December 4, 2016
2 ஆண்டு போராட்டத்தின் திகில் திருப்பம்… கொலைக்கு உதவிய போலீஸ்!
என் கணவரை கொன்னுட்டாங்க’ என்று இரண்டு ஆண்டுகளாக போராடிய டிரைவரின் மனைவிக்கு நீதிமன்றம் மூலம் நல்ல விடிவு காலம் பிறந்துள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் கோடாரங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். லாரி டிரைவர். இவரது மனைவி முருகம்மாள்.
மணிகண்டன் கடந்த 2.12.2014ல் ஆலடியூர் பாலத்தின் அருகே இறந்து கிடப்பதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி மணிகண்டன், தற்கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் மணிகண்டனை, மணல் கடத்தும் கும்பல் கொலை செய்ததாக முருகம்மாளுக்கு தகவல் தெரியவந்தது.
இதனால், அவர், அம்பாசமுத்திரம் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால், அவர்கள் அதைக் கண்டுக்கொள்ளவில்லை.
இதனால் முருகம்மாள், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் தன்னுடைய கணவரை கொலை செய்து விட்டதாகவும், சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கிடையில் அம்பாசமுத்திரம் போலீஸ் தரப்பில், மணிகண்டன், உடலில் எந்த காயங்களும் இல்லை.
அவர் தற்கொலை செய்துள்ளார் என்றே பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
மணிகண்டனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை.
அதே நேரத்தில் அவரது இறப்புக்கு காரணம் மதுவில் விஷம் கலந்திருப்பது என்று தெரியவந்துள்ளது. இதன்பிறகே இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து முருகம்மாள் கூறுகையில், “என்னுடைய கணவர் மணிகண்டன், சம்பவத்தன்று மயங்கிய நிலையில் கிடப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது.
நாங்கள் சம்பவ இடத்துக்கு செல்வதற்கு முன்பே 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து விட்டு அதில் அவர் தற்கொலை செய்ததாக குறிப்பிட்டனர்.
இந்த சமயத்தில் என்னுடைய கணவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து மணல் கடத்தும் கும்பல் கொலை செய்ததாக எனக்கு தகவல் தெரியவந்தது. அதை போலீஸாரிடம் தெரிவித்தால் என்னுடைய புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் நீதிமன்றத்தின் மூலம் சி.பி.ஐ விசாரணை கேட்டேன். தற்போது அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சி.பி.ஐ விசாரித்தால் என்னுடைய கணவரின் இறப்புக்கான காரணம் தெரியவரும். மேலும், அவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்” என்றார் கண்ணீருடன்.
அம்பாசமுத்திரம் போலீஸாரிடம் பேசிய போது, “எங்களது விசாரணையில் மணிகண்டன், தற்கொலை செய்ததற்கான ஆதாரங்கள் அடிப்படையில் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி இப்போது இங்கு இல்லை என்று சுருக்கமாக முடித்துக் கொண்டனர்.
போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “மணிகண்டன் இறப்புக்குப் பின்னணியில் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் உள்ளார்.
இதனால் இந்த வழக்கு சில போலீஸார் துணையுடன் தற்கொலை என்று மூடி மறைக்கப்பட்டு விட்டது. இரண்டு ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு தற்போது சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சி.பி.ஐ விசாரித்தால் நிச்சயம், இந்த வழக்கில் புதைந்துள்ள மர்மங்கள் வெளியே வரும். மேலும், இந்த வழக்கில் சில போலீஸாருக்கும் தொடர்பு உள்ளது” என்றனர்.
சி.பி.ஐ விசாரித்தால் மணிகண்டனின் மரணத்தில் மறைந்திருக்கும் மர்மங்கள் வெளியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 ஆண்டு போராட்டத்தின் திகில் திருப்பம்… கொலைக்கு உதவிய போலீஸ்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 04, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 04, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.