January 3, 2017
குழந்தைகள் வளர்க்கப்படுவதில்லை, வார்க்கப்படுகிறார்கள்
ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் அமர்ந்து பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனம் இணைந்து சமூகம், சாதிய கட்டுமானம், பாலின பேதம், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை, சுய விருப்பம் மற்றும் விழைவு என்று இன்னும் பல சமூகப் பிரச்சனைகளை மனம் திறந்து உரையாடக்கூடிய சாத்தியக்று உள்ளதா என்று கேட்டால் உள்ளது என்று சொல்லலாம். இதுகல்வி மற்றும் கற்றல் நிலையின் அடுத்தகட்ட செயல்பாடு என்றும் சொல்லலாம். மேலும் சமகாலத் தேவையாகவும் இதைக் கொள்ளவேண்டும். ஒரு பொறுப்புள்ள சமூகத்தை, குடிமக்களை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.
கல்வி நிறுவனங்களின் சுற்றுச் சுவர்களுக்கு வெளியேதான் உண்மையான வாழ்க்கையை ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தகையச் சூழலில் சமூகம் என்பது என்ன, அதில் நம் ஒவ்வொருவருடைய பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மிகவும் நுட்பமாகவும் அதே வேளையில் எளிய வடிவில் விவாதிக்கக்கூடிய களமாக அமைந்ததுதான் ஓசூர் சிப்காட்டில் அமைந்துள்ள டி.வி.எஸ் அகாடமி மாணவ-மாணவிகள் நிகழ்த்திய “பதனம்” என்கிற நாடகம். மேலும் மிகப் பொருத்தமாக ‘குழந்தைகள் தினவிழா’ அன்று பள்ளி மாணவர்களைக் கொண்டேமிகப் பெரிய, பரந்த உரையாடலை நாடகம் மூலமாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் சென்னைக் கலைக்குழுவின் அமைப்பாளர் பிரளயன்.
சிறுவர்கள் பெரிய விஷயங்களைப் பற்றிப் பேசக் கூடாதா? நிச்சயம் பேச முடியும், அதுவும் மிகவும் விளையாட்டுத்தனமாகக்கூட அதைப் பேசி ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும். அந்த நம்பிக்கையின் பெரு முயற்சிதான் ‘பதனம்’.பதனப்படுத்துவது, பக்குவப்படுத்துவது என்று பல்வேறு நிலையில் இச்சொற்றொடர் பயணித்து வருவதை நாடக நிகழ்வின் மூலம் மிக எளிதாக பார்வையாளர்களும் மாணவர்களும் பெற்று விடுகின்றனர். வயிற்றுப் பிழைப்பிற்காக குப்பை பொறுக்கும் சிறுவர்கள் குனிந்து குப்பைகளைக் கிளறித் தேடிக் கொண்டிருக்கும்போது தாம் வாழத் துடிக்கின்ற கனவு வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம் என்பதைக் கூறிக்கொண்டு நாடகம் தன்னுடைய பயணத்தைத் தொடங்குகிறது. சமூகத்தின் கவனத்திற்கு வராத விளிம்புநிலை மக்களான பங்களாதேசத்திலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் தில்லியின் புறநகர்ப் பகுதியில் குப்பைகளுக்கிடையில் தங்கள் வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
அவர்களது கடைநிலை வாழ்க்கையைக் கண்டு மனம் வெதும்பி அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று துடித்த ஆனி ஜங் (The Lost Spring by Anees Jung) எழுதிய கதையை மாணவர்கள் காட்சிப்படுத்துகின்ற அதே வேளையில் அனைத்து மாணவர்களின் மனதிலும் முழுக் கதையும் ஆணி அடித்தாற்போல் படியும் ரசவாதம் எளிதில் நிகழ்ந்துவிடுகிறது. வகுப்பறையைத் தாண்டி மாணவர்கள் பாடத்தை கற்பதற்கான இளகிய சூழலை இது அமைத்துத் தந்துவிடுகிறது. சமூகத்தின் கடைநிலையில் வாழும் சிறுவனுக்கு இருத்தலே அன்றாட போராட்டமாக இருக்கும்போது அவனது எதிர்கால லட்சியம் என்ன என்று கேட்கும்போது “நான் கார் டிரைவர்” ஆக வேண்டும் என்று மிகவும் எதார்த்தமாகக் கூறுகிறான். அதைக்கேட்கும் சிறுவர்கள் சிரிக்கிறார்கள். போயும் போயும் கார் டிரைவர் ஆவதை லட்சியமாகக் கொண்டுள்ளானே என்று அவர்கள் கேட்கிறார்கள். நம்முடைய சமூகச் சூழலில் இதை அடைவதே அவர்களுக்கு மிகப்பெரிய சாதனைதான் என்று ஆனி கூறும்போது “2020 இந்தியா வல்லரசு” என்ற கனவுநம்மை உறக்கத்திலிருந்து மீண்டெழச் செய்து விடுகிறது.
