Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 4, 2017

பார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே வாகன பதிவு திட்டம்: எதிர்கேள்வி எழுப்பும் பொதுமக்கள்


இந்தியாவில் பார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படும் என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு அமல்படுத்துவது வரவேற்கத்தக்க ஒன்றுதான் என்று கருத்து தெரிவித்துள்ள பொதுமக்கள் பலர், அதேநேரம் அதற்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கித் தருவது அரசின் கடமை இல்லையா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

மக்கள் தொகை பெருக்கம் போலவே இந்தியாவில் வாகன எண்ணிக்கையும் ஆண்டுதோறும் பெருகி வருகிறது. இதனால் சாலைகளில் மூச்சு விட முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் வாகன நெரிசலில் சிக்கி மக்கள் படும் அவதி சொல்லி மாளாது.

2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி டெல்லியில் 73 லட்சம் வாகனங்களும், ஹைதரா பாத்தில் 34 லட்சம் வாகனங்களும், புனேயில் 27.6 லட்சம் வாகனங்களும், மும்பையில் 20 லட்சம் வாகனங்களும், கொல்கத்தாவில் 5 லட்சம் வாகனங்களும் இயக்கத்தில் உள்ளன.

ஆனால் வாகன அடர்த்தியில் டெல்லி கடைசி இடத்தில் உள்ளது. சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் ஒரு கி.மீ சாலையில் 2 ஆயிரத்து 93 வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 2 கோடியே 34 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 85 லட்சம்.

இதேபோல ஏப்ரல் 2015 முதல் மார்ச் 2016 வரையிலான காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பயணியர் வாகனம் 27.9 லட்சம், சரக்கு வாகனம் 6.9 லட்சம், இருசக்கர வாகனம் ஒரு கோடியே 66 லட்சம், மூன்று சக்கர வாகனம் 5.4 லட்சம் என மொத்தம் 2 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தற்போது 2.35 கோடி வாகனங்கள் உள்ளன. இதில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 2 கோடியை நெருங்கியுள்ளது. தினமும் 6 ஆயிரத்து 250 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 675 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன.

சென்னையில் மட்டுமே 40 லட்சம் இருசக்கர வாகனங்களும், 8 லட்சம் கார்களும், 80 ஆயிரம் ஆட்டோக்களும் இயக்கத்தில் உள்ளதாக சாலை போக்குவரத்துத் துறையினர் கணக்கிட்டுள்ளனர். அதாவது சென்னையில் 2 பேருக்கு ஒரு வாகனம் உள்ளது. வரும் 2020-ல் தமிழகத்தில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை 5.65 கோடியைத் தொடும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

சாலைக் கட்டமைப்பில் இந்தியா உலகிலேயே 2-வது இடத்தில் இருந்தாலும், நாளுக்கு நாள் பெருகும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடியும், இறப்பு வீதமும் அதிகரித்து வருகிறது. சாலை விபத்து மூலமாக ஒவ்வொரு 4 நிமிடத்துக்கும் ஒரு இறப்பு நிகழ்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, “நகர்ப்புறங்களில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக, வாகனம் நிறுத்துவதற்கு போதிய இடம் இருப்பதை உறுதி செய்து சான்றிதழ் வழங்கினால் மட்டுமே புதிய வாகனங்களை பதிவு செய்யும், புதிய விதிமுறையை விரைவில் மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்து சாலைப் போக்குவரத்து அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்று குறிப்பிட்டார். மத்திய அரசின் இந்த புதிய திட்டம் பொதுமக்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய  நிருபர்கள் குழு களமிறங்கியது. இத்திட்டம் குறித்த பொதுமக்கள் சிலரின் கருத்து:

உண்மையிலேயே இந்த திட்டம் வரவேற்கத்தக்க ஒன்றுதான். சென்னையில் திருவல்லிக்கேணி, பாரிமுனை, தி.நகர் போன்ற நெரிசலான பகுதிகளின் தெருக்களில் நடமாட முடியாத அளவுக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதேநேரம் அதற்கான கட்டமைப்பையும், வசதிகளையும் உருவாக்கி கொடுக்க வேண்டியதும் அரசின் கடமைதானே.

