Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 30, 2016

முதல்வர் இல்லம் அருகே மட்டும் பணம்... மற்ற ஏ.டி.எம்.கள் காலி.... கடுகடு சி.எம்!


புதுவை : புதுவையில் முதல்வர் வீட்டின் அருகே உள்ள ஏ.டி.எம். 100 ரூபாய் நோட்டுகளுடன் நிரப்பப்பட்டதை கண்டு மகிழ்ந்த புதுவை முதல்வர் நாராயணசாமி, மற்ற ஏ.டி.எம்.கள் அனைத்தும் பணமில்லாமல் காலியாக இருந்ததால் அதிகாரிகளை எச்சரித்தார்.

500, 1000 ரூபாய்கள் செல்லாது என அறிவித்த மத்திய அரசைக் கண்டித்து, புதுவை மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.  லாசுப்பேட்டை, ரெட்டியார்பாளையம் உள்ளிட்ட தொகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார்.

போராட்டத்தை தொடர்ந்து, முதல்வர் வீட்டின் அருகில் இருந்த சிட்டி யூனியன் வங்கிக்கு சென்று ஏ.டி.எம் இயந்திரங்கள் சரியாக இயங்குகின்றதா என்றும் அதில் பணம் வருகிறதா என்றும் ஏ.டி.எம் கார்டை வைத்து பணம் எடுத்துப் பார்த்தார். அப்போது, ஏ.டி.எம்.மில் இருந்து 100 ரூபாய் தாள்கள் வந்ததும் வங்கி அதிகாரிகளை அழைத்து பாராட்டு தெரிவித்ததோடு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு பணம் விநியோகம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.



தொடர்ந்து ஸ்டேட் வங்கியின் தலைமைக் கிளைக்கு சென்று மக்களிடம் பேசினார். "ஸ்டேட் வங்கியின் தலைமை வங்கிக் கிளை இது தான். ஆனால் இங்கே இருக்கிற எந்த ஏ.டி.எம். இயந்திரங்களும் வேலை செய்யவில்லை" என புகார் தெரிவித்தனர். எல்லா ஏ.டி.எம். இயந்திரங்களை சோதித்து பார்த்த நாராயணசாமி, ஏன் எந்த ஏ.டி.எம். இயந்திரங்களிலும் பணம் நிரப்பவில்லை என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பல ஏ.டி.எம்.களில் இதே நிலை நீடிக்கவே, இத்தனை ஏ.டி.எம் இயந்திரங்கள் இருந்தும் ஒன்றில் கூட பணம் இல்லையென்றால் எப்படி? மக்களின் நிலை என்னவாகும். உடனே சரி செய்யுங்கள்" என கடுமையாக எச்சரித்தார்.

முன்னதாக ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்ததைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, "இந்தியாவில் 86 சதவீதம் புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்துவிட்டு வெளிநாடு பறந்து விட்டார் பிரதமர்.  புதியதாக வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டை கடைக்கு எடுத்துச் சென்றால் சில்லறை கிடைப்பதில்லை. இப்போது சில்லறை மாற்றித்தர கமிஷன் வாங்க ஆரம்பித்து விட்டார்கள். கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் எனச்சொல்லி கமிஷனை ஊக்குவித்திருக்கிறார் மோடி.



திருமணத்தை 2.50 லட்சம் ரூபாய்க்குள் நடத்தச் சொல்கிறார்கள். அந்த பணத்துக்கும் எல்லா ஆதாரங்களையும் கொடுக்க வேண்டுமாம். ஆனால் அவரது கட்சியைச் சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி தன்னுடைய மகள் திருமணத்தை 650 கோடி செலவில் நடத்தியுள்ளார். சாமானியர்களுக்கு ஒரு சட்டம். பி.ஜே.பி.யினருக்கு ஒரு சட்டமா?.

ஏழை மக்களும் விவசாயிகளும் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்துள்ள பணத்தை கறுப்புப் பணம் என்று சொல்கிறார்கள். பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஏ.டி.எம்களுக்கு சென்று கார்டை சொறுகினால் பணம் வராமல் வெறும் காற்றுதான் வருகிறது. எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் புழக்கத்தில் இருந்த 86 சதவீத நோட்டுகளை திரும்பப்பெறும்போது அதே மதிப்புக்கு புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடவேண்டும் என்பதை மறந்துவிட்டது மத்திய அரசு. ரூபாய் நோட்டு பிரச்னையால் இதுவரை 65 மக்கள் பலியாகியிருக்கின்றனர்," என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.