December 26, 2016
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்தது.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து உள்ளது. இந்தியாவிடம் ஏற்கனவே பிருதிவி, ஆகாஷ், நாக், திரிசூல், அக்னி ஏவுகணைகள் உள்ளன. அக்னி ரக ஏவுகணைகளில் அக்னி-1 ஏவுகணை 700 கிலோ மீட்டர் தூரமும், அக்னி-2 ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. தூரமும், அக்னி-3 ஏவுகணை 2,500 கி.மீ. தூரமும், அக்னி-4 ஏவுகணை 3,500 கி.மீ. தூரமும் சென்று தாக்க வல்லவை. இந்த வரிசையில் அக்னி-5 ஏவுகணை மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்.
17.5 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. 1 டன் எடையுள்ள அணுஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரத்துக்கும் அதிகமான கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கக்கூடியது.
இந்த ஏவுகணை முதன் முதலாக 2012-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி சோதித்து பார்க்கப்பட்டது. அதன்பிறகு 2-வது முறையாக 2013-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி சோதனை நடத்தப்பட்டது. பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதி நடத்தப்பட்டது.
இப்போது நான்காவது முறையாக அக்னி-5 ஏவுகணை சோதனை இன்று காலை வெற்றிகரமாக நடந்தது. அக்னி-5 ஏவுகணை தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு உள்ளது. சாலை மார்க்கமாக நகரும் ஏவு வாகனத்தில் இருந்து விண்ணில் செலுத்தும் வகையில் ஏவுகணை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்போது ஏவுகணையானது நகரும் ராணுவ வாகனத்தில் வைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அக்னி-5 ஏவுகணையின் சிறப்பு அம்சங்கள்
துப்பாக்கியில் இருந்து கிளம்பும் புல்லட்டை விட வேகமாக பாய்ந்து செல்லக்கூடியது.
1 டன் எடையுள்ள அணு ஆயுதத்தை சுமந்து செல்லும்.
இந்தியாவுக்கு கிழக்கே சீனா வரையிலும், மேற்கே அனைத்து ஐரோப்பிய நாடுகள் வரையிலும் சென்று தாக்கும் திறன் கொண்டது.
சாலை மார்க்கமாக கொண்டு சென்று இந்தியாவின் எந்த இடத்தில் இருந்தும் இந்த ஏவுகணையை எதிரி இலக்கை நோக்கி ஏவமுடியும்.
அக்னி-5 ஏவுகணையை செலுத்த கட்டுப்பாடு உள்ளது. பிரதமர் நேரடியாக உத்தரவிட்டால்தான் இந்த ஏவுகணையை செலுத்த முடியும்.
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்சு ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளன. அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றியால் இந்தியாவும் இவ்வரிசையில் ஏற்கனவே இடம்பிடித்து உள்ளது.
இந்தியாவின் அடுத்த அக்னி- 6 ஏவுகணையை கட்டமைக்கும் பணியானது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது மிகவும் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு இருக்கும். இந்த ஏவுகணையை நீர் மூழ்கி கப்பல்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவும் வகையில் கட்டமைக்கப்படுகிறது. இந்த ஏவுகணையானது 8000 முதல் 10000 கி.மீட்டர் வரையில் சென்று தாக்கும் வல்லமையுடன் தயாரிக்கப்படுகிறது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது
Reviewed by மறத்தமிழன்
on
December 26, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.