Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 19, 2016

குழந்தைக்கு பிளாஸ்டிக் பாட்டிலில் பால் கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை!


'பிறந்தது முதல் 2, 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு பால்தான் பிரதான உணவாக இருக்கும். அப்படிக் கொடுக்கப்படும் பாலானது, பெரும்பாலும்குழந்தை பால் பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் (பால் புட்டி) கொடுக்கப்படுகிறது. எளிதில் கிருமித்தொற்று ஏற்படக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களில் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும்போது, சுகாதாரமான முறையைக் கடைபிடிப்பதில் தாய்மார்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மாற்றாக, 10 மாதத்தில் இருந்தே குழந்தையை டம்ளரில் பால் குடிக்கப் பழக்குவது மிகவும் சிறந்தது, பாதுகாப்பானது'' என்று வலியுறுத்தும் குழந்தைகள் நல மருத்துவர் கோபாலகிருஷ்ணன், குழந்தைக்குப் பால்புட்டி பயன்படுத்தும்போது தாய்மார்கள் கட்டாயம் கடைபிடிக்கவேண்டிய  ஆலோசனைகளைக் கூறுகிறார்.

''முன்பெல்லாம் குழந்தை பிறந்ததில் இருந்து முதல் இரண்டு வயதுவரை தாய்ப்பால் கொடுப்பார்கள். இதனால் குழந்தைக்கு அதிக எதிர்ப்புசக்தி கிடைத்தது. மேலும், தேவைப்படும்பட்சத்தில் குழந்தைகளுக்கு பாலாடை அல்லது சங்கடையில்தான்பால் கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு புரை ஏற்படாது.

ஆனால் இன்றைக்கு குழந்தை பிறந்தது முதல் 3-6 மாதங்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுத்துவிட்டு, பிறகு சில ஆண்டுகளுக்கு பாக்கெட்பால் அல்லது பால்பவுடர் பாலைத்தான் தாய்மார்கள் அதிகம் கொடுக்கின்றனர். அதுவும் கால் லிட்டர் முதல் அரைலிட்டர் வரை கொள்ளவு கொண்ட பால் புட்டிகளில் காய்ச்சிய பாலை ஊற்றி குழந்தையின் வாயில் வைத்துவிடுவது ஆரோக்கியமான பழக்கம் அல்ல.

                                                குழந்தை பால்

ப்ளாஸ்டிக் பாட்டிலில் பால் கொடுக்கும்பட்சத்தில், புழக்கத்தில் இருக்கும்  ஆர்டினரி, சிலிக்கான் பாட்டில்களில் ஆர்டினரி பாட்டில்களை தேர்வுசெய்வதே சிறந்தது. அடுத்ததாக, குழந்தைகளைப் படுக்கவைத்து பாட்டில் பாலைப் புகட்டக்கூடாது. இதனால் எளிதில் புரையேற வாய்ப்புள்ளது என்பதால், குழந்தையை தலை மேல் இருக்குமாறு அரவணைத்தோ அல்லது அமரவைத்தோதான் பால் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளில் பால் பாட்டில்களை முறையாகச் சுத்தம் செய்யாவிட்டால், பாட்டிலில் கண்ணுக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஒட்டிக்கொண்டிருக்கும் சிறு அளவு கிருமிகூட கிருமித்தொற்றாக மாறி குழந்தைக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, தொண்டை புண், காதுவலி உள்ளிட்ட, சாதாரணமானது முதல் சீரியஸானதுவரை 13 வகையான பிரச்னைகளை உண்டாக்கக்கூடும். அதனால் ஒவ்வொரு பயன்பாட்டுக்குப் பின்னாரும் பாட்டிலைக் கழுவி வெந்நீரில் இட்டு ஸ்டெரிலைஸ் செய்யவேண்டியது அவசியம்.

ஒரே பால் பாட்டிலை வருடக்கணக்கில் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாதம் ஒருமுறை குழந்தைகளின் பால் பாட்டிலை மாற்றவும்.

ப்ளாஸ்டிக் பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தை பால் தீர்ந்ததும், பால் வெளிவரும் நிப்பிளைக் கடித்து கடித்து ஓட்டையாக்கிவிடும். அந்த ஓட்டையான நிப்பிள் கிருமித்தொற்றுக்கு எளிதில் இலக்காகும். எனவே, நிப்பிலிலும் கவனம் வைக்கவும்.

 பால்


குழந்தை பால் குடிக்கும் நேரம் தவிர்த்து பாட்டிலை சுத்தமான ஓர் இடத்தில் மூடி வைத்திருக்க வேண்டும். மாறாக, பால் தீர்ந்தவுடன் அந்தப் பாட்டில் தரையில் உருண்டு கிடக்க, அடுத்த முறை பால் கொடுக்கும்போது அதைத் தேடி எடுப்பதற்குள் தரையில் உள்ள கிருமிகள் எல்லாம் அதில் இடம்பிடித்திருக்கும்.

குழந்தை தூங்கியபடியே பால் குடிப்பது, தூங்கும்போது பால் பாட்டில் அதன் வாயிலேயே இருப்பது இவையெல்லாம் அதன் பல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் விஷயங்கள். இதனால் குழந்தையின் பால் பற்களில் சொத்தை ஏற்படலாம் என்பதுடன் அதன் பல் வரிசையும் சீரற்ற முறையில் இருக்கும்.

மொத்தத்தில், குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் கொடுப்பது, ஆறு மாதத்தில் இருந்து ஒரு வருடம் வரை தாய்ப்பாலுடன் இணை உணவும் கொடுப்பது என்ற பழக்கத்தை தாய்மார்கள் கைகொள்ள வேண்டும். குழந்தை பசும்பால், பாக்கெட் பால் குடிக்க ஆரம்பிக்கும்போது, ஸ்பூன், சடங்கு, டம்ளர் என்று தாய்மார்கள் கொஞ்சம் மெனக்கெட்டு அதற்குப் பழக்கப்படுத்திவிட்டால், குழந்தைகளுக்கு புட்டிப்பால் ஆபத்துகளைத் தவிர்க்கலாம்!"
                                                                             

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.