Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 30, 2016

"போரில் இறப்பு இயல்புதான்!’’ செல்லாக்காசு 50 நாள் சர்வே முடிவு!


இந்தியாவில் இப்படியான அதிரடியான செயல்திட்டங்கள் அமலுக்கு வருவது புதிதுதான். கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு, பிரதமர் நரேந்திர மோடி, ‘பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என அதிரடியாக அறிவித்ததை அடுத்து, தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற... வங்கிகளையும் ஏ.டி.எம் பண டெபாசிட் மையங்களையும் முற்றுகையிடத் தொடங்கினார்கள். புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் முதலில் புழக்கத்தில் விடப்பட்டன. சற்றுத் தாமதமாக, புதிய 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்துக்கு வந்தன. நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ‘‘கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்றும், 50 நாட்களில் நிலைமைச் சீரடையும் என்றும், அதுவரை நாட்டு நலனில் அக்கறை கொண்டு இதுதொடர்பாக எழும் இன்னல்களை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றும் மோடி கூறினார்.

மோடியின் இந்த அதிரடி நடவடிக்கையை வரவேற்றும்... எதிர்த்தும் பலர் தங்கள் கருத்துகளை முன்வைத்தார்கள். பொருளாதார நிபுணர்களும் சர்வதேசப் பத்திரிகைகளும் மோடியின் நடவடிக்கையுடன் முரண்பட்டன. ‘அமெரிக்காவே’ இந்தச் செயலைத் துணிந்து செய்திருக்காது’ என்றார்கள். ‘வங்கியிலேயே மோசடி நடக்கிறது என்றும், வங்கியில்... வரிசையில் நின்றபடியே பலர் உயிரிழந்துள்ளனர் என்றும், கறுப்புப் பணம் வைத்திருக்கும் சிலரைப் பிடிக்க நாட்டையே இயங்காமல் செய்வது தவறு’ என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

‘எல்லையில் ராணுவ வீரர்கள் மக்களைக் காப்பாற்ற 24 மணிநேரமும் நின்றபடி இருக்கும்போது... அதே நாட்டில், நலனுக்காக மக்களால் நிற்க முடியாதா’ என்று இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்கள், கருத்துக் கூறி வந்தார்கள். இதற்கிடையே, புதிய 2,000 ரூபாய் கட்டுகளை வைத்திருந்ததாக நாட்டில் பலர் போலீஸாரிடம் பிடிபட்டார்கள். அதில், பாரதிய ஜனதா பிரமுகர்களும் அடக்கம். 50 நாட்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், கறுப்புப் பணம் மீட்கப்பட்டுவிட்டதா... நிலைமை சீரடைந்துவிட்டதா என்கிற கேள்வி மக்களிடம் எஞ்சியிருந்தது. இதையடுத்து அவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதற்கான பதில்கள் கீழ்வருமாறு...

1. Demonetization-ன் 50-வது தினம் இன்று. பிரதமரின் இந்த நடவடிக்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?





2. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை வெற்றி அடைந்ததா?





3. இந்த நடவடிக்கையால் சாமான்யர்களின் பொருளாதாரம்...?






4. ஏ.டி.எம்-களில் சுலபமாகப் பணம் கிடைக்கிறதா?





5. ‘‘50 நாட்களில் நிலைமை சீராகவில்லை என்றால்... என்னைக் கொளுத்திவிடுங்கள்’’ என்று பிரதமர் மோடி சொன்னார். இப்போது நிலை?





6. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையால், 150-க்கும் மேற்பட்ட மக்கள் 50 நாட்களில் இறந்து இருக்கிறார்கள்... இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

- என்கிற கேள்விக்கு பெருவாரியான கருத்துகள் கூறப்பட்டிருந்தன. அவற்றில் கவனம் ஈர்த்த சில கருத்துகள்...

* இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்களால்தான் இது பெரிய விஷயமாக்கப்படுகிறது. ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், அதில் இப்படியான தவறுகள் ஏற்படுவது இயல்பே. இது செய்து முடிக்க மிகக் கடினமான செயல்பாடுதான். இழப்புக்காக வருந்துகிறோம், இதனை யாரும் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் லஞ்ச ஊழலற்ற இந்தியாவை எதிர்பார்க்கும் எல்லோரும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளித்திருக்க வேண்டும்.

* அரசியல்வாதிகளிடமும், பெருவணிகர்களிடமும்தான் இதனை மோடி அமல்படுத்தி இருக்க வேண்டும். மக்களின் இயல்பு வாழ்க்கையையும் அவர் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். இவை, அனைத்தையும் பாதித்தது நடுத்தரவர்க்க மக்களைத்தான்.

* யாரோ திருடிய பணத்துக்கு ஏழைகள் உயிரைவிடுவது சரியா? ‘100 குற்றவாளிகள் தப்பிக்கலாம்... ஆனால், ஒரு நிரபராதி தண்டனை பெறக் கூடாது.’ இது, நமது தாரக மந்திரம். ஆனால், 10 குற்றவாளிகள் திருடிய பணத்துக்காகக் கோடிக்கணக்கான ஏழைகளை வரிசையில் நிற்கவைத்ததும், அவர்களைக் கொன்றதும் மிகக் கடுமையான குற்றம். இதற்கு மோடி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கலாம். இன்னும் மிக அதிகமான கருத்துகள் என்னிடம் உள்ளன. ஆனால், ஒரு சாதாரண குடிமகன் அரசை எதிர்ப்பது, “தனி மனிதனாகக் கடலில் சர்க்கரையைப் போட்டு அதனை இனிப்பாக மாற்ற நினைப்பதைப் போன்றது.’’ அவ்வளவு அரசியல் அசுத்தம், நம் இந்திய நாட்டில் உள்ளது.

* வங்கிக்கு வருவதற்கு முன்பு, தங்கள் உடல் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்துக்கொண்டு... பிறகு, வங்கிகளுக்குச் சென்றிருக்க வேண்டும். ஜியோ சிம் வாங்க வரிசையில் நிற்கிறார்கள்; மால்களில் தள்ளுபடிக்குப் பொருட்களை வாங்க வரிசையில் நிற்கிறார்கள்; கோயில்களில் கடவுளைப் பார்க்க வரிசையில் நிற்கிறார்கள். அதுபோலத்தான் இதுவும். எல்லாவற்றுக்கும் மோடியைக் குறை கூறக் கூடாது.

* நல்ல நடவடிக்கை. ஆனால், திட்டமிடலில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

* நரேந்திர மோடியைப்போல வலுவான துணிச்சலான தலைவர்தான் இந்த நாட்டுக்குத் தேவை.

* செல்லாக்காசு என அறிவிப்பதால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை முன்னரே தீர ஆராய்ந்த பிறகு, இந்த நடவடிக்கையை அமல்படுத்தியிருக்க வேண்டும்.

* போரில் இறப்பது இயல்புதான். ஒவ்வொருநாளும் சாலை விபத்துகளிலும் இயற்கைப் பேரிடர்களிலும் எத்தனைப் பேரை இழந்துகொண்டிருக்கிறோம்... அத்தனைக்கும் மோடியைக் குற்றம்சாட்ட முடியுமா?

* இதற்கு மோடி காரணமில்லை. தங்கள் வங்கியின் வரிசையில் வயதானவர்கள் நிற்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்களுக்கென தனியே விரைவாகச் செயல்படாமல்விட்ட அந்த வங்கி மேனேஜர்கள்தான் 100 சதவிகிதம் குற்றவாளிகள்.

*  இது நல்ல திட்டம். ஆனால், செயல்படுத்துவதில்தான் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. இழந்த உயிர்களுக்காகப் பிரார்த்தனை செய்வோம். கறுப்புப் பண முதலைகளை விரைந்து பிடிப்பதுதான் அந்த இழப்புகளுக்கு நம் அரசு தரவேண்டிய சரியான பதில்.

* புதிய 500 ரூபாய் நோட்டுகளை முன்னரே புழக்கத்தில் விட்டிருந்தால் பொதுமக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.