சிறுவர்களின் மனங்களில் சாதிய ஏற்றத்தாழ்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு என்னும் நஞ்சு பெற்றோர்களால் எவ்வாறு ஊட்டப்படுகிறது என்பதை மற்றொரு காட்சி மிகவும் யதார்த்தமாக விவரிக்கிறது. இன்றைய வளர்இளம் தலைமுறை நாகரீகமாக வீட்டிற்குள்ளேயே முடங்கி விளையாடிக் கொண்டிருக்கின்ற சூழலில் அவர்கள் சந்திக்கும் உளவியல் பிரச்சனைகளையும் மிகவும் நாசூக்காக அலசுகிறது நாடகம். பெருந்தனக்காரரின் பிள்ளைகளோடு அவர்களது வீட்டில் பாத்திரம் கழுவும் பெண்ணின் மகளும் சேர்ந்து விளையாடுவதை பொறுத்துக்கொள்ள முடியாத தாய் தன் பெண்ணிடம் அவளோடு சேர்ந்து விளையாடு வதை நிறுத்தச் சொல்கிறாள். ஆனால் பெண்ணோ அதை ஏற்கமறுக்கிறாள்.
இதனால்கோபம் அடைந்த தாய் தன் பெண்ணை கட்டுப்படுத்த இயலாதச் சூழலில் பாத்திரம் கழுவும் பெண்ணின் வீட்டிற்கே சென்று அவளிடம் சண்டையிடுகிறாள். இனி அவளது பெண் தன்பெண்ணோடு சேர்ந்து விளையாடக் கூடாது என்றும், உன்னுடைய அந்தஸ்து என்ன, எங்களுடைய அந்தஸ்து என்ன என்றும் கேட்கிறாள். இந்தக் காட்சி மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். சாதிய பொருளாதார ஏற்றதாழ்வை ஒரு குறியீடாகப் பயன்படுத்தியிருப்பார் பிரளயன். பெருந்தனக்காரப் பெண் சமதளத்தில் நின்று பேசுவது போலவும், பாத்திரம் கழுவும் பெண் உயர்தளத்தில் (பெஞ்சின்மீது நின்று) பேசுவது போலவும் டிவமைத்திருப்பார். அதாவது பாத்திரம் கழுவி வாழ்க்கையை நடத்தும் பெண் குணத்தால் உயர்ந்திருப்பது போலவும், பெருந்தனக்காரப் பெண் குணத்தால் தாழ்ந்து இருப்பது போலவும் இந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும்.
