Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 10, 2017

ரஜினியை நம்பும் சசிகலா! கார்டனின் 'ஆல் இன் ஆல்'


கார்டனில் ஆதிக்கம் செலுத்துவதில் நாகர்கோவிலைச் சேர்ந்த ரஜினி என்ற பெண் முக்கியமானவர் என்று சொல்லத் தொடங்கி இருக்கின்றனர் கட்சியினர். அவரை முழுமையாக நம்பிய சசிகலா, சில அமைச்சர்களை ரகசியமாக கண்காணிக்கும் பொறுப்பை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா, மறைந்து ஒரு மாதம் கடந்து விட்டது. அதற்குள் அ.தி.மு.க.வில் பல மாற்றங்கள். அ.தி.மு.க.வின் தலைமை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கையில் உள்ளது. அடுத்து சசிகலா, முதல்வராவார் என்ற எதிர்ப்பு நிலவுகிறது. ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா என்பது எல்லோருக்குத் தெரியும். தற்போது, சசிகலாவுக்கு உறுதுணையாக இருப்பவர்களில் முக்கியமானவராக நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பெண் கார்டனில் வலம் வருவதாக உள்விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர்.

யார் அந்த நாகர்கோவில் பெண்?

ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இயற்கை மீதும் செடிகள் மீதும் அளவில்லாத பிரியம் உண்டு. இதனால், போயஸ் கார்டன் வீட்டிலேயே கார்டன் உருவாக்கப்பட்டது. அதில் தினமும் ஜெயலலிதாவும் சசிகலாவும் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். அதுபோல சிறுதாவூர் பங்களாவுக்குச் செல்லும்போதும் அங்கேயும் நடைபயிற்சி மேற்கொள்வதுண்டு. அப்போது ஒருநாள், ஜெயலலிதா, ஒரு மலர் குறித்து சசிகலாவிடம் கேட்டுள்ளார். அந்த மலரின் அழகு ஜெயலலிதாவை வெகுவாக கவர்ந்தது. அந்த மலர் குறித்த விவரமும் சசிகலாவுக்கும் தெரியவில்லை. அடுத்து கார்டனில் உள்ள சிலரிடமும் அந்த கேள்வியை கேட்க அவர்களும் விழிபிதுங்கி உள்ளனர்.
இதையடுத்து ஜெயலலிதாவின் மலர் குறித்த ஐயத்தை விளக்க உடனடியாக அங்கு அழைக்கப்பட்டவர் ரஜினி. இவர், நாகர்கோவில் தோவாளையைச் சேர்ந்தவர். வேளாண்மைத் துறையில் பட்டம் பெற்றவர் என்பதால் ஜெயலலிதாவின் மலர் சந்தேகத்தை ஆங்கிலத்திலேயே விளக்கியுள்ளார் ரஜினி. இதன்பிறகு ரஜினிக்கு, தோட்டங்களை மேற்பார்வையிடும் பொறுப்பு அங்கு வழங்கப்பட்டுள்ளது. இவரது கணவர் ரவீந்திரன், அ.தி.மு.க.வின் தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். இதனால் கார்டனுக்குள் எளிதில் நுழைய முடிந்தது.

ஜெயலலிதாவுடன் நெருக்கம்

போயஸ் கார்டனுக்குள் சென்ற ரஜினி, ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான பூங்கொத்தை கொடுப்பது வழக்கம். அதுவே அவருக்கு ரஜினியைப் பிடித்து போய்விட்டது. ஜெயலலிதாவை விட சசிகலாவிடமும் ரஜினி, விசுவாசமாக இருந்துள்ளார். தற்போது ரஜினியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் சசிகலாவை சந்தித்த அரசியல் தலைவர்கள், வி.வி.ஐ.பிக்கள், கட்சியினருக்கு வழியை ஏற்படுத்தியவர் ரஜினி. சசிகலா, ரஜினியை அதிகம் நம்பியதால் அவருக்கு இப்போது கார்டனில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதன்விளைவு, ரஜினியின் தயவைப் பெற கட்சியினர் பலரிடம் போட்டோ போட்டி நிலவுதாம். சமீபத்தில் நாஞ்சில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் கட்சியிலிருந்து விலகுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. உடனடியாக அவரை  சந்தித்து சமரசப்படுத்தி கார்டனுக்கு அழைத்து வந்ததில் ரஜினிக்கு முக்கியப் பங்கு உண்டு. மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை கார்டனுக்கு அழைத்து வந்ததிலும் ரஜினியின் பங்கு இருக்கிறது.

கார்டன் டூ அரசியல்

சசிகலாவும் ரஜினியும் நீண்ட நேரம் பேசிக் கொள்வதாக கார்டன் வட்டார நிர்வாகிகள் சொல்கின்றனர். அதில் அரசியல் பேச்சும் இடம் பெறுகிறது. கார்டனில் இருந்தபடியே அரசியல் நிலவரங்களை கண்காணிக்கும் பொறுப்பும் ரஜினி வசம் கொடுக்கப்பட்டுள்ளதாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி, சிபாரிசு செய்த சிலருக்கு எம்.எல்.ஏ சீட்கள் கொடுக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது. ரஜினியின் கை ஓங்குவதை கார்டனில் உள்ள சிலர் விரும்பவில்லையாம். ரஜினி, சசிகலாவின் நட்பில் பிளவு ஏற்படுத்தும் முயற்சிகளும் நடக்கின்றன. ரஜினியை கார்டனிலிருந்தும், சசிகலாவிடமிருந்தும் பிரிக்க சில வியூகங்களை ஒரு தரப்பு செய்து வருகிறதாம். அதிலிருந்து ஒவ்வொரு முறையும் ரஜினி தரப்பு தப்பித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ரஜினியின் மீது புகார் பட்டியலை மன்னார்குடி தரப்பு சசிகலாவிடம் சமீபத்தில் கொடுத்துள்ளதாம். அதில் பால் கலப்பட ஊழலில் ரஜினியின் தலையீடு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினி மீது சசிகலா தரப்பு நம்பிக்கை வைத்துள்ளதால் எந்த குற்றச்சாட்டுக்களும் எடுபடவில்லை. வழக்கம் போல கார்டனுக்குள் காலையில் வந்து மாலையில் வீடு திரும்புகிறார் ரஜினி. தற்போது அ.தி.மு.க.விலிருந்து விலகுவதாக முடிவெடுத்த சில அமைச்சர்களையும், முக்கிய நிர்வாகிகளையும் ரகசியமாக கண்காணிக்கும் பொறுப்பு ரஜினியிடம் சசிகலா கொடுத்துள்ளாராம். அந்த அசைமெண்டில் பிஸியாக இருக்கிறார் ரஜினி. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.