Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 12, 2017

'தமிழகத்தில் பி.ஜே.பி. கால் ஊன்றவே முடியாது!' பி.ஜே.பி. இளைஞர் அணி துணை செயலாளர் ஆவேசம்


திருச்சி : "ஜல்லிக்கட்டு பிரச்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி பேசி வருகிறார்கள் தமிழக பி.ஜே.பி. நிர்வாகிகள். தமிழக மக்கள் தமிழ் உணர்வுகளால் ஒன்றிணைந்தவர்கள். தமிழக மக்களின் உணர்வுகளோடு பி.ஜே.பி. விளையாடி வருகிறது. இதை நிறுத்தாவிட்டால் ஒருநாளும் தமிழகத்தில் பி.ஜே.பி. கால் ஊன்ற முடியாது," எனச்சொல்லி கட்சியை விட்டு வெளியேறுவதாகவும் அறிவித்திருக்கிறார் பி.ஜே.பி. மாநில இளைஞரணி துணை செயலாளர் சத்தியபாமா.

செல்லாது அறிவிப்பு, ஜல்லிக்கட்டு விவகாரம், பொங்கல் விடுமுறை சர்ச்சை என தமிழகத்தில் அடுத்தடுத்த நெருக்கடியை சந்தித்து வருகிறது பி.ஜே.பி. எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராக பேசி வரும் நிலையில், திருச்சியில் பி.ஜே.பி. மாநில நிர்வாகி ஒருவரே, பி.ஜே.பி.யை கடுமையாக விமர்சித்து கட்சியில் இருந்து வெளியேறுவதாகவும் அறிவித்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டு தடை நீக்கக் கோரி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற பி.ஜே.பி.யின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சத்தியபாமா, ஜல்லிக்கட்டு, செல்லாது அறிவிப்பு போன்றவை மூலம் மக்களை பி.ஜே.பி. அரசு நெருக்கடிக்குள்ளாக்குவதாகச் சொல்லி கட்சியை விட்டு விலகுவதாகவும் அறிவித்திருக்கிறார்.

"ஒரு மாற்றம் வரும்னு தான் மோடியை ஆதரிச்சு, கட்சியிலையும் சேர்ந்தேன். ஆனா மோடி மேல இருந்த நம்பிக்கை சுத்தமா போச்சு. அதுக்கு அப்புறம் ஏன் அந்த கட்சியில இருந்துட்டு. அது தான் வெளியேறலாம்னு முடிவு பண்ணீட்டேன்" என்றவரிடம் சற்று விரிவாக பேசினோம்.

Sathyabama சத்தியபாமா

“நான் சிங்கப்பூர்ல சொந்தமாக கம்பெனி நடத்தீட்டு வந்தேன். அங்கே தமிழர்கள் படும் கஷ்டங்களை நேர்ல பார்த்திருக்கேன். அவங்க வாழ்க்கையில நல்லது நடக்கணும்னா இந்தியாவில் மாற்றம் வரணும்னு எதிர்பார்த்தேன். அப்போ தான் மோடி பத்தி கேள்வி பட்டேன். மோடி நிறைய மாற்றம் கொண்டு வருவாருன்னு சொன்னாங்க. அந்த நேரம் நான் இந்தியா வந்தேன். மோடி மேல இருந்த நம்பிக்கையில மோடி முன்னிலையில் பி.ஜே.பி.யில சேர்ந்தேன். கட்சியில நல்ல செயல்பட்டதால மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பு கொடுத்தாங்க. அப்புறம் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பதவியும் கொடுத்தாங்க.

ஆனா மோடி மேல நான் வைச்ச நம்பிக்கை சுத்தமா பலன் கொடுக்கலை. சமீபகாலமா நடக்குற ரொம்ப மோசமான நிகழ்வுகள் நடக்குது. இது எனக்கு ரொம்ப உறுத்தலா இருந்துச்சு. குறிப்பா 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாதுங்கற அறிவிப்பு, சாதாரண மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது. கிராமத்து மக்கள் இதனால் சந்திக்கு பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல. சாதாரண ஏழை எளிய மக்களை கடுமையாக பாதிக்கும் அறிவிப்பு இது.

பி.ஜே.பி. மாநில இளைஞரணி துணை செயலாளர் சத்தியபாமா

பி.ஜே.பி. மாநில இளைஞரணி துணை செயலாளர் சத்தியபாமாஅதேபோல் ஜல்லிக்கட்டு விஷயத்தில் பி.ஜே.பி. அரசு மவுனம் சாதிப்பது. காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டம் கொண்டு வர தயாராக இருக்கும் பி.ஜே.பி. அரசு, ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவசர சட்டம் கொண்டு வரமுடியாது என்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் பி.ஜே.பி. அரசு செயல்படுகிறது.

வறட்சியால் தமிழகத்தில் இவ்வளவு விவசாயிகள் பலியாகிறார்கள். கர்நாடகா அரசு தண்ணீர் தர மறுக்கிறது. கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசும், பி.ஜே.பி.யும். தமிழக நலனுக்காக எதையும் செய்ய தயங்குகிறார்கள். ஜல்லிக்கட்டு பிரச்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி பேசி வருகிறார்கள் தமிழக பி.ஜே.பி. நிர்வாகிகள். தமிழக மக்கள் தமிழ் உணர்வுகளால் ஒன்றிணைந்தவர்கள். தமிழக மக்களின் உணர்வுகளோடு பி.ஜே.பி. விளையாடி வருகிறது. இதை நிறுத்தாவிட்டால் ஒருநாளும் தமிழகத்தில் பி.ஜே.பி. கால் ஊன்ற முடியாது.

மாற்றம் வரும்னு நம்பி அந்தக் கட்சியில் இணைஞ்சேன். ஒரு பெண்ணாக, குடும்பம், குழந்தை என பல தடைகள் இருந்தாலும் மக்களுக்கு நம்மால் உதவ முடியும் என நம்பித்தான் இதுநாள்வரை இருந்தேன். ஆனா கட்சியோ மக்களையோ, மக்களின் உணர்வுகளையோ மதிக்கலை. அதனால இனி கட்சியில் இருக்க மனமில்லை. நான் முதலில் தமிழச்சி. அதனால் தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத கட்சியில் இருக்கக்கூடாது என்பதால் எனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்," என்றவரிடம், 'தூய்மை இந்தியா', 'டிஜிட்டல் இந்தியா' என பல திட்டங்களை மோடி அறிவித்திருக்கிறாரே? என நாம் கேட்க ஆவேசமானார்.

"அதெல்லாம் போட்டோ அரசியல் சார், குப்பையை கொட்டுறமாதிரி கொட்டி பக்கத்தில் நின்று போஸ் கொடுத்துப் போட்டோ எடுத்து பேஸ்புக், டிவிட்டர் எனப் போட்டு அரசியல் செய்யலாமே தவிர மாற்றம் உண்மையாக வராது. இந்தத் திட்டங்கள் எல்லாம் விளம்பரத்துக்குப் பயன்படும் உண்மையான மாற்றத்துக்குப் பயன்படாது. அதனால் தான் நான் இந்த கட்சியில இருந்து விலகீட்டேன்," என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.