மற்றொரு காட்சியில் உயர்சாதி மாணவனுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தன் உயிர் நண்பனான தாழ்ந்தசாதி ஏழை மாணவனை அழைக்கிறான். பிறந்தநாளுக்கு வரும் நண்பனை தன் தந்தையிடம் அறிமுகப்படுத்துகையில் கல்வி கற்றலில் எப்பொழுதும் முதல் இடத்தில் வருபவன் என்று பெருமையாகக் கூறுவதோடு சிறு வயதிலேயே அவனுடைய அப்பா மனிதக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாக்கி இறந்ததாகவும் கூறுகிறான். இதைக் கேட்ட தந்தை வியப்போடு அவனைப் பார்க்கிறார். உயர்சாதி மாணவனின் தந்தை விருந்திற்கு வந்திருக்கும் ஒவ்வொருவரிடமும் தாழ்ந்தசாதி மாணவனை அறிமுகப்படுத்தி ஒவ்வொருவரிடமும் அவனது பின்னணி, அவனது அப்பா எப்படி இறந்தார் என்பதை கூற வைக்கிறார். அம்மாணவனின் தகுதி, திறமை மறக்கடிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் அவனது பிறப்பும் சமூகஅந்தஸ்துமே முன்னிறுத்தப்படுகின்ற இந்தக் காட்சியின் மூலம் பொதுப் புத்தியில் இட ஒதுக்கீடு பற்றிய தவறான புரிதல் உள்ளதை நாடகம் மிகவும் நுட்பமாக அலசுகிறது. மற்றொர
காட்சியில் ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் அவர்களது விருப்பமும் விழைவும் எவ்வாறு மறுக்கப்படுகிறது என்பது எளிய காட்சிப்படுத்தலின் மூலம் விவரிக்கப்படுகிறது. பெற்றோர்கள் எவ்வாறு தங்களது பேராசைகளையும் கனவுகளையும் தங்கள் பிள்ளைகளிடம் திணிக்கிறார்கள் என்பது விவாதிக்கப்படுகிறது. அதேபோன்று பாலின பாகுபாடு குடும்பத்தில் எவ்வாறுவடிவம் கொள்கிறது என்பதை விவரிப்பதோடு அதற்கு துணைபோகும் கலாச்சார பின்னணி, சமூகச் சூழல் ஆகியவையும் விவாதத்திற்குட்படுத்தப்படுகிறது. இறுதிக் காட்சியில் மறைந்த எழுத்தாளர் ஆர். சூடாமணியின் “பிம்பம்” என்னும் சிறுகதையின் கருப்பொருளைக் கொண்டு ஒரு பெண்ணின் ஆசைகளும் கனவுகளும் எவ்வாறு பெற்றோர்களாலும் சமூகத்தாலும் சிதைக்கப்படுகிறது என்பதை தாயும் மகளுமான குடும்ப உரையாடல் மூலம் மிகவும் காத்திரமாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். ஆக குழந்தைகள் வளர்க்கப்படுவதில்லை மாறாக வார்க்கப்படுகிறார்கள் என்பதை மிகவும் எதார்த்தமாக பதிய வைத்துவிடுகிறார்கள்.ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பு Open House என்ற பெயரில் நிகழ்வது உண்டு. அத்தகைய சந்திப்புகளில் மாணவர்களைப் பற்றி பெற்றோர்களும் ஆசிரியர்களும் பரஸ்பரம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதுண்டு. ஆனால் இத்தகைய சந்திப்புகளில் பேச முடியாத, பேசத் தவற விடுகிற, பேசக்கூசுகிற பல்வேறு பிரச்சனைகள் மிகவும் எளிதாக நேருக்கு நேராக பொதுவெளியில் வைத்து விவாதிக்கும்போது ஒவ்வொருவர் மனதிலும் ஒரு குற்றவுணர்வு எழுவதை அங்கு கூடியிருந்த பார்வையாளர்களின் (பெற்றோர்களின்) முகங்களிலிருந்து காண முடிந்தது. நம்முடைய வருங்கால உலகம் வேறு முறையில் ‘பதனம்’ படுத்த வேண்டியதேவையை இந்நாடகம் வலுவாக உணர்த்துகிறது. இது பல்வேறு பள்ளிகளில் நிகழ்த்தப்படும்போது மற்ற பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் உத்வேகமாக அமைவதோடு வகுப்பறை அளிக்கமுடியாத புரிதலை ஏற்படுத்திவிடவும் முடியும். குறைந்தது டி.வி.எஸ் குழுமப் பள்ளிகள் அனைத்திலும் இதை நிகழ்த்தலாம். மேலும் நமது தேசிய கலாச்சார அமைப்புகளான தேசிய நாடகப் பள்ளி மற்றும் மைய சங்கீத் நாடகஅகாடமி ஆகியவை முன்வந்து பள்ளிகளுக்கிடையிலான நாடக விழாவாக வடிவமைக்க முயற்சிகளாவது மேற்கொள்ளலாம். நாடகப் பனுவலை உருவாக்கி, நெறியாளுகை செய்த தோழர் பிரளயனுக்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கிய மாணவ, மாணவிகளுக்கும் அவர்களது ஊக்கமும் ஆக்கமும் தந்து இத்தகைய களத்தை அமைத்துக் கொடுத்த பள்ளி நிர்வாகம், ஆசியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
குழந்தைகள் வளர்க்கப்படுவதில்லை, வார்க்கப்படுகிறார்கள்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 03, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.