Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 18, 2016

கணக்கில் காட்டாத பணம் : வருமான வரி, அபராதம் எப்படி கணக்கிடப்படுகிறது?


கறுப்பு பண ஒழிப்பின் ஓர் அங்கமாக ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வங்கியில் ரொக்கமாக டெபாசிட் செய்தால் வருமான வரி, அபராதம் 200% கட்ட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு தனிநபர்  ஒருவர் வங்கியில் ஓராண்டில் டெபாசிட் செய்யும் வரம்பு  ரூ 10 லட்சம் ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சென்னை வருமான வரி அலுவலக அதிகாரி ஒருவர் கூறும் போது,'' வங்கியில் ரூபாய் 2.5 லட்சம் வரை டெபாசிட் செய்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை. அதற்கு மேல் செலுத்தப்படும் கணக்கில் காட்டப்படாத பணத்துக்கு வருமான வரி, அபராதம், வட்டி செலுத்த வேண்டி வரும். வங்கி கணக்கில் ரொக்கமாக செலுத்தப்படும் உயர் மதிப்பு தொகைக்கு (ரூ.10 லட்சத்துக்கு மேல்) சரியான விளக்கம் அளிக்க முடியாத நிலையில் அந்தத் தொகைக்கு 30% வரி, இந்த வரியின் மீது பிரிவு 270(ஏ) -ன் கீழ் 200% அபராதம் (மொத்த தொகையின் மீது 60%) அபராதம் விதிக்கப்