Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 27, 2016

‘சம்பளமும் இல்லை... ஓய்வும் இல்லை..!’ காவலர் கோபிநாத்தை தற்கொலைக்குத் தூண்டிய மன அழுத்தம்


பண்டிகைக் காலங்கள், முக்கிய நிகழ்ச்சிகள், இயற்கைப் பேரிடர்கள், தலைவர்களின் பாதுகாப்புக்கு என அரசு நம்பியிருப்பது காவல் துறையைத்தான். தங்களது குடும்பத்தை விட்டுவந்து தூக்கம் தொலைத்து பாதுகாப்புப் பணியில் இருக்கும் பல நூறு இளைஞர்களை எல்லா இடங்களிலும் பார்க்க முடியும். குறைவான சம்பளம் அந்த சம்பளமும் நிலையில்லை சில மாதங்களுக்கு வராமல் கூட போகலாம். ஓய்வில்லாத வேலை, விடுப்பு கிடையாது, உயர் அதிகாரிகளின் விரட்டல், மிரட்டல் என இவர்களின் நிலை சொல்லமுடியாத அளவுக்கு சோகம் நிறைந்தது. இப்படி ஓய்வு இல்லாத பணிச்சுமையால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்திருக்கிறார் ஆயுதப்படையில் பணியாற்றிய கோபிநாத் என்ற இளைஞர். மரணத்தைத் தழுவிய காவலர் கோபிநாத்தின் அவலமும் துயரமும் நிறைந்த கதை இது.

25.12.2016 அதிகாலை 5.30 மணிக்கு ஆயுதக்கிடங்கு பாதுகாப்புப் பணிக்கு சென்றிருக்கிறார் காவலர் குமரேசன். அங்கே துப்பாக்கியைக் கையில் பிடித்தவாறு நாற்காலியில் இறந்து கிடந்திருக்கிறார் இரவுப்பணியில் இருந்த கோபிநாத். உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கோபிநாத் மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்துள்ள வாடிபட்டியை சேர்ந்தவர். பழனியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் பணிபுரிந்து வந்த கோபிநாத். மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் ஆயுதப் படைக்கு மாற்றலாகி சென்னை வந்திருக்கிறார்.
கோபிநாத்

"இது நடப்பதற்கு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி கூட பார்த்தேன் சார். ரொம்ப இறுக்கமான முகத்தோட இருந்தாரு. அடுத்தடுத்த நாட்களும் அப்படியே தான் இருந்தாரு. நான் கூட அவரோட இயல்பே அப்படித்தான் போலன்னு நினைச்சேன். காலையில அந்தப் பக்கமா போனப்போ நிறைய பேர் சுத்தி நின்னுட்டு இருந்தாங்க. பக்கத்துல போய்ப் பார்த்தா கையில துப்பாக்கியைப் பிடிச்சுக்கிட்டு முகமெல்லாம் சிதைஞ்சு போய் சேர்ல உட்கார்ந்த மாதிரியே அந்தத் தம்பி சடலம் இருந்தது. எங்களோட பயிற்சிகள்ல அந்த வகை துப்பாக்கியை வைச்சு நாங்க பயிற்சி பண்ணுவோம். அதுலேருந்து வெளிப்படுற குண்டு எவ்வளவு வேகத்துல பாயும், இலக்கை எப்படித் துளைக்கும்னு நல்லாவே தெரியும். அந்த குண்டு நம்ம மேல பட்டால் என்ன ஆகும்னு நினைக்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்த்துடும். ஆனா தன்னோட தலையிலேயே சுட்டுகிட்டு தற்கொலை பண்ணிட்டு இருக்காருன்னா. அவரோட மனநிலை எப்படி இருந்திருக்கும்னு நீங்களே நினைச்சு பாருங்களேன்.

வெறுமனே 4 மணி நேரம் ஓய்வுன்னு ஒரு வாரமா வேலை செஞ்சிருக்கார். அதுல தொடர்ச்சியான ஓய்வு கிடைக்க வாய்ப்பு இல்லை. முன்னாடியெல்லாம் நாங்க ஆசைப்படுற இடத்துல வேலை செய்ய சாய்சஸ் கொடுப்பாங்க. ஆனா இப்போ அப்படி கிடையாது. எங்கே டூட்டி போட்டாலும் போய்த்தான் ஆகணும். ஒவ்வொரு மாதமும் குறை தீர்ப்பு நாள் நடத்தணும்ங்கிறது விதி. ஆனா இவங்க எப்போ நடத்துறாங்ககிறதே எங்களுக்குத் தெரியாது. அப்படியே நடத்தினாலும் மைக்ல 'சம்பளப் பிரச்னை, பணிமாறுதல், லீவ் பத்திப் பேச யாரும் வரக் கூடாது'ன்னு சொல்லிடுவாங்க. இதையெல்லாம் விட்டுட்டு நாங்க எதைத்தான் அவங்ககிட்ட பேச முடியும்? சரியான சம்பளம், ஓய்வு, அவசரத்துக்கு லீவ்னு எதுவுமே கிடையாது. மீறி நாம பேசினோம்னா அதை விட கஷ்டமான வேலையை கொடுத்துருவாங்க. காவல் துறையில வேலை செய்யுற நிறைய பேர் மனசளவுல ரொம்ப அதிகமா பாதிக்கப்பட்டு இருக்காங்க." என்கிறார் காவலர் ஒருவர்.          

பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்த கோபிநாத்."தொடர்ந்து இரவுப்பணியை மேற்கொள்ள முடியவில்லை. சம்பளமும் இரண்டு மாதங்களாக வரவில்லை மிகவும் சிரமமாக இருக்கிறது." என தனது உயர் அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கிறார். ஆனாலும் அவரை இரவுப் பணியை செய்யச் சொல்லி உத்தரவிட்டதாக சொல்கிறார்கள். இட மாறுதலையும் கேட்டிருக்கிறார் கோபிநாத்.  ஆனாலும் அவரது கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது.

வழக்கமாக விழாக் காலங்களில், பதட்டமான நேரங்களில் பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு காவலர்களை வரவழைப்பார்கள். அப்படி வரும் காவலர்களுக்கு எந்த விதமான வசதியும் செய்து கொடுக்கப்படுவதில்லை. முறையான ஓய்வும் கிடையாது. தொடர்ந்து எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வேலை செய்தாக வேண்டிய சூழலே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தலைநகரம் என்பதற்காக இரண்டு காவலர்கள் தேவைப்படும் இடத்தில் பத்து பேரைக் குவித்து வைக்கும் நடைமுறையும் வழக்கத்தில் இருக்கிறது. காவலர்கள் தங்களது சொந்த ஊரில் பணிபுரிந்தால் குடும்பத்தோடு நேரம் செலவழிக்க வேண்டும் என நினைத்து அடிக்கடி விடுமுறை எடுப்பார்கள் என வேறு மாவட்டங்களில் இருந்து காவலர்களைப் பணியில் அமர்த்துவதாகவும் சொல்கிறார்கள்.
கோபிநாத்


கோபிநாத்தின் சட்டைப்பையில் இருந்த கடிதத்தில் "எனக்கு மிகுந்த பணிச்சுமை மற்றும் தலைவலியின் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன்." எனச் சொல்லியிருக்கிறார். இறுமாப்போடு துப்பாக்கி ஏந்தி காவல் பணி செய்த கோபிநாத். அந்த துப்பாக்கியாலேயே தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.