Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 30, 2016

“க்யூல நின்னவரே இராணுவ வீரர்தானாம்..!”- அடேங்கப்பா ட்விஸ்ட்


பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டம் நாடு முழுதும் ஒரு தரப்பினரிடம் வரவேற்பைப் பெற்றாலும், இன்னொரு தரப்பினரிடம் எதிர்ப்பையும் கிளப்பி உள்ளது. டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள திட்டம், ஏ.டி.எம் வரிசைகளில் பல மணி நேரம் காத்து நிற்கும் மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. ஏ.டி.எம்-களில் வெறும் 2000 ரூபாய் நோட்டுக்கள் மட்டும் கிடைப்பதால்  அதை சில்லறை மாற்ற படாதபாடுபடுவதால்  "ப்ளான் எல்லாம் நல்லாத்தான் இருக்கு..ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா!” என வடிவேலு பாணியில் பெரும்பாலான மக்கள் நொந்து கொள்கின்றனர். மோடியின் இந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பலர், " எல்லையில் இராணுவ வீரர்களே கால்கள் கடுகடுக்க நின்று காவல் காக்கும்போது நாட்டு நலனுக்காக சிலமணி நேரம் ஏ.டி.எம் வரிசையில் நிற்கக் கூடாதா?’' என்று  கேள்விகள் எழுப்புகின்றனர்.



ஆனால், உண்மையில் முன்னாள் ராணுவ வீரர்களும் தங்கள் பென்ஷன் பணத்தை ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்க பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகின்றனர். பஞ்சாப்பின் லூதியானாவைச் சேர்ந்த  முன்னாள் ராணுவ வீரர் தர்ஷன் தில்லான்  ஒரு கடிதம்  ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.அதில், "அண்மையில் ஏ.டி.எம் வரிசையில் வெகு நேரம் நின்று கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் நிற்பது என நான் கொஞ்சம் சலித்துக்கொண்டேன்.

எனக்குப் பின்னால் இருந்த நபர் ஒருவர்,  'ராணுவ வீரர்கள் எல்லையில் கால் கடுக்க காவல் காக்கும் போது, நான் வரிசையில் நிற்கக் கூடாதா' எனக் கேட்டார். பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும்.  நானும் ராணுவத்தில் இருந்தவன்தான். நீங்கள் சொல்வதுபோல எல்லையில் 20 வருடங்கள் கால் கடுக்க நின்றுள்ளேன்.

ஆனால் அதற்கான பென்ஷனை எடுக்கதான் பல மணி நேரமாக ஏ.டி.எம் முன்பு வரிசையில் நிற்கிறேன் என்பதை மறந்துவிடாதீர்கள். மேலும் தேச பக்தியை ஏ.டி.எம்  க்யூவில் நின்றுதான் காண்பிக்க வேண்டியதில்லை. தவறு நடக்கும்போது ஒன்றாகக் கூடி நின்று தவறைச் சுட்டிக்காட்டுவதுதான் தேசபக்தி. அப்படி தேசபக்தி இருந்தால் எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான ’ஒரே ரேங்க், ஒரே பென்ஷன்’ திட்டத்தை நிறைவேற்றித் தாருங்கள் ” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து  ராணுவ லெப்டினண்ட்டாக இருந்த தில்லானுக்கு ஆதரவு பெருகி வருகிறது. விரைவில் சட்டசபைத் தேர்தலை சந்திக்க உள்ள பஞ்சாப்பில் பி.ஜே.பி-க்கு எதிராகக் களம் இறங்கி இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, தில்லானை தங்கள் கட்சியில் வந்து இணையுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. வேறு சில கட்சிகளும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளன. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.