Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 9, 2016

செல்லாத நோட்டு:ஒரு மாதத்தில் இதுவெல்லாம்தான் நடந்தது!


நவம்பர் 8-ம் தேதி,'500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத நோட்டு என்று மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. இந்த அறிவிப்பு நாடு முழுவதுமுள்ள மக்களை பரபரப்புக்குள்ளாக்கியது. தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்து ஒரு மாதம் ஆகி விட்டது. கறுப்புப் பணத்தின் மீதான போர் என்று அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கையினால் கடந்த ஒரு மாதத்தில் நடந்தவை என்ன?

நவம்பர் 8-ம் தேதி இரவு 12 மணிக்கு மேல் 500, 1000 செல்லாது என்று மோடி அறிவித்த அடுத்த நொடி, ஏடிஎம்களின் வாசல்களை மக்கள் மொய்த்து எடுத்தார்கள். பெட்ரோல் பங்க், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், பால் பூத்துகள் உள்ளிட்ட இடங்களில் 500, 1000 ரூபாய் பெற்றுக்கொள்ளப்படும் என்று அரசு கூறியிருந்தாலும், அவர்கள் யாரும் 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பெரும்பாலும் வாங்க மறுத்து விட்டார்கள். இதனால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள். இதனால் பலர் பெட்ரோல் போட முடியாமலும், மருத்துவ சிகிச்சை எடுக்க முடியாமலும் திண்டாடினர்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் அளவில் சிறியதாக இருந்ததால் எந்த ஏடிஎம்மிலும் செலுத்த முடியவில்லை. அதற்கேற்ப ஏடிஎம்கள் மாற்றி அமைக்கப்படவில்லை. மேலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படவே இல்லை. வங்கிகள் தங்களிடம் இருக்கிற 100, 50, 20 ரூபாய் நோட்டுகளை வைத்து சில நாட்கள் சமாளித்தன.

இரண்டு மூன்று நாட்களீல் நிலைமை சரியாகி விடும் என்று மோடி கூறினார். ஆனால் இரண்டு நாள் கழித்து ஒரு வாரத்தில் சரிசெய்யப்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். பின்னர் 50 நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று மோடி கூறினார். இப்போது முப்பது நாட்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் ஏடிஎம்கள் பணம் இல்லாமல் மூடிக் கிடக்கின்றன. பணம் இருக்கின்ற ஏடிஎம்களில் மக்கள் வரிசையில் காத்து கிடக்கிறார்கள்.

ரிசர்வ் வங்கியும் அரசும் கொஞ்சமும் திட்டமிடாமல் மாற்றி மாற்றி அறிவிப்புகளை வெளியிட்டு மக்களையும் குழப்பி, வங்கி ஊழியர்களையும் பெரும் சிக்கலுக்குள்ளாக்கினார்கள். ஆரம்பத்தில் ஏடிஎம்களில் ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ. 4000 வரை பணம் எடுக்கலாம் என்றிருந்த நிலையில் ரூ. 2500 ஆகக் குறைத்து பின்னர் மீண்டும் ரூ. 2000 ஆக குறைத்தது. வங்கியில் நேரடியாக எடுப்பதிலும் தொடர்ந்து முரண்பாடான அறிவிப்புகளை வெளியிட்டது. இதனால் மக்கள் பெரும் உளைச்சலுக்கும் அலைச்சலுக்கும் ஆளானார்கள். இதுவரை இந்தியா முழுவதிலும் 84 நான்கு பேர் வங்கி மற்றும் ஏடிஎம்களில் வரிசையில் நிற்கும்போதும், ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டு காரணமாகவும் உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் வங்கி ஊழியர்களும் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கறுப்புப் பணம் யாரெல்லாம் வைத்திருப்பார்களோ அவர்களுக்கெல்லாம், எப்படியெல்லாம் நம்முடைய பணத்தை மாற்றலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த சில நாட்கள்தான் இந்த நடவடிக்கைப் பிரச்னையைக் கொடுத்தது. அடுத்தடுத்து அவர்கள் தங்களுக்கான வழிகளைக் கண்டுபிடித்து ஜரூராக வேலை செய்தனர். தங்கம் வாங்குவது, கமிஷனுக்கு ஆட்களை வைத்து ரூபாய் நோட்டுகளை மாற்றுவது மற்றும் டாஸ்மாக், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மாற்றி விடுவது என பல வழிகளில் வேலை செய்தனர்.

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ. 14.17 லட்சம் கோடி. அவற்றில் இதுவரை ரூ. 11.55 லட்சம் கோடி வரை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய டிசம்பர் 30 வரை கால அவகாசமிருக்கிறது. அதற்குள் மிச்ச சொச்ச பணமும் வங்கியில் டெபாசிட் ஆகிவிடும் போலிருக்கிறது. இந்த நிலையில் எது கறுப்புப் பணம் என்பதே பெரும் கேள்வியாக இருக்கிறது. வங்கியாளர்களின் உதவியுடன் கறுப்புப் பண முதலைகள் ஜன் தன் யோஜனா திட்டத்தில் தொடங்கப்பட்ட கணக்குகளிலும், இதற்கு முன் செயல்படாமல் அல்லது பூஜ்ய இருப்பில் இருந்த கணக்குகளிலும் டெபாசிட் செய்திருக்கிறார்கள். அவர்களை எப்படி அடையாளம் கண்டு பிடிப்பார்கள். இந்தக் கணக்கின் உண்மையான உரிமையாளருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி தொல்லை கொடுப்பார்கள். இதுதான் நடக்கப் போகிறதா?

வங்கிகளுக்கு வந்து சேர வேண்டிய 500 ரூபாய் நோட்டுகள் இன்னமும் வரவில்லை. 500 ரூபாய் நோட்டுகள் இல்லாததால் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கு மதிப்பே இல்லாத நிலை உருவாகி உள்ளது. எங்கும் சில்லறை இல்லாத காரணத்தால் யாரும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதில்லை. அப்படியே வாங்குவதாக இருந்தால் 1000 ரூபாய் பொருட்கள் வாங்குங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்கிறார்கள். ஆனால் பெரும்பாலான வங்கிகளும், ஏடிஎம்களும் 2000 ரூபாய் நோட்டுகளைத்தான் விநியோகிக்கின்றன.

இதனால் பெரும்பாலான சிறு வியாபாரிகளும், சிறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் பெரும்பாலும் இவர்களிடம் தான் பொருட்கள் வாங்கி வந்தார்கள். ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு ஏற்பட்ட பிறகு எல்லோரும் பிளாஸ்டிக் மணி என்ற டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தினர். இதனால் மேலும் பணக்காரர்களே பலனடைந்தனர்.

ஒரு சில இடங்களில் இப்போதுதான், 500 ருபாய் நோட்டுகள் வரத் தொடங்கி உள்ளது. மேலும் இப்போதைக்கு 1000 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் எண்ணம் இல்லை என்று ரிசர்வ்  வங்கி தெரிவித்து விட்டது. கூடுதலாக 100 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் வேலையில் இறங்கி உள்ளது. எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் திடீரென்று எடுக்கப்படும்  முடிவு அதன் லட்சியத்தை எட்ட வேண்டுமெனில், இனியாவது எடுக்கும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு, ஆலோசித்து, பின் விளைவுகளை அறிந்து செயல்படுத்துவது நல்லது.

மோடி சொன்ன 50 நாட்கள் முடிய இன்னும் 20 நாட்களே உள்ளன. அதற்குள்ளாவது,   இந்தப் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்தால் தான் சாதாரண மக்கள் ஓரளவுக்கு தங்களின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்திக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.