Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 27, 2016

‘அப்போலோவில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு நான் எழுதிய கடிதம்’ - வைகோ



"ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, 21-ம் தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவிடம் கொடுத்து விடுங்கள் என்று ஒரு கடிதத்தை பூங்குன்றனிடம் கொடுத்தேன். அந்த கடிதம் முதல்வருக்கு சென்றதோ, இல்லையோ தெரியவில்லை. அவர் 5-ம் தேதி அவர் மரணம் அடைந்துவிட்டார்," என கோவையில் நடந்த திராவிடர் இயக்கக் கொள்கை பிரகடன நூற்றாண்டு விழாவில் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடைசி கடிதத்தை நினைவு கூர்ந்தார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் இயக்க கொள்கை பிரகடன நூற்றாண்டு விழா கோவையில் இரு தினங்கள் நடந்தது. தந்தை  பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடந்த இந்த விழாவில், மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.



விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், "பெரியார் பதவிகளை விரும்பவில்லை அப்படி அவர் ஆசைப்பட்டிருந்தால் ஒரு அழிக்க முடியாத பெரும் கட்சியை உருவாக்கியிருப்பார் . தி.மு.க ,அ.தி.மு.க , ம.தி.மு.க போன்ற கட்சிகள் திராவிடத்தில் இருந்து வந்தவை. ஆனால் அவைகள் அனைத்தையும் பெரியாரியத்துவத்தோடு சேர்த்து பார்க்கக்கூடாது. அரசியலில் சமரசங்கள் இருக்கும். அப்படி இல்லை என்றால் கட்சியைத் தொடர்ந்து நடத்த முடியாது. அரசியல் கட்சிகள் எல்லா ஜாதியையும், மதத்தையும், நம்பிக்கையும் மதித்து செல்லவேண்டும் அதில் கொண்டுபோய் திராவிடத்தை புகுத்திப் பார்க்கக் கூடாது. சில நெளிவு, சுழிவுகளை கண்டதாலேயே. அண்ணா, கலைஞர் போன்ற மூத்த தலைவர்கள் கட்சியை நடத்த முடிந்தது. சமூக நீதி  மிக அவசியம். அப்போது தான் அனைவரும் வெற்றி காண முடியும். பெரியாரியத்துக்கு முழுமையான நிலைபாடும் கிடைக்கும்,"என்றார்.



விழாவின் இறுதியாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். "திராவிடம் அழிந்திவிடும் என்று ஆகாயத்தில் மனக்கோட்டை கட்டிக்கொண்டு தொலைக்காட்சிகளிலும் விதமாக பேசுகின்றனர். அதுவும் எல்லாரையும் துச்சமாக நினைத்து வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று எதையாவது பேசுகின்றார்கள் ஆனால் அது ஒரு போதும் நடக்காது. தி.மு.க, அ.தி.மு.க போன்ற திராவிடக்கட்சிகள் சற்று சரிவை சந்தித்துவிட்டது. எனவே திராவிட கட்சிகள் நீர்த்து போகும் என்று எண்ணுகிறார்கள். திராவிட கட்சிகளை ஒரு போதும் அழிக்க முடியாது. வாக்கு வங்கி, தொண்டர்படை, எல்லாம் நிரந்தரம் அல்ல அதற்காக ம.தி.மு.க ஒரு போதும் கவலைப்பட்டதில்லை.

பிரபாகரன் வெறும் 28 பேருடன் வன்னிக்காட்டுக்குச் சென்றார். அதைப்போல் நாங்களும் அஞ்சாமல் குறைந்த ஆட்களுடன் போராடுவோம். வீர சிவாஜியின் சிலையை அரபிக்கடலின் நடுவே பிரதமர் மோடி 3,600 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை நான் எதிர்க்கவில்லை. ஆனால் தமிழகத்தில் தான் பல தலைவர்கள் வீர நெஞ்சை காட்டி வால் ஏந்தி போராடியுள்ளார்கள். அவர்களையும் நினைத்து பார்கவேண்டும் என்று தான் சொல்கிறேன்.



ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, 21-ம் தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவிடம் கொடுத்து விடுங்கள் என்று ஒரு கடிதத்தை பூங்குன்றனிடம் கொடுத்தேன். அந்த கடிதம் முதல்வருக்கு சென்றதோ, இல்லையோ தெரியவில்லை. அவர் 5-ம் தேதி அவர் மரணம் அடைந்துவிட்டார். ஒன்றரை பக்கத்துக்கு நான் எழுதிய அந்த கடிதத்தில் நீதிக்கட்சித் தலைவர் டி.எம் .நாயர் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். இதைப்பற்றி நான் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. இப்போது தான் சொல்கிறேன்.

மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் என்ற மும்மொழிக் கொள்கையை ஊக்குவிக்கிறது. இது நம் மொழி, பண்பாடுகளை அழிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சியாகும். தமிழகத்தில் தமிழை ஆட்சி மொழியாகவும், நீதி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் ஆக்க வேண்டும். எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இலங்கையில் சுதந்திர தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார்.

ஈழ யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அது வேறொரு பரிணாமத்தில் வலுப்பெற்று வருகிறது. அது ஆயுதம் தாங்கிய போராட்டமாக இருக்காது. தம் பக்கம் உள்ள நியாயங்களை உலக நாடுகளிடம் பதிவு செய்யும் வகையில் இருக்கும். திராவிட இயக்கங்கள் ஒருங்கிணைந்து இலங்கையில் தமிழ் ஈழம் அமைய பாடுபட வேண்டும். அங்கு ஈழம் அமைவதைப் பார்த்து விட்டு தான் என் கண்கள் மூடும்," என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.