Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 2, 2016

அடுத்தவாரம் கருணாநிதி பெங்களூரு பயணம் - ஏன்?


கருணாநிதி உடல்நிலை

தி.மு.க தலைவர் கருணாநிதி அடுத்தவாரம் பெங்களூரு செல்ல உள்ளார். பெங்களூரு, ராம்நகர் மாவட்டம், கரிகாலே தொட்டி கிராமத்தில், கருணாநிதியின் மூத்தமகள் செல்வியின் வீடு உள்ளது. கருணாநிதி, அங்கு தங்கி ஓய்வெடுப்பதற்காக இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. காரணம், கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே கோபாலபுரம் வீட்டை விட்டு கருணாநிதி எங்கும் செல்லவில்லை. அவருக்கு ஏற்பட்ட தோல் அலர்ஜி பிரச்னையால், வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தார். அக்டோபர் 25-ம் தேதி, “தலைவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால், அவரைப் பார்க்க தொண்டர்கள் யாரும் வரவேண்டாம்” என்று அறிவாலயத்தில் இருந்து அதிகாரபூர்வ அறிக்கை வந்தது. அதனால், தொண்டர்கள் வருகையும் சந்திப்பும் முற்றிலும் நின்றுபோனது. கனிமொழி, ராஜாத்தி அம்மாளின் மேற்பார்வையில், கோபாலபுரம் வீட்டுக்குள் மட்டுமே அவர் இருந்தார். தற்போது அவருக்கு உடல்நிலை ஓரளவு குணமடைந்துவிட்டது.

ஸ்டாலின்-அழகிரி சந்திப்பா?

கருணாநிதி உடல்நிலை கொஞ்சம் சீரடைந்ததை அடுத்து, தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனை மட்டும், கடந்த நவம்பர் 24-ம் தேதி கருணாநிதி சந்தித்தார். ஆனால், அவர் உடல்நிலை கொஞ்சம் சரியானதும், ஸ்டாலினுக்கு துணைச் செயலாளர் பதவி, அழகிரிக்குப் பொறுப்பு என்று சர்ச்சைகள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன. சசோதரர்கள் சந்திப்பு என்று செய்திகள் வந்தன. ஆனால், கடந்த 30-ம் தேதி, கருணாநிதியை உடல்நலம் விசாரிக்க அழகிரி வந்திருந்தார். அந்த நேரம் மு.க.ஸ்டாலினும் கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார். அழகிரி, துரைமுருகன், ஜெகத்ரட்சகன் அமர்ந்திருந்தபோது, ஸ்டாலினும் அங்கு சிறுதுநேரம் அமர்ந்திருந்துவிட்டு திரும்பிவிட்டார். அப்போது சகோதரர்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், இதுபற்றி வெளிவந்த செய்திகள், தி.மு.க-வைச் சுற்றி சர்ச்சை அலைகளை அடிக்க வைத்தது. மேலும், கருணாநிதி உடல்நலம் தேறிவிட்டார் என்ற செய்தி கேள்விப்பட்டு, தொண்டர்கள் வருகை மீண்டும் தொடங்கிவிட்டது.



பெங்களூருவில் பூரண ஓய்வு

தி.மு.க-வைச் சுற்றும் சர்ச்சைகள், மு.க.ஸ்டாலினுக்குப் புதிய பதவி, அழகிரிக்கு மீண்டும் பொறுப்பு, தொண்டர்களின் வருகை மேலும் ஒரு மாதத்துக்கும் அதிகமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்ததுபோன்ற  காரணங்களால், கருணாநிதிக்கு பூரண ஓய்வு, புதிய சூழல் அவசியமாகிறது. அதற்காக, டாக்டர்கள் மற்றும் செல்வியின் யோசனைப்படி, கருணாநிதியை பெங்களூரு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. கருணாநிதியும் அதற்கு ஒத்துக்கொண்டார். பெங்களூரு பயணத்திற்கு முன்பு, முழு உடல் பரிசோதனை ஒன்றும் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தினர். தற்போது, அதற்காகத்தான் காவேரி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். உடல்பரிசோதனை முடிந்து மருத்துவமனையில் கருணாநிதி இரண்டு நாட்கள் தங்கியிருப்பார். வரும் 4 அல்லது 5-ம் தேதி அவர் வீடு திரும்பலாம். அதன்பிறகு, ஓரிரு நாட்களில் அவர் பெங்களூரு பயணம் மேற்கொள்ளலாம். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.