Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 2, 2017

சந்திரபாபு நாயுடுவை கொல்ல மாவோயிஸ்டுகள் சதிதிட்டம்; டெல்லியில் ஒத்திகை- மத்திய அரசு எச்சரிக்கை


ஆந்திர முதல் - மந்திரி சந்திரபாபு நாயுடுவை கொல்ல மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சதிதிட்டம் தீட்டிஉள்ளனர் என்றும் அவர்கள் டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் ஒத்திகையும் நடத்திஉள்ளனர் என்றும் மத்திய உளவுத்துறை எச்சரித்து உள்ளது.

ஆந்திரம், ஒடிசா இடையேயான எல்லைப் பகுதியில் உள்ள மல்கான்கிரி மாவட்டத்தில் உள்ள ராம்குர்ஹா வனத்தில் கடந்த அக்டோபர் 24-ம் தேதி இரு மாநில போலீஸாருடனான துப்பாக்கி சண்டையில் 7 பெண் தீவிரவாதிகள் உள்பட 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து மாவோயிஸ்டுகள் பழிக்கு பழிவாங்க திட்டமிட்டுள்ளனர். ஆந்திரா முதல் - மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு ஏற்கனவே கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ராம்குர்ஹா என்கவுண்டரை தொடர்ந்து சந்திர பாபு நாயுடுவுக்கு மாவோயிஸ்டுகளால் அச்சுறுத்தல் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் சந்திரபாபு நாயுடுவை கொல்ல மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமான ஆந்திர பவனில் மக்களோடு மக்களாக மாவோயிஸ்டுகளும் அடிக்கடி ஊடுருவியிருப்பதாகவும், முதல் - மந்திரி சந்திரபாபு நாயுடுவை கொல்ல 6 முறை அவர்கள் ஒத்திகை பார்த்து இருப்பதாகவும் எனவே உஷாராக இருக்குமாறும் ஆந்திர போலீசுக்கு டெல்லி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகமும் எச்சரிக்கை செய்துள்ளது. ஆந்திர போலீசார் டெல்லி போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தகவல் அனுப்பி உள்ளதாக ஆந்திர போலீஸ் டி.ஜி.பி. என்.சாம்பசிவராவ் தெரிவித்துள்ளார்.

டெல்லிக்கு சந்திரபாபு நாயுடு வரும்போது டி.வி. செய்தியாளர்கள் போல் மைக் பிடித்துக் கொண்டு அவரை நெருங்கியதாகவும் இது ஒத்திகை தான் என்றும் எச்சரிக்கையில் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஆந்திர பவனில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மாவோயிஸ்டுகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி முதல் - மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டபோது, ‘‘எனக்கு யாரும் விரோதி கிடையாது, அமைதியை விரும்புபவன், எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். ஏற்கனவே கடந்த 2004-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு திருப்பதிக்கு சாமி கும்பிட வந்த போது அலிபாரியில் நக்சலைட்டுகள் நடத்திய கண்ணி வெடி தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பினார். அவரது கார் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்தது. அதன்பிறகு சந்திரபாபு நாயுடுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது டெல்லி போலீசார் எச்சரிக்கையைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவுக்கு மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சந்திரபாபு நாயுடு கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சாதாரண உடையில் ஏராளமான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி ஆந்திர பவனில் அதிகாரிகளின் கார்கள் தவிர மற்றவர்களின் கார்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.