December 21, 2016
தமிழகத்தின் அடுத்த தலைமைச்செயலாளர் யார்?
தமிழக தலைமைச்செயலாளர் ராமமோகன ராவ் வீடு மற்றும் அவரது மகன் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலாளர் பதவியில் இருப்பவர் வீட்டில் வருமான வரிச் சோதனை நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்று சொல்லப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் அவரது வீட்டில் சோதனை நடத்தப்படுவதால் எந்நேரமும் அவர் மாற்றப்படலாம் என்று கருதப்படுகிறது. அப்படி அவர் மாற்றப்படும் பட்சத்தில் அடுத்த புதிய தலைமைச் செயலாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிலேயே பல ஆண்டுகள் அனுபவம் படைத்தவர்கள், மூத்தவருக்குத்தான் தலைமைச் செயலாளர் பதவி தரப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால், ராமமோகன ராவ் விஷயத்தில் இந்த மரபு கடைபிடிக்கப்படவில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி வரிசையில் 19-வது இடத்தில் இருந்த ராமமோகன ராவுக்கு மற்ற 18 பேர்களை புறம் தள்ளி விட்டு தலைமைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.
கிரிஜா வைத்தியநாதன்
இப்போது இவருக்கு முன்பு 18 பேரில் ஒருவருக்கு தலைமைச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 18 பேரில் முதலிடத்தில் இருப்பவர் சக்தி காந்ததாஸ். இவர் இப்போது மத்திய அரசுப் பணியில் இருக்கிறார். அவருக்கு அடுத்து இருக்கும் கிரிஜா வைத்தியநாதன் நில நிர்வாகத்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர், கமிஷனராக இருக்கிறார். எல்லோரையும் விட தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இப்போதைக்கு இவர்தான். இவர் எந்தவித சர்ச்சைக்கும் ஆளாகாத ஒருவர் என்கிறார்கள். இவர் சென்னையைச் சேர்ந்தவர். 1981 பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரி அவர். இவருக்கு தலைமைச் செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்கின்றனர். இவர் ஓய்வு பெறுவதற்கு 3 ஆண்டுகள் இருக்கிறது.
வி.கே.ஜெயக்கொடி
18 பேரில் தமிழக கேடரில் இருக்கும் 8 அதிகாரிகள் தற்போது டெல்லியில் இருக்கின்றனர். இவர் தவிர தற்போது ஞானதேசிகன் ஏற்கெனவே தலைமைச் செயலாளர் ஆக இருந்திருக்கிறார். இவர் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். 7-வது இடத்தில் இருக்கும் கே.கந்தன் அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார். இவர் நெல்லையைச் சேர்ந்தவர். 9-வது இடத்தில் அம்புஜ் சர்மா தொழில்துறை இயக்குநர் மற்றும் கமிஷனராக இருக்கிறார். 12-வது இடத்தில் இருக்கும் வி.கே.ஜெயகோடி பவர்பின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். இவருக்கும் தலைமைச் செயலாளர் பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
சண்முகம்
13-வது இடத்தில் இருக்கும் மீனாட்சி ராஜகோபால் கிராமவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிஷனராக இருக்கிறார். 16-வது இடத்தில் இருக்கும் ராஜிவ் ரஞ்சன், நெடுஞ்சாலைத்துறை செயலாளராக இருக்கிறார். இவரும் புதிய தலைமைச் செயலாளர் ஆகும் வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இருக்கிறார். 17-வது இடத்தில் இருக்கும் கே.சண்முகம் நிதித்துறை கூடுதல்முதன்மைச் செயலாளர் ஆகவும் இருக்கிறார். இவருக்கும் தலைமைச் செயலாளர் ஆக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். இவர் நிதித்துறையில் அனுபவம் மிக்கவர் என்கிறார்கள். ஆட்சியாளர்களுடன் வளைந்து போகும் திறன் கொண்டவர் என்றும் சொல்கிறார்கள். 18-வது இடத்தில் இருக்கும் சி.சந்திரமவுலி வணிகவரித்துறை கூடுதல் முதன்மை செயலாளர் கமிஷனராக இருக்கிறார். இவர்களைத் தவிர ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ்-க்கும் தலைமைச் செயலாளர் ஆகும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
சீனியாரிட்டி முக்கியம்
இது குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயத்திடம் கேட்டோம். "தமிழகத்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் டிசம்பர் 31 உடன் ஓய்வு பெறுகின்றனர். தலைமைச் செயலாளர் பதவி என்பது பணி மூப்பு அடிப்படையில்தான் வரவேண்டும். தங்களுக்கு யார் ஏற்றவர்களாக இருக்கின்றனர் என்பதைப் பார்த்து ஆட்சியாளர்கள் நியமிப்பதால் சீனியாரிட்டி பார்ப்பதில்லை. இப்போது மிகவும் மூத்தவர் என்று பார்த்தால் கிரிஜா வைத்திய நாதன் இருக்கிறார். அவருக்கு இன்னும் சில வருடங்கள் பணி இருக்கிறது. அவர் மீது சர்ச்சைகள் ஏதும் இல்லை. விதிமுறைப்படி அவர்தான் நியமிக்கப்பட வேண்டும்" என்றார். ஆனால், தலைமைச் செயலக வட்டாரத்தில் தற்போதைய நிதித்துறை செயலாளர் சண்முகத்துக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.
-கே.பாலசுப்பிரமணி
தமிழகத்தின் அடுத்த தலைமைச்செயலாளர் யார்?
Reviewed by மறத்தமிழன்
on
December 21, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.