்டும்’ என்று எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்டவர் நடிகை லதா!

‘எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியை இனி வருபவர்கள் கட்டிக் காக்க வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டுள்ள லதாவிடம் அ.தி.மு.க-வின் நிகழ்காலம், எதிர்காலம் குறித்துப் பேசியபோது...

‘‘எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க. தொடங்கப்பட்டபோது அந்தக் கட்சிக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி வசூல் செய்துகொடுத்த நீங்கள், அந்தக் கட்சியில் இணைந்து செயல்படாத காரணம் என்ன?’’

“என்னை திரையுலகில் அறிமுகம் செய்தவர் எம்.ஜி.ஆர்-தான். அவர் அ.தி.மு.க ஆரம்பித்தபோது, அந்த கட்சிக்காக பல மாவட்டங்களில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தி நிதி வசூல் செய்து கொடுத்தேன். அதன் பிறகு திரைப்படங்களில் ஏராளமான வாய்ப்புகள் வந்ததால் அரசியலில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. அவரே இரண்டு முறை ‘கட்சிக்குள் வரவேண்டும்’ என்றுகேட்டார். அந்த நேரத்தில் என்னால் முடியவில்லை. அவர் மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியில் குழப்பங்கள் ஏற்பட்டு இருந்தது. அதனால் நான் அமைதியாக இருந்தேன். திருநாவுக்கரசர் கட்சி ஆரம்பிக்கும்போது என்னை வந்து சந்தித்து அவர் கட்சிக்கு அழைத்ததால் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வின் மூலம் என் அரசியல் பயணம் ஆரம்பித்தது.”

‘‘எம்.ஜி.ஆரை போன்றே அ.தி.மு.க-வை ஜெயலலிதாவும் வழிநடத்திச் சென்றாரா?’’

“எம்.ஜி.ஆருக்குப் பிறகு அந்தக் கட்சி கலகலத்து போய்விடும் நிலை ஏற்பட்டது. ஆனால், அதை சீர்படுத்தி தூக்கி நிறுத்தி கட்சியை ஒரு ராணுவ மிடுக்காக நடத்தியவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கு இருந்த மக்கள் சக்தி ஜெயலலிதாவுக்கும் இருந்தது. அதனால்தான் தொடர்ச்சியாக இரண்டு முறை முதல்வராக வரமுடிந்தது. கட்சியை நல்ல நிலைக்கு ஜெயலலிதா கொண்டு வந்து விட்டுள்ளார் என்பதை மறுக்கமுடியாது. எம்.ஜி.ஆரை கட்சியினர் எளிதாக சந்திக்க முடிந்தது. ஜெயலலிதா அதில் கொஞ்சம் மாறுபட்டார். கடைசிவரை இரும்பு மனுஷியாகவே தன்னைக் காட்டிக்கொண்டார். அப்படி இருந்தால்தான் கட்சியை கட்டுக்கோப்பாக நடத்த முடியும் என்று அவர் நினைத்து இருக்கலாம்.”

‘‘அ.தி.மு.க-வின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?’’

“அதுபற்றி இப்போது சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி. அந்த கட்சியின் செல்வாக்கு குலைந்துபோகாமல் இருக்கும் வகையில், அந்தக் கட்சி நிர்வாகிகள் நல்ல முடிவை எடுக்க வேண்டும். என்னுடைய ஆசான் எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி, அந்தப் புகழை இனி வருபவர்கள் பாழாக்காமல், அவர் இந்தக் கட்சியை வழிநடத்தியது போன்று சிறப்பாக வழிநடத்த வேண்டும்”.



‘‘நல்ல முடிவு என்றால் எது மாதிரியான முடிவாக இருக்கவேண்டும்?’’

‘‘அதை நான் சொல்ல முடியாது. அக்கட்சியின் நிர்வாகிகள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவை மக்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை அந்தக் கட்சியினர் புரிந்துகொள்ளவேண்டும். மக்கள் ஏற்றுக்கொள்ளாத முடிவை கட்சியினர் எடுக்கக்கூடாது.”

‘‘சசிகலா பொதுச்செயலாளராக கட்சியை நடத்தும் திறன் அவரிடம் உள்ளதா?”

‘‘யாருடைய தகுதியையும் நாம் குறைவாக எடைபோட முடியாது. ஜெயலலிதாவோடு பல ஆண்டுகள் இருந்தவர். கட்சியை நடத்தும் முறை குறித்து பார்த்திருப்பார். சசிகலாவைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஒரு சில முறை பார்த்துள்ளேன். அவ்வளவுதான். ஆனால், அவர் செயல்பாடுகளை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அவரும், ‘மக்களுக்காக உழைக்கவேண்டும்’ என்ற எண்ணத்தில் செயல்பட வேண்டும். அவரது குடும்பத்தினர் தலையீடுகளை பொருட்படுத்தாமல் இவர் கட்சிப் பணியாற்றினால் சிறப்பாக இருக்கும்.’’

‘‘தமிழக அரசியல் நிலை இப்போது எப்படி உள்ளது?’’

‘‘மிகவும் குழப்பமாக உள்ளது. அந்தக் குழப்பம் தீரவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். இந்த ஆட்சி நான்கு ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறவேண்டும். ஜெயலிலதா கட்டுக்கோப்பாக ஆட்சியை நடத்தியதுபோல் இவர்களும் நடத்தவேண்டும்.’’

‘‘ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க-வை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க வெற்றிடமாகத்தான் இருக்கிறது. அதை இனி வருபவர்கள் நிரப்புவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கமுடியும்.’’

‘‘அ.தி.மு.க-வில் இணைந்து செயல்படும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?’’

‘‘அதற்கு காலம்தான் பதில் சொல்லும். அரசியல் எனக்கு பிடிக்காதது அல்ல. ஏற்கெனவே அதில் நான் பயணப்பட்டிருக்கிறேன். இப்போது கொஞ்சம் விலகி இருக்கிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைச் சொல்லமுடியாது.’’ 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.