Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 19, 2017

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்... தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டமாக மாறுகிறது - வணிகர்கள்


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி தீவிரமடைந்துள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் முழு அடைப்பு போராட்டமாக மாறுகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வணிகர்கள் நாளை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் ஜல்லிக்கட்டு நடத்த கோரி நாளை லாரிகள் மற்றும் ஆட்டோக்கள், கால் டாக்ஸிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். போராட்டத்தையடுத்து தமிழகம் முழுவதும் நாளை 10 லட்சம் வாகனங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.மதுரையை பொறுத்த வரை பெரும்பாலான கடைகள் இன்றே அடைக்கப்பட்டுவிட்டன. மேலும் தமிழகதத்தில் திரையரங்குகளில் நாளை பகல் மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்தியே தீர  வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் பொங்கலுக்கு முன் தமிழகத்தில் சிறு தீப்பொறியாக கிளம்பிய போராட்டம், அலங்காநல்லூரில் 21 மணி நேரம் விடிய  விடிய  போராட்டம் நடத்திய 250 பேரை கைது செய்த பிறகு பெரும் எரிமலையாக வெடித்துள்ளது. தமிழகத்தில் ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களிலும், கடல் கடந்து தமிழர்கள் வசிக்கும் இலங்கை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், என பல்வேறு இடங்களிலும் பரவியது. தலைநகர் சென்னை மெரினாவில் லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கடந்த 3 நாட்களாக இரவு, பகல் பாராமல் போராடி வருகின்றனர். போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்ததையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதனையடுத்து தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை, மாநில முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க அவசரச் சட்டம் பிறப்பிக்க இச்சந்திப்பின் போது மோடியை வலியுறுத்தினார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி மத்திய அரசால் ஏதும் செய்ய இயலாது. எனினும் மாநில அரசின் முடிவுகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என பிரதமா் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு விரைவில் முடிவெடுக்கும் என்றார். மேலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள், 'நன்மையே யாவும் நன்மையாய் முடியும்' , பொறுமையாக இருங்கள் என சூசகமாக கூறியுள்ளார். இதனால் ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. இந்நிலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் பல்வேறு தரப்பினரின் ஆதரவு போராட்டம் காரணமாக முழுஅடைப்பு போராட்டமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.