Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 26, 2016

'ஆண்ட்ராய்டு இருந்தால் தான் காய்கறியா?' 'இ வேலட்' ரோட்டோர வியாபாரியின் புலம்பல்


காய்கறி வாங்க வர்ற எல்லோர்கிட்டயும், ஆன்ராய்டு போனை எதிர்பார்க்க முடியுமா? இல்லை ஆன்ராய்டு போன் இருந்தால் தான் காய்கறினு சொல்ல முடியுமா? வேற வழியில்லாம இதை செஞ்சுட்டு இருக்கோம்," என இ வேலட் முறைக்கு மாறிய ரோட்டோர வியாபாரி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதிக்கு உட்பட்ட ஆட்டையம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி மணி ரங்கசாமி. விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாததால், விவசாயத்தை விட்டுவிட்டு அவிநாசி - சேவூர் சாலையின் ரோட்டோரத்தில் கடந்த சில வருடங்களாக காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்பகுதி மக்களிடம் காய்கறிகளை சில்லரை வியாபாரத்தில் விற்று பிழைப்பை நடத்தி வரும் மணி,  500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு வந்தது முதற்கொண்டு தனது காய்கறி வியாபாரத்தில் பெருத்த நஷ்டத்தையே சந்தித்து வந்திருக்கிறார். மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துவிட்டதால், காய்கறி வாங்க வரும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 2000 ரூபாய் நோட்டுகளையே நீட்டுகிறார்கள். இதனால் சில்லரை கொடுக்க முடியாத சூழ்நிலையில் வியாபாரத்தில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.



இந்த சில்லரை தட்டுப்பாடு பிரச்னை விரைவில் ஓயாது என்று யோசித்த மணி, தனது மகனின் யோசனையை கேட்டு தன் வியாபாரத்தில் 'இ - வேலட்' முறையை புகுத்தியிருக்கிறார். தற்போது "பே டி எம்" அப்ளிகேஷனைப் பயன்படுத்தி இ வேலட் மூலம் தன்னுடைய வியாபாரத்தை நடத்த துவங்கி இருக்கிறார்.

இது தொடர்பாக மணியிடம் பேசினோம். "இங்கு வரும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 200, 300 ரூபாய்க்கு தான் காய்கறிகளை வாங்குவார்கள். ஆனால் வாங்கிய காய்கறிகளுக்கு ஒவ்வொருவரும் 2000 ருபாய் நோட்டையே கொடுக்கிறார்கள். சில்லரை இல்லை என்று சொன்னால் காய்கறிகளைப் போட்டுவிட்டு, நேரே சூப்பர் மார்கெட்டுக்கு செல்கின்றனர். பொதுமக்களையும் தவறு சொல்ல முடியாது.  இது தொடர்ந்து நீடித்து வந்ததால், மிகுந்த சிரமமடைய நேரிட்டது.

அப்போது தான் கல்லூரியில் படிக்கும் என் மகன் இந்த "இ - வேலட்" பண பரிவர்த்தனை பற்றி கற்றுக்கொடுத்தான். ஆனால் இதை எப்படி வியாபாரத்தில் புகுத்துவது என்ற தயக்கம்தான் அதிகமாக இருந்தது. சோதனை முயற்சியாக செய்து பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன். வரும் வாடிக்கையாளர்கள் பலருக்கும் "இ - வேலட்" பற்றி தெரிந்திருக்கவில்லை. எனவே கல்லூரி விடுமுறை தினத்தன்று மகனையும் அழைத்து வந்து "இ-வேலட்" பற்றி தெரியாத வாடிக்கையாளர்களுக்கும் கற்றுத்தர ஏற்பாடு செய்தேன். அதன் மூலம் 20 ரூபாய், 30 ரூபாய்... ஏன்....? 5 ரூபாய்க்கு கொத்தமல்லித் தழை வாங்குபவரிடம் கூட இ -வேலட் மூலம் பண பரிவர்த்தனை செய்ய துவங்கினேன்.



இப்படியே இ -வேலட் மூலமா இங்க பணத்தை வாங்கிட்டு, நாளைக்கு வியாபாரத்துக்கு சரக்கு எடுக்கற இடத்துல எப்படி பணத்தை கொடுக்கறதுங்கறது பிரச்னையா இருக்கு. இருந்தாலும் முயற்சித்து பார்க்கலாம்னு துவங்கி இருக்கேன். இந்த "இ-வேலட்" பண பரிவர்த்தனையால் வியாபாரத்துல இருந்த பிரச்னைகள் தீர்ந்துட்டதா சொல்ல முடியாது. ஆன்ட்ராய்டு ஃபோன் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த இ -வேலட்டை பயன்படுத்த முடியும் என்பதால் இது ஒரு முழுமையான வியாபார யுக்தியாக இருப்பதில்லை. ஒரு தேவைக்காக மட்டுமே இந்த இ -வேலட் முறையை வைத்துக்கொள்ள முடிகிறது. காய்கறி வாங்க வர்றவங்க எல்லாருமா ஆன்ட்ராய்டு போன தூக்கிட்டு வருவாங்க?.

இல்லை. ஆன்ட்ராய்டு போன் வெச்சிருக்கறவங்க வீட்ல மட்டும் அடுப்பு எரிஞ்சா போதுமா? மின்சார வசதியே இல்லாத குடிசைகள் இங்க எத்தனை இருக்குன்னு தெரியுமாங்க? விவசாயிங்ககிட்ட அன்னன்னைக்கு காய்கறிகளை வாங்கிட்டு வந்து வியாபாரத்தை நடத்தி, நாலு காசு பார்த்துட்டு இருந்தோம். இப்போ வேற வழியில்லாமத்தான் இந்த முயற்சியில் இறங்கியிருக்கோம்.

நிறைய பேர் இ - வேலட் எல்லாம் தெரியாது. டெபிட் கார்டு இருக்கு, ஸ்வைப் பண்ணிக்கலாமானு தான் கேக்கறாங்க. "ஸ்வைப் மெஷின்"  பத்தி வங்கிகளில் விசாரிக்கப் போனா, 'ஆர்.சி வேணும், கரண்ட் அக்கவுண்ட் வேணும்'னு கேக்கறாங்க. ஸ்வைப் மெஷினுக்கு 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் தொகையும், 600 ரூபாய் வாடகையும் தரணுமாம், ஸ்வைப் மெஷின் மூலம் ஆகும் வியாபாரத்தில் 100 ரூபாய்க்கு 1 ரூபாய் வீதம் சர்வீஸ் சார்ஜூம் கொடுக்கணுமாம். அப்படியே இதுக்கெல்லாம் சரின்னு சொன்னாலும் மெஷின் இப்போதைக்கு கிடைக்காதம். டிமாண்ட்ல இருக்காம். என்னமோ போங்க," என புலம்பினார்.

97 சதவீதம் பணமாக புழங்கும் இந்திய பொருளாதாரத்தில் திடீரென பணமில்லா பரிவர்த்தனை என்பது சாத்தியம் தானா என்ற கேள்வியை முன்வைத்திருக்கிறது இந்த வியாபாரியின் புலம்பல்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.