Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 25, 2016

கறுப்புப் பணம்: சுவிஸ் அரசுடன் சேர்ந்து நாடகமாடுகிறதா மத்திய அரசு?


சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அளிப்பதற்கு சுவிட்சர்லாந்து அரசு சம்மதம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து அரசு இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


டெல்லியில் மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுசில் சந்திராவும், இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து துணைத் தலைமை தூதரக அதிகாரி ஜில்லெஸ் ரூதுயித்தும் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே வங்கி கணக்கு வைத்திருப்போர் பற்றிய தகவல்களை தானாக பரிமாறிக் கொள்வது பற்றிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “கூட்டு பிரகடனத்தின்படி இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் வைத்துள்ள நிதி ஆதாரங்கள் பற்றி அந்நாட்டு அரசாங்கம், 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தகவல்களை அளிக்கத் தொடங்கும். 2018-ம் ஆண்டும், அதைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பட்டியலைத் தானாகவே இந்தியாவுடன் சுவிட்சர்லாந்து அரசு பரிமாறிக் கொள்ளும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால், 2018-ம் ஆண்டுக்கு முந்தைய வங்கி கணக்குகள் பற்றி இரு நாடுகளும் தகவல்களை பரிமாறிக் கொள்வது குறித்து அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் குறித்து ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் கூறுகையில்,"உள்நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதைவிட வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வருவது மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் இதில்தான் அதிக அரசியல்வாதிகளும், ஊழல் பேர்வழிகளும் பணத்தை பதுக்கியுள்ளனர்.

இப்போது இந்திய மற்றும் சுவிட்சர்லாந்து அரசு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவிலிருந்து சுவிஸ் வங்கிக்கு சென்ற ஆண்டிலிருந்தே யாரும் பணத்தை பதுக்குவதாக்க கூறப்படவில்லை. இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் 2018-ம் ஆண்டுக்கு முந்தைய வங்கி கணக்குகள் பற்றி சொல்வதாக இருந்தால்தான் அது உபயோகமாக இருக்கும். மத்திய அரசின் கடந்த பட்ஜெட் சிறை தண்டனை அறிவிப்புக்குப் பின்னர் வெளிநாட்டில் கறுப்புப் பணத்தை பதுக்கிய அனைவரும் சுதாரித்து விட்டனர்.

இப்போது இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து அரசு இடையே ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தில் பெரிய பிரயோஜனம் இருக்காது. 2015க்கு முந்தைய வங்கி கணக்குகள் பற்றி சொன்னால் நன்றாக இருக்கும். ஆனால், அதைத்தவிர்த்து இதுபோன்ற ஒப்பந்தத்தின் மூலம் ஒரு ரூபாயைக்கூட இந்தியாவுக்கு கொண்டுவர முடியாது. இது வெறும் சம்பிரதாயமாகவே கருதப்படும். இது எந்தளவுக்குப் பயன்படும் என்பது தெரியவில்லை. பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.

இந்தியா - சுவிட்சர்லாந்து அரசு இடையே முக்கிய ஒப்பந்தத்தின் மூலம் சுவிஸ் வங்கியில் பதுக்கியவர்களின் கறுப்புப் பணம் இந்தியாவுக்கு மீண்டும் வருமா என்பது கேள்விக்குறியே.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.