Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 7, 2017

அப்போலோ, போயஸ் கார்டன், அ.தி.மு.க. அலுவலகம்... இப்போது எப்படி இருக்கின்றன?!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மறைந்து 30 நாட்களைக் கடந்துவிட்டபோதிலும்... அ.தி.மு.க வட்டாரத்தில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனாலும், அடிமட்டத் தொண்டர்களின் மனங்களில்... ஜெயலலிதா மட்டும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பது நிதர்சனம். சிகிச்சைப் பலனின்றி ஜெயலலிதா இறந்த பிறகு... அவர் உடலைக் கொண்டுசென்ற இடங்கள், அன்றும்... இன்றும் எப்படியிருக்கின்றன என்பதே இந்தத் தொகுப்பு...

எம்.ஜி.ஆர் சமாதி

அப்போலோ அன்று: 

கடந்த டிசம்பர் 5-ம் தேதி மதியம் 2.30 மணிக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக  முதல்வர் ஜெயலலிதா, ‘அபாயக்கட்டத்தில் இருக்கிறார்’ என அப்போலோவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியானது. இதன் காரணமாக, தொண்டர்கள் படை அப்போலோவின் வாசலை முற்றுகையிடத் தொடங்கியது. மாலை 5.30 மணிக்கு, ஒருசில தொலைக்காட்சி ஊடகங்கள், ‘முதல்வர் ஜெயலலிதா காலமானார்’ என செய்தி வெளியிட்டதால்... அப்போலோ வாசலில் கலவரம் வெடித்தது. 15 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்தக் கலவரத்தை காவல் துறை கட்டுக்குள் கொண்டுவந்தது. அதன் பிறகு, அப்போலோவில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குத் தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டு... சி.ஆர்.பி.எஃப். வீரர்கள், என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் மற்றும் பவுன்சர்கள் குவிக்கப்பட்டனர். ‘இரவு 11.30 மணிக்கு, சிகிச்சைப் பலனின்றி... ஜெயலலிதா உயிரிழந்ததாக’ நள்ளிரவு 12.03 மணிக்கு அறிக்கை வெளியிட்டது மருத்துவமனை நிர்வாகம். இதனால், அ.தி.மு.க உண்மை விசுவாசிகள் கதறி அழத்தொடங்கி, கூச்சலிட்டுக்கொண்டு இருந்தனர். பின் சரியாக அதிகாலை 2.26 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் பலத்த பாதுகாப்போடு, போயஸ் கார்டனுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

அப்போலோ இன்று: 
அப்போலோ

ஜெ. இறந்து ஒரு மாதத்துக்குப் பிறகு, அப்போலோவில் நிலைமை தற்போது சுமுகமாகி இருக்கிறது. வாசலில் இரண்டு செக்யூரிட்டிகள் மட்டும் நின்று... கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அருகே இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில்... ஆட்டோக்கள் எந்தவிதப் பதற்றமும் இன்றி வரிசைகட்டி நிற்கின்றன. முழுக்க முழுக்க அன்று தொண்டர்களால்  சூழப்பட்டு இருந்த... அப்போலோவின் எமர்ஜென்ஸி எக்ஸிட் பகுதி, ஃபார்மஸி தெரு, வேலாஸ் தோட்டம் 2-வது தெரு... ஆகியவை மக்களின் நடமாட்டம் இன்றி வெறிச்சொடி இருந்தன. அப்போலோவின் வாசலில், ஜெ.-வும்... சசியும் ஒன்றாக நிற்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அன்று, பாதுகாப்புக்காக வைக்கப்பட்டு இருந்த தடுப்பு வளையங்களில் சில... இன்னும் எடுத்துச் செல்லப்படாமல் அங்கேயே ஒதுக்கிவைக்கப்பட்டு இருக்கின்றன.

போயஸ் கார்டன் அன்று:

கடந்த டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 2.40 மணியளவில்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடான வேதா இல்லத்தில்... அவருடைய உடல், ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு, சுமார் இரண்டு மணிநேரம் வைக்கப்பட்டு இருந்தது. இங்கு, தொண்டர்களும்... பொதுமக்களும் சொல்லொண்ணாத் துயரத்துடன் கண்கலங்கி நின்றனர்.

