Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 9, 2016

ஜெயலலிதாவின் கனவுத் திட்டத்திற்கு புத்துயிர் கொடுப்பாரா தமிழக முதல்வர்!?


நம் சமூகத்தில் இப்போதும்கூட, பிரசவ அறையில் இருந்து வரும் செவிலியர், 'ஆண் குழந்தை பிறந்திருக்கு' என்று சொல்லும்போது ஏற்படும் மகிழ்ச்சி, 'பெண் குழந்தை பிறந்திருக்கு' எனும்போது சற்றே சுருதி குறைந்துதான் போகிறது. எனில், முந்தைய காலத்தில் பெண்  குழந்தைகளின் பிறப்புக்கும் வளர்ப்புக்கும் எதிராக இருந்த கசப்பு, கொடுமையானது.

1980-1990 மற்றும் அதற்கு முந்தைய காலகட்டங்களில், கிராமப்புறங்களில் கள்ளிப்பால் கொடுப்பது, அரளி விதையை அரைத்துக் கொடுப்பது என சர்வ சாதாரணமாக பெண் சிசுக்கொலைகள், கருக்கொலைகள் செய்யப்பட்டன. பெண் குழந்தை பிறந்தால் அதை வளர்த்து, ஆளாக்கி, திருமணம் மற்றும் அதற்குப் பிந்தைய பல்வேறு கடமைகளை பூர்த்தி செய்வதற்கான பொருளாதாரச் சிக்கல்களே, இதுமாதிரியான சிசுக்கொலைகளுக்குக் காரணம்.

தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்னையாக இருந்த பெண்சிசுக்கொலை பிரச்னைக்குத் தீர்வாக, 1992-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஒரு சிறப்பான திட்டத்தைக் கொண்டுவந்தார். அதுதான்... 'தொட்டில் குழந்தைத் திட்டம்'. பெண் சிசுக்கொலையை தடுப்பதுடன், பெண் குழந்தைகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் அமைந்த முத்தான திட்டம் இது.



ஜெயலலிதா

பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாத சூழலில் உள்ள பெற்றோர், அக்குழந்தையை, அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்க வழிசெய்யப்பட்டது. அப்போது தமிழகத்திலேயே சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்தான் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வந்தன. அதிலும் இளம் வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, பெண் சிசுக்கொலை போன்றவை அதிகமாக நடைபெற்று வந்தன. அதனால் மேற்கண்ட மாவட்டங்களில் முதல்கட்டமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தொட்டில் குழந்தை திட்டப்படி, அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்களுடன் கூடிய சிறப்பு மையங்கள் நிறுவப்பட்டன. தங்கள் பச்சிளம் பெண் குழந்தையை வளர்க்க முடியாமல் தவிக்கும் பெற்றோர், அக்குழந்தையை தாங்களாக முன்வந்து அரசின் தொட்டில்குழந்தை திட்டத்தில் ஒப்படைத்துச் செல்லலாம். அப்படி குழந்தையை ஒப்படைப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும், அச்சம், தயக்கம், திட்டம் பற்றிய அறியாமையால், பெற்றோர்களால் குப்பைத் தொட்டிகள், முட்புதர்களில் விட்டுச் செல்லப்படும் குழந்தைகளை, பொதுமக்களே நேரடியாகவோ அல்லது காவல் துறையினரின் மூலமாகவோ அரசு காப்பகங்களில் ஒப்படைக்கவும் வழிசெய்யப்பட்டது. அந்தக் குழந்தைகள் அரசு மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களிலேயே வளர்க்கப்பட்டனர். மேலும் இத்திட்டத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தத்துக்கொடுக்கப்பட்டும் வந்தனர். குறிப்பாக, இத்திட்டத்தால் தமிழகத்தில் பெண் சிசுக்கொலையின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.
ஜெயலலிதா

தொடர்ந்து 2001-ம் ஆண்டு, தான் இரண்டாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தொட்டில் குழந்தை திட்டத்தை தருமபுரி, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கும், பின்னர் 2011-ம் ஆண்டு திருவண்ணாமலை, பெரம்பலூர், கடலூர், அரியலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தினார் ஜெயலலிதா. இத்திட்டம் கிராமப்புறப் பகுதிகளில் பெண் குழந்தைகளை வளர்க்க வழியில்லாமல் தவித்த குடும்பங்களுக்கு பேருதவியாக இருந்தது.

2001-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என்ற நிலையில் பாலின விகிதம் இருந்தது. இந்நிலையில் 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆண், பெண் குழந்தை பாலின விகிதம் 1000:946 என உயர்ந்துள்ளது. குறிப்பாக பெண் சிசுக்கொலை அதிகமாக நடைபெற்ற மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் மிக அதிக அளவில் உயர்ந்திருப்பது தெரியவந்தது.  அதன்படி...

சேலம் - 851 லிருந்து 917
தருமபுரி - 826 லிருந்து 911
மதுரை - 926 லிருந்து 939
தேனி - 891 லிருந்து 937
திண்டுக்கல் - 930 லிருந்து 942

இந்த வளர்ச்சிக்கு, தொட்டில் குழந்தை திட்டமே காரணமாக அமைந்தது.

ஜெயலலிதா

ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றி, அவர்களை வளர்த்து ஆளாக்கிய இத்திட்டம் இன்றுவரை நடைமுறையில் இருக்கின்றது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழ்பாடும் பல திட்டங்களில் முதன்மையான திட்டமாக இது திகழும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக 1994-ம் ஆண்டு தமிழகம் வந்த அன்னை தெரசா, அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய தொட்டில் குழந்தை திட்டத்தை உளமாற பாராட்டி, மேலும் இத்திட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு சொன்னார்.

ஆனால், சமீபகாலமாக இத்திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதனால், தற்போது இத்திட்டத்தில் போதிய அளவில் பெண் குழந்தைகள் ஒப்படைக்கப்படுவதில்லை. பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் கொலைசெய்யப்படுவது ஒருபுறம் இருக்க, இன்று கருவிலேயே பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் பெண் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் செயல்பாடுகளும் இத்திட்டத்தின் அவசியத்தையும் நோக்கத்தையும் சிதைப்பதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா

1992, 2001, 2011-ம் ஆண்டுகளில் பல்வேறு வகைகளிலும் ஊக்குவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் இன்று சற்றே செயல்பாடு இழந்து காணப்படுகிறது. இத்திட்டத்தை ஜெயலலிதாவின் வழிவந்த, அப்போதைய அமைச்சரும் இன்றைய முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தன் தலைமையில் செயல்படும் தற்போதைய அரசின் மூலம் மீண்டும் நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும். பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகள் சட்டத்துக்குப் புறம்பான முறையில் தத்துக்கொடுக்கப்படுவது போன்றவற்றைத் தடுக்க, மீண்டும் இத்திட்டம் புத்துயிர் பெற வேண்டும்.

தொட்டில் குழந்தைத் திட்டம், இன்னும் பல்லாண்டுக்கு ஜெயலலிதாவின் புகழைச் சொல்ல வேண்டும்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.