Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 2, 2017

பதவியேற்பு விழா ஏற்பாடுகள் ஜரூர்... சசிகலா முதல்வராவது என்று?!


அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரான சசிகலா, ஜனவரி 12க்குள்  முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக கார்டன் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அவரது தோழியான சசிகலா, கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார். 'ஜெயலலிதா காட்டிய வழியில் நடப்போம்' என்று கட்சியினரிடம் சசிகலா உருக்கமாக பேசினார். முதலில் பொதுச் செயலாளராக சசிகலா, பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதற்கு சசிகலா, சம்மதம் தெரிவித்து விட்டார். அடுத்து, சசிகலா, முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை கட்சியின் மூத்த நிர்வாகிகள் வைத்துள்ளனர். இதுவும் விரைவில் நிஜமாகப் போகிறது என்கிறார் கார்டனில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவர்.

இதுகுறித்து நம்மிடம் விரிவாக பேசிய அவர், "கடந்த 33 ஆண்டுகளாக அம்மாவின் நிழலாகவே சின்னம்மா இருந்தார். இதனால் கட்சியில் உள்ள அனைத்து உள்விவகாரங்களும், கட்சியினரின் செயல்பாடுகள் அனைத்தும் அவருக்குத் தெரியும். இதனால் அவரால் மட்டுமே அம்மா வழியில் கட்சியை திறம்பட வழிநடத்த முடியும். இதனால்தான் கட்சியினர் சின்னம்மாவை பொதுச் செயலாளராக்க விரும்பினர். அது நடந்து விட்டது. கட்சியின் தலைமையும், ஆட்சி அதிகாரமும் ஒருவருடைய கையில் இருந்தால்தான் தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்க முடியும். இதனால்தான் சசிகலா, முதல்வராக வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போதுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூன்றாவது முறையாக பதவியில் உள்ளார். அம்மாவின் நம்பிக்கைக்குரிய நபராகவே ஓ.பன்னீர்செல்வம் இருந்ததால் அவருக்கு இத்தகைய பொறுப்புகள் வழங்கப்பட்டன. இப்போது அம்மா உயிரோடு இல்லை. அம்மா, இறந்தவுடன் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக சின்னம்மாதான் தேர்வு செய்தார். அவரது தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்த சமயத்தில் வர்தா புயலின் போது மக்களுக்குத் தேவையான மீட்புபணிகளை துரிதமாக இந்த ஆட்சி செய்தது. இது மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. இதற்கு எல்லாம் காரணம் சின்னம்மாதான்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கும், சின்னம்மாவுக்கும் இடையே ஈகோ என்று சொல்லப்படுவது உண்மையல்ல. அவரே சின்னம்மா முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். எம்.ஜி.ஆர், அம்மா வழியில் மீண்டும் தமிழகத்தில் பொற்கால ஆட்சியை நடத்த சின்னம்மாவும் முதல்வராவதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார். இதனால் அவர் விரைவில் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். ஜனவரி 12க்குள்  சின்னம்மா முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கி விட்டன. சின்னம்மா, முதல்வராகியப்பிறகு காலியாக உள்ள ஆர்.கே நகர் தொகுதி அல்லது மத்திய மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளார். உளவுத்துறையின் அறிக்கைக்குப்பிறகு போட்டியிட உள்ள தொகுதி முடிவு செய்யப்படும்" என்றார்.

சசிகலா, முதல்வராக கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதால் ஓ.பன்னீர்செல்வமும், அவருக்கு தன்னுடைய பதவியை விட்டுக் கொடுக்க தயாராகி விட்டதாக அவரது தரப்பினர் சொல்கிறார்கள். இதனால் முதல்வர் பன்னீர்செல்வம், தன்னுடைய பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் முக்கியப் பதவி, அமைச்சரவையில் முக்கிய இலாகா ஆகியவை வழங்க கார்டன் தரப்பு ஒப்புதல் அளித்துள்ளதாம்.

இதற்கிடையில் மன்னார்குடி குடும்ப ஜோதிடர் ஒருவர் கூறுகையில், "சசிகலாவுக்கு மீனம் ராசி. ரேவதி நட்சத்திரம். தற்போது அந்த ராசிகாரர்களுக்கு சூரியன் 10-வது இடத்தில் இருக்கிறது. ஜனவரி 15-ம் தேதிக்குப்பிறகு சூரியன் 11-வது இடத்துக்கு செல்கிறது. இதனால் சூரியன் 10-வது இடத்திலிருக்கும்போதே சசிகலாவை முதல்வராக பொறுப்பேற்க சொல்லி இருக்கிறோம்" என்றார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.