Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 26, 2016

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு ஆடம்பர ஏற்பாடுகள்... அசைவ, சைவ சிறப்பு சமையல்!


சென்னை வானகரத்தில் அசைவ, சைவ உணவுகளுடன் ஆடம்பரமாக அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி ஓட்டுமொத்த அ.தி.மு.க தொண்டர்களுக்கும் எழுந்துள்ளது. அதற்கான பதில் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க பொதுக்குழுவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அ.தி.மு.க வட்டாரங்கள் கூறுகையில், "அ.தி.மு.க.வின் பொதுக்குழு வரும் 29-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் அங்கு துரிதமாக நடந்து வருகின்றன. ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது இந்த மண்டபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டம் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அப்போது பொதுக்குழுவுக்கு வந்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினருக்கு அசைவ, சைவ உணவுகள் வழங்கப்பட்டன. அதுபோலவே தற்போதும் ஆடம்பரமாக பொதுக்குழுவை நடத்த கார்டனிலிருந்து உத்தரவு வந்துள்ளது. அதன்பேரில் அமைச்சர், மாவட்டச் செயலாளர் தலைமையில் கட்சியினர் திருமண மண்டபத்தில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் போலீஸாரும்  ஈடுபட்டுள்ளனர்" என்றனர்.

இதுகுறித்து திருவேற்காடு நகராட்சி வட்டாரங்கள் கூறுகையில், "அ.தி.மு.க பொதுக்குழு பணிக்காக திருவேற்காடு நகராட்சியிலிருந்து கமிஷனர், இன்ஜினீயர்கள், ஊழியர்கள் என அனைவரும் சென்றுள்ளனர். பணியில் 4 ஜே.சி.பி இயந்திரங்கள், சாலை அமைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மண்டபத்தைச் சுற்றி உள்ள  சாலைகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள வேகத்தடைகளும் அகற்றப்பட்டுள்ளன. சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக அ.தி.மு.க முக்கிய நிர்வாகி வீட்டிலிருந்து மண்டபம் வரை பிளிச்சிங் பவுடர் போடப்பட்டுள்ளன" என்றனர்.

கெடுபிடி 

போலீஸ் உயரதிகாரிகள் இன்று காலை மண்டபத்துக்குள் வந்தனர். மண்டபத்தின் எதிரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள விவரங்களை அவர்கள் சேகரித்தனர். அப்போது குடியிருப்பில் உள்ளவர்களின் வாகனங்கள் (கார்) தவிர வெளிநபர்களின் கார்களை கூட்டம் நடக்கும் நாளில் அனுமதிக்கக் கூடாது என்று குடியிருப்புவாசிகளிடம் தெரிவித்துள்ளனர். மேலும் மண்டபத்தின் அருகே தனியார் குடோன் ஒன்று உள்ளது. அங்கு தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்லும். வரும் 29-ம் தேதி லாரிகள் குடோனுக்கு வரக்கூடாது என்றும் போலீஸார் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். போலீஸாரின் கெடுபிடியால் பொது மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

இன்னொரு மண்டபம் 

ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தின் அருகில் எம் கண்வென்ஸன் சென்டர் என்ற மண்டபமும் உள்ளது. அதையும் இந்த முறை அ.தி.மு.க.வினர் முன்பதிவு செய்துள்ளனர். ஏனெனில் பொதுக்குழுவுக்கு வருபவர்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். கடந்த பொதுக்குழு கூட்டம் திருவான்மியூரில் நடத்தப்பட்டது. தற்போது ஜெயலலிதா உயிரோடு இல்லை என்ற சென்டிமெண்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் மனதில் உள்ளது. இதனால் மீண்டும் வானகரத்திலேயே பொதுக்குழு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.

சிறப்பு கவனிப்பு 

பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க 4000 பேரும், சிறப்பு அழைப்பாளர்களாக ஆயிரம் பேரும் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கார்கள் நிறுத்தவும் வழிவகை செய்யவே முதல் முறையாக இன்னொரு மண்டபமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். கடந்த 2014ல் நடந்த பொதுக்குழுவில் நகர்மன்ற தலைவர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள் ஆகியோருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முறை அவர்களுக்கு அழைப்பு இல்லையாம். பொதுக்குழுவில் பங்கேற்பவர்கள் அனைவரையும் சிறப்பாக கவனிக்கவும் என்று கார்டனிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

ஜெயலலிதா உயிரோடு இல்லாத இந்த நேரத்தில் பொதுக்குழுவை ஆடம்பரமாக நடத்தினால் சர்ச்சைகளை கிளப்பவும் அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் தயாராகி விட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.