போயஸ் கார்டன் இன்று:

போயஸ் கார்டன்

போயஸ் கார்டனில் குவிக்கப்பட்டிருந்த போலீஸார் விலக்கிக்கொள்ளப் பட்டதால்... அதன், முந்தைய தெருவான பின்னி சாலையின் முனையில் 3 போலீஸாரும், போயஸ் கார்டனின் முனைப்பகுதியில் 5 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போயஸ் கார்டன் தெருவுக்கு நெருக்கமானவர்களைத் தவிர, மற்ற எல்லோரையும் சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கின்றனர். அந்தத் தெருவின் முனைப் பகுதியில் 5 நிமிடங்களுக்கு மேல் நிற்கும் நபர்களிடம்... விசாரணை செய்வதில் முனைப்புக் காட்டுகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள், அந்தப் பகுதியைக் கடப்பதில் மிகுந்த கெடுபிடிகளைச் சந்திக்க நேரிடுகிறது.

அ.தி.மு.க. கட்சி அலுவலகம் அன்று:  

கடந்த டிசம்பர் 5-ம் தேதி இரவு வெகுநேரம் ஆகியும் சீனியர்களின் தாமதத்தால் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறவில்லை. நள்ளிரவு 11.30 மணிக்கு மேல், ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி உள்ளிட்டோர் அலுவலகம் வர... சிறிது நேரத்தில் கூட்டம் தொடங்கியது. ஜெயலலிதா மரணித்தது தொடர்பான அறிக்கையை அப்போலோ நிர்வாகம் வெளியிட்ட பிறகு, அவைத்தலைவர் மதுசூதனன், ‘பன்னீர்செல்வம் முதல்வராகத் தேர்வுசெய்யப்படுகிறார்’ என்று அறிவிக்கப்பட்டார்.

அ.தி.மு.க. கட்சி அலுவலகம் இன்று:

அதிமுக அலுவலகம்

தற்போது ராயப்பேட்டை, டி.டி.கே. சாலையில் இருக்கும் அ.தி.மு.க தலைமை அலுவகத்தைப் பாதுகாக்கும் பணியில் ஒரே ஒரு போலீஸார் மட்டும் அங்கு பணிபுரிந்து வருகிறார். தலைமை அலுவலம் இருக்கும் சாலையின் இருமருங்கிலும் ‘பேரி-காடுகள்’ வைக்கப்பட்டு உள்ளன. கட்சி அலுவலகத்தின் உள்ளே வைக்கப்பட்ட பேனர்களில் ஒன்று... ஜெயலலிதாவை ஒதுக்கி, சசிகலாவை முன்னிறுத்துகிற மாதிரி வைக்கப்பட்டிருக்கிறது.

ராஜாஜி ஹால் அன்று:

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகில் இருக்கும் ராஜாஜி ஹாலுக்கு கடந்த டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 4.35 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டது. இதனால் பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோரின் படையெடுப்பால் ராஜாஜி ஹால் வளாகம் திணறியது.

ராஜாஜி ஹால் இன்று:

ராஜாஜி ஹால்

ராஜாஜி ஹாலின் மெயின் கேட், இன்று பூட்டப்பட்டிருக்கிறது. அதன், உள்ளே செல்வதற்கு ஓமந்தூரார் மருத்துவமனையின் வழியாகத்தான் செல்லும்படி தடுப்புகள் போடப்பட்டு இருக்கின்றன. தவிர, அங்கு 2 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெ.-வைத் தாங்கியிருந்த ராஜாஜி ஹால், தற்போது இருள் சூழ்ந்து காட்சி அளித்தது. ‘‘ஜெ. வைக்கப்பட்டு இருந்த இடத்தை... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மக்கள் வந்து... வெளியில் நின்றபடி பார்வையிட்டுச் செல்கின்றனர்’’ என்றார் காவலர் ஒருவர்.

ஜெயலலிதா சமாதி அன்று:

எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்குள்ளேயே ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது. பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதா சமாதி இன்று:

ஜெயலலிதா சமாதி

இன்று ஜெயலலிதாவுடைய சமாதியில்... தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்கின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிவருகிறது. அதில் பெண்கள் பலர், கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தியது... பார்க்கும் மனங்களைக்கூடக் கண்ணீர் சிந்தவைத்தது. அம்மாவின் உண்மை விசுவாசிகள் பலர், இன்றும் அங்கே மொட்டைப்போட்டு அஞ்சலி செலுத்துவதைப் பார்த்தால்... தற்போதைய அ.தி.மு.க கழகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் பொறுக்க முடியாமல்தான் மொட்டைப் போட்டிருப்பார்களோ என்று சொல்லத் தோன்றுகிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.