January 18, 2017
இந்த கொடூரமெல்லாம் பீட்டாவுக்கு தெரியவில்லையா?
கேரளாவுக்கு தினமும் 34,000 மாடுகள் இறைச்சிக்காக தமிழகம் வழியாக லாரிகளில் கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கொடூர நிகழ்வுகள் எல்லாம் பீட்டாவுக்கு தெரியவில்லையா என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்குத் தடை
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மதுரை, சென்னை, கோவை ஆகிய இடங்களில் கல்லூரி மாணவர்களும், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும் விடிய, விடிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடையை மீறி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்கள் இந்த ஆண்டு அதிகமாகி உள்ள நிலையில் தமிழக அரசும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான நடவடிக்கையில் செயல்பட முடிவு செய்துள்ளது. போராட்டக்குழுவை சந்தித்த அமைச்சர்கள் ஜெயகுமார், மாஃபா.பாண்டியராஜன் ஆகியோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநில அரசும் செயல்படும் என்று கூறியுள்ளனர். இருப்பினும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
ஆதரவாளர்களின் குரல்
இந்நிலையில் ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகச் சொல்லும் பீட்டா போன்ற விலங்குகள் நல அமைப்புகளிடம் சரமாரியான கேள்விகளை கேட்டுள்ளனர் போராட்டக்குழுவினர். இதுகுறித்து நம்மிடம் பேசிய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், "ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகவே நீதிமன்றத்தில் பீட்டா போன்ற விலங்கு அமைப்புகள் தங்களது வாதத்தை எடுத்து வைத்துள்ளது. இதனால் நீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் உரிமை. இது நம்முடைய கலாசாரம். அதில் யாரும் தலையிடக்கூடாது. ஜல்லிக்கட்டு ரகசியமாக நடைபெறவில்லை. இதனால் அதில் எந்த காளைகளும் துன்புறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்குட்பட்டு இந்த விளையாட்டு நடத்தப்பட்டு வந்தது. காளைகள் துன்புறுத்துவதாகச் சொல்லும் பீட்டா போன்ற விலங்குகள் நலவாரியம், கொஞ்சம் ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி மாட்டு சந்தைக்குச் சென்றால் மாடுகள் எந்தளவுக்கு துன்புறுத்தப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
மாஃபியா கும்பல்
கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து லாரிகளில் மாடுகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாஃபியா கும்பல் மூலம் சித்ரவதைக்குள்ளாகும் மாடுகள் இறைச்சிக்காக கேரளாவில் கொல்லப்படுகின்றன. மாடுகள் கேரளாவுக்கு கடத்தப்படுவதன் மூலம் இந்த கும்பலுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறுகிறது. கோடிகள் கொட்டுவதால் இந்த தொழிலில் பல முக்கிய புள்ளிகள் ஈடுபட்டு வருகின்றன. லாரிகளில் விதிமுறைகளை மீறி ஏராளமான மாடுகள் ஏற்றப்படுகின்றன. பல மணி நேரம் பயணம் என்பதால் மாடுகள் நிற்க கூட இடமில்லாமல் மாஃபியா கும்பலால் துன்புறுத்தப்படுகின்றன.
இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படும் போது அந்த மாடுகளின் கண்களில் மிளகாய் வைக்கப்படுவது வேதனையின் கொடூரம். இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கின்றன விலங்குகளுக்காக போராடும் பெரும்பாலான அமைப்புகள். ஆனால் ஜல்லிக்கட்டில் மட்டும் இந்த அமைப்புகள் போர்க்கொடி தூக்குவதில் சில முக்கிய காரணங்கள் உள்ளன" என்றனர்.
தினமும் 34,000 மாடுகள்
இதுகுறித்து 'பிப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்பு இறைச்சிக்காக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் மாடுகளுக்காக நீண்ட காலம் போராடி வருகிறது. இந்த அமைப்பின் நிறுவனர் அருண் கூறுகையில், "தமிழக - கேரள எல்லைப்பகுதியான வாலியார், செக்போஸ்ட்களில் தினமும் 600க்கும் மேற்பட்ட லாரிகளில் மாடுகள் கேரளாவுக்கு செல்வதைப் பார்க்கலாம். இந்த வகையில் தினமும் 34,000 மாடுகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இவைகள் கேரளாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கடந்த 2013-ம் ஆண்டு முதல் இதுவரை 1200க்கும் மேற்பட்ட மாடுகளை எங்கள் அமைப்பு சார்பில் காப்பாற்றி கோசாலைகளில் அடைத்திருக்கிறோம். அதோடு மாடுகள் சம்பந்தமான சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 40 வழக்குகளை போட்டுள்ளோம். இதில் 28 வழக்குகள் எங்களுக்கு ஆதரவான தீர்ப்புகள் கிடைத்துள்ளன. மீதமுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாடுகளை லாரிகளில் கொண்டு செல்ல சில விதிமுறைகள் உள்ளன. மாடுகளுக்குத் தேவையான தண்ணீர், உணவு, இடவசதிகள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட கி.மீட்டர் பயணத்துக்குப் பிறகு மாடுகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். ஆனால் அதையெல்லாம் மாடுகள் மூலம் சம்பாதிக்கும் கும்பல் பின்பற்றுவதில்லை. மாடுகளைக் காப்பாற்ற நாங்கள் எடுத்த முயற்சிக்கு இந்த அமைப்பில் உள்ள பலருக்கு கொலை மிரட்டல்களும் விடுவிக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி சந்தைக்கே வராமல் பிற மாநிலங்களிலிருந்து மாடுகள் கேரளாவுக்கு கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அதைத் தடுக்க அனைவரும் போராட வேண்டும். இல்லையெனில் மாடுகளே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி விடும்"என்றார்.
இந்த கொடூரமெல்லாம் பீட்டாவுக்கு தெரியவில்லையா?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 18, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.