January 28, 2017
ரூபல்லா தடுப்பூசி: வாட்ஸ்அப்பில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் - விஜயபாஸ்கர்
தட்டம்மை -ரூபல்லா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
ரூபெல்லா தடுப்பூசி குறித்து, வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தட்டம்மை நோய்க்கு ரூபெல்லா எனும் தடுப்பூசி இதுநாள் வரை தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு போடப்பட்டு வருகிறது. இந்த ஊசி ஒன்றின் விலை 900 ரூபாய் வரை மருந்தகங்களில் விற்பனையாகிறது.
இந்த நிலையில் தட்டம்மை நோய்க்கான ரூபெல்லா தடுப்பூசியை தமிழக குழந்தைகளுக்கு இலவசமாக போடுவதற்கு உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அந்த திட்டத்தின் படி வரும் பிப்ரவரி 6ந் தேதி முதல் தமிழகத்தில் முகாம்கள் மூலம் தட்டம்மைக்கான ரூபெல்லா தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது.
இந்த நிலையில் இந்த ரூபெல்லா தடுப்பூசியால் குழந்தைகளுக்கு பக்கவிளைவுகள் ஏற்படும் என்றும், எனவே அந்த ஊசியை இலவசமாக போட்டுக் கொள்ள வேண்டாம் என்றும் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து தட்டம்மை -ரூபல்லா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
ஒன்பது மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயது வரை உள்ள அனைவருக்கும் தட்டம்மை -ரூபல்லா என்ற தடுப்பூசி வழங்கும் திட்டத்தில், முதல் கட்டத்திலேயே தமிழகமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தட்டம்மை ரூபல்லா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வழக்கமாக பிறந்து 10 மாதம் முதல் 12 மாதங்கள் வரை ஆன குழந்தைகளுக்கு முதல் தவணையும், 16 மாதம் முதல் 24 மாத வரையான குழந்தைகளுக்கு 2 ஆம் தவணையும் தட்டம்மை தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தத் தடுப்பூசி, தட்டம்மை மற்றும் ரூபல்லாவை கட்டுப்படுத்த வழங்கப்படும்.
ஏற்கெனவே தட்டம்மை தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தாலும் இத்திட்டத்தின்கீழ் 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.
அங்கன்வாடி மையங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்தத் தடுப்பூசி வழங்கப்படும். மலைப் பகுதிகள், மாநகர குடிசைப் பகுதிகள், கட்டடப் பணிபுரியும் பிற மாநில மக்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு நடமாடும் மருத்துவக் குழுவின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்தத் தடுப்பூசி குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமான தடுப்பூசிகளைப் போன்றே இதுவும் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் பயப்பட வேண்டாம். பெற்றோர், ஆசிரியர்களுக்கு இந்தத் தடுப்பூசி குறித்த கையேடு வழங்கப்படும்.
தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் இந்த தடுப்பூசி குறித்து யாரேனும் தவறான தகவல் பரப்பினால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் விஜயபாஸ்கர்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலளார் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்கக ஆணையர் மோகன் பியாரே உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ரூபல்லா தடுப்பூசி: வாட்ஸ்அப்பில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் - விஜயபாஸ்கர்
Reviewed by மறத்தமிழன்
on
January 28, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.