வாகன தேவை என்பது சராசரி மனிதர்களுக்கும் இன்றியமையாத ஒன்று. சென்னையில் சொந்த வீடு வைத்திருக்கும் பலருக்கு பார்க்கிங் வசதி கிடையாது. இதனால் சாலைகளில்தான் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். எனினும், வாடகை வீடுகளில் வசிப்பவர்களால் வாகனம் வாங்க முடியாது. ஆனால், காற்று மாசுபடுவதை தடுக்க முடியும்.

கே.வாசுகி, குடும்பத்தலைவி, ஆவடி, சென்னை

இத்திட்டத்தை கண்டிப்பாக வரவேற்க வேண்டும். இன்று பலர் கடன் வாங்கி கார், இருசக்கர வாகனங்களை வாங்குகின்றனர். வீட்டில் பார்க்கிங் வசதி இல்லாமல் சாலையில் நிறுத்துகின்றனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் நிகழ்கின்றன. வீட்டில் 4 பேர் இருந்தால் தனித்தனியாக 4 கார்களை வாங்குகின்றனர். இதைக் கட்டுப்படுத்தலாம்.

இன்றைய நவீன வாழ்க்கைக்கு வாகனங்கள் அத்தியாவசிய தேவையாகி விட்டதால், வாகன பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு கட்டுப்பாடு விதிப்பதற்கு முன்பாக, அவற்றை முறையாக பார்க்கிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகள் குறித்தும், இலவச பார்க்கிங் ஸ்டாண்டுகள் குறித்தும் அரசு யோசிக்க வேண்டும்.

வெங்கடேசன், புதுச்சேரி

இந்த திட்டத்தை அமல்படுத்துவது எளிதான விஷயம் அல்ல. தொடக்கம் முதலே சரியான திட்டமிடல் இல்லை. நகரமைப்பு அனுமதி பெறாமலேயே பலர் வீடுகள் கட்டுகின்றனர். சிறுசிறு இடங்களில் பார்க்கிங் வசதி அமைப்பது என்பது முடியாத ஒன்று. சரியான திட்டமிடலுடன் செயல்படுத்த வேண்டும். அடிப்படையில் இருந்தே சரி செய்ய வேண்டும்.

திடீரென புதிய விதியை அமல்படுத்தினால் செயல்படுத்துவது கடினம். தற்போது 60 சதவீதம் பேர் வாடகை வீடுகளில் தான் வசிக்கின்றனர். பலர் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கின்றனர். எனவே இந்த விஷயத்தில் பல்வேறு மாற்றங்களையும், கடும் நடவடிக்கையையும் கொண்டு வர வேண்டும்.

ஷியாமலா தேவி, முத்தியால்பேட், புதுச்சேரி

இத்திட்டம் இனிவரும் காலத்துக்கு வேண்டுமானால் பயனுள்ளதாக அமையலாம். இத்திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அமல்படுத்தி இருக்க வேண்டும். தற்போது பெரும்பாலானோர் பார்க்கிங் வசதி இல்லாமலேயே குடியிருப்புகள், கட்டிடங்களை கட்டியுள்ளனர். பல இடங்கள் நெருக்கடி மிகுந்தவையாக மாறியுள்ளன. இந்த திட்டம் முழுமையாக செயல்வடிவத்துக்கு வருமா? என்பது பின்னர்தான் தெரியவரும். சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் நேர்மையுடனும், விழிப்புடனும் செயல்பட்டால் ஓரளவு திட்டத்தை நிறைவேற்ற ஏதுவாக அமையலாம்.

கே. பத்மநாபன், முன்னாள் தலைவர், சேம்பர் ஆப் காமர்ஸ், தஞ்சாவூர்

இந்த திட்டம் தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் என்றே கருதுகிறோம். கார் வாங்க நினைப்பவர்களுக்கு பெரும் அடியாக உள்ளது. அதேநேரம் வாகனங்களை வீடுகளுக்கு முன்பு நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பதை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் நகரங்களில் வங்கி உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் எல்லாம், சட்டத்தை மதிக்காமல் பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டிடங்களை கட்டியுள்ளதால், அங்கு செல்பவர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். நகர்ப்புறங்களில் வாகனங்கள் வைத்திருப்போருக்கு வாகனங்களை நிறுத்த பொதுவான இடம் ஒன்றை தேர்வு செய்து வழங்கினால் வரவேற்கக் கூடியதாக இருக்கும்.

ஜெயந்தி ராணி, வழக்கறிஞர், திருச்சி

இந்த திட்டம் மக்களின் அடிப்படை வாழும் உரிமையை பறிக்கும் செயலாகவே அமையும். ஒவ்வொருவரும் சம்பாதிப்பது தாங்களும், தங்களது குடும்பத்தாரும் வசதி வாய்ப்புடன் வாழ்வதற்காகத்தான். ஒருவர் ஒரு பொருளை வாங்குகிறார் என்றால், அதை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது அவருக்கு தெரியும்.

அரசு அலுவலகங்களிலோ, வணிக வளாகங்களிலோ, கடைத் தெருக்களிலோ வாகன நிறுத்துமிடங்கள் போதுமான அளவுக்கு இல்லாத நிலையில், தனி நபர் மீது இத்தகைய சட்டங்களை திணிப்பது எந்த வகையிலும் பிரச்சினைக்கு தீர்வாகாது. இதுபோன்ற தேவையற்ற சட்டங்கள் போடுவதை விடுத்து பொதுப் பயன்பாட்டு இடங்களில் வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசின் இந்த திட்டம் மக்களின் சுதந்திரத்தின் மீது விடுக்கப்படும் அடக்குமுறையாகும்.

டி. வினோதா, பொறியாளர், புதுக்கோட்டை

குறைந்தபட்சம் 3 சென்ட் அளவிலான வீட்டுமனையில் வீடு கட்டப்படுகிறது. இந்த அளவில் கட்டப்படும் வீட்டில் ஒரு குடும்பத்தினர் வசிப்பதற்கு தேவையான வசதிகளைத் தான் ஏற்படுத்திக் கொள்ள முடியும். தற்போது நடுத்தர குடும்பத்தினருக்கும் கார் அவசியத் தேவையாக உள்ளது.

காரை நிறுத்துவதற்கு இடம் தனியாக ஒதுக்க வேண்டுமென்றால் அந்தக் காருக்கு செலவிட வேண்டிய தொகையைவிட இடத்துக்கு கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும். அதிலும், நகர்புறங்களில் இடம் வாங்கி வீடு கட்டுவோராக இருந்தால் செலவு இன்னும் இருமடங்காகும். எனவே இந்த விதிமுறை தேவையற்றது.

மாயராஜ், ஓட்டுநர் பயிற்சி பள்ளி, மதுரை

கோவை மாநகராட்சியில் இத்திட்டம் ஏற்கெனவே அமலில் இருந்து வருகிறது. அங்கு கட்டிட வரைபட அனுமதி பெறும்போது வாகனம் நிறுத்த இடவசதி இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இப்போது வாகனம் வாங்குவ தற்கு போட்டி போட்டு கடன் வழங்குகின்றனர். இதனால் நிறுத்துமிட வசதியில்லாத நிலையில் பலர் வாகனங்களை வாங்கி தெருவில், சாலை யோரத்தில் நிறுத்துகின்றனர். இதனால் போக்கு வரத்து நெரிசல், திருட்டுகள் நிகழ்கின்றன. இத்திட்டம் வரவேற்புக்குரியது. அதே நேரத்தில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த உரிய வாய்ப்புகள் வழங்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது.

பி.கார்த்திகைராணி, ஏபிஆர் நகர், திருமோகூர், மதுரை

இத்திட்டத்தால் ஏழைகள், நடுத்தர மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். 50% பேர் வசதிக்காகவும், 50% பேர் வாழ்வாதாரத்துக்காகவும் வாகனங்கள் வாங்குகின்றனர். பிழைப்புக்காக வாகனங்கள் வாங்குவோரை, நிறுத்துமிட வசதி இல்லை என தடுக்கக்கூடாது. பஸ் வசதியில்லாத கிராமங்களில், வாகனங்களே மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கின்றன. நெருக்கடியான இடவசதியுள்ள பகுதிகளில் பார்க்கிங் வசதியுடன் வீடுகள் கட்டுவது எளிதானதல்ல.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.