Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 28, 2016

ரூ.500 கோடி திருமணம் தெரியும்... 500 ரூபாயில் நடந்த திருமணம் தெரியுமா?


நாட்டில் ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வரும்விதமாக பிரதமர் மோடி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த அறிவிப்புக்கு மக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே காணப்படுகிறது. இந்த விவகாரத்தை மையமாக வைத்து எதிர்கட்சிகள் கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளன. பிரதமர் அவைக்கு வந்து விளக்கமளிக்க வேண்டும். மன்னிப்பு கோர வேண்டும், அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்பது  எதிர்கட்சிகளின் முக்கிய கோரிக்கை. மத்திய அரசு  தனது முடிவில் உறுதியாக நிற்கிறது.

திடீர் அறிவிப்பால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஏராளமான துக்கச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இறப்பு ஒரு பக்கம் என்றால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வீட்டார்களும் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். இதனால், திருமண வீட்டார் சில நிபந்தனைகளுடன் இரண்டரை லட்சம் வரை வங்கியில் இருந்து ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது

இது போன்ற நெருக்கடிகளுக்கிடையே கர்நாடக முன்னாள் அமைச்சர்  ஜனார்த்தன ரெட்டி தனது மகள் திருமணத்துக்காக 500 கோடி வரை செலவிட்டார். எல்ஈடி திரையுடன் கூடிய திருமண அழைப்பிதழ் அச்சடிக்க ரூ.5 கோடி. குடும்பத்தினர் அனைவருக்கும் தங்க நகைகள், பட்டுப்புடவைகள் வாங்க ரூ.100 கோடி  நடிகர்- நடிகைகள் கலை நிகழ்ச்சிக்காக ரூ.10 கோடி விருந்தினர்கள் போக்குவரத்துச் செலவுக்காக ரூ.20 கோடி என பணத்தை தண்ணீராக வாரி இறைத்தார் ரெட்டி காரு.

ரெட்டி காரு வாழும் அதே நாட்டில்தான் தற்போது நேர் எதிராக வெறும் 500 ரூபாயில் திருமணம் நடந்துள்ளது. குஜராத்தின் சூரத் நகரைச் சேர்ந்தவர்கள் தக் ஷா- பாரத் பார்மர். இவர்கள் இருவருக்கும் இன்று திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு விட்ட நிலையில், பிரதமர் மோடியின் அறிவிப்பால், திருமண வீட்டார் திகைத்தனர். பலத்த நெருக்கடிக்குள்ளானார்கள். திருமணத்தை  சிறப்பாக நடத்த வேண்டும் என்பது ஆசையாக இருந்தாலும் அவர்களால் போதிய பணத்தை கடைசி வரைத் திரட்ட முடியவில்லை. ஆனால் இரு வீட்டாருமே நிச்சயிக்கப்பட்ட தினத்தில் திருமணத்தை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

இரு வீட்டாருமே சூழ்நிலையை புரிந்து கொண்டார்கள்.பின்னர், திருமணத்தை எளிமையாக முடித்துக் கொள்ளலாம் முடிவெடுத்தனர். வீட்டிலேயே வைத்து தக் ஷா- பாரத் பார்மர் ஜோடியின் திருமணம் எளிமையாக நடந்தது. திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்த அத்தனை விருந்தினர்களும் வந்திருந்தனர்.  சம்பிரதாயங்களுக்கு பின், மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். விருந்தினர்களுக்கு விருந்து எல்லாம் இல்லை.  தண்ணீரும் டீயும் குடித்து விட்டு வாழ்த்தி விட்டு போக வேண்டியதாகி விட்டது.

பஞ்சாப்பில் நடந்த திருமணம் ஒன்றில், மணமக்கள் இருவரும் கையில் ஸ்வைப் மெஷின் வைத்திருப்பது போன்ற புகைப்படமும் வைரல் ஆனது. மணமக்கள் ஸ்வைப் மெஷினை கையில் வைத்திருந்தது போல புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் நகைச்சுவைக்காக  பரப்பியது பின்னர் தெரிய வந்தது. சில இடங்களில் திருமணத்துக்கு ஒரு நாள் முன்னதாக மண அலங்காரத்துடன் மணமக்கள்  வங்கிகளில் கியூவில் நிற்பது போன்ற புகைப்படங்களும் சமூக வலை தளங்களில் பரவி வருகின்றன.

திருமண சீசன் குறித்து மத்திய அரசு யோசித்திருக்க வேண்டும். அல்லது திருமண வீட்டார்களுக்க வேண்டிய சலுகைகளை அளித்திருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.