Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 28, 2016

கரும்பு விலையில் ரூ.550 உயர்த்தி டன்னுக்கு ரூ.2,850 ஆக நிர்ணயம்: முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு


கரும்பு விவசாயிகளின் நலன் கருதி டன் ஒன்றுக்கு ரூ. 2,850 விலை நிர்ணயம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகளிலும் உயர் அளவில் கரும்புக்கான மாநில பரிந்துரை விலையை நிர்ணயம் செய்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்படும் இந்த அரசு அதேபோன்று கரும்புக்கான மாநில பரிந்துரை விலையை நிர்ணயம் செய்ய முடிவெடுத்துள்ளது.

நடப்பு கரும்பு பருவத்தில் கரும்புக்கான மாநில பரிந்துரை விலையை நிர்ணயம் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் திங்கட்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

நடப்பு 2016-17 கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு ரூ.2,300 என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு நிர்ணயித்த அதே தொகையான ரூ.2,300 என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பெரும்பாலான ஆலைகள் டன் ஒன்றுக்கு ரூ.2,600 வழங்கி வருகின்றன. அதே போன்று மகாராஷ்டிராவில் பெரும்பாலான ஆலைகள் டன் ஒன்றுக்கு ரூ.2,475 வழங்கி வருகின்றன.

கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, கடந்த ஆண்டு நிர்ணயித்ததைப் போலவே, மாநில அரசு பரிந்துரை விலையாக, போக்குவரத்து செலவு 100 ரூபாய் உட்பட, 2,850 ரூபாய் என விலை நிர்ணயம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு நிர்ணயித்த ஆதாய விலையான 2,300 ரூபாய் என்பதற்குப் பதில் தமிழக கரும்பு விவசாயிகள் டன் ஒன்றுக்கு 2,850 ரூபாய், அதாவது கூடுதலாக 550 ரூபாய், பெற வழி வகை ஏற்படும்.

கரும்பு உற்பத்தித் திறனை உயர்த்தவும், சொட்டு நீர்ப்பாசன வசதிகளை கரும்பு விவசாயத்திற்கு அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேளாண்மைத் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்திடவும், சர்க்கரை ஆலைகளின் லாபத்தில் உரிய பங்கு பெறும் வகையிலும் கரும்பு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்க விவசாயிகள், சர்க்கரை ஆலை பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்திடவும் நான் உத்தரவிட்டுள்ளேன்'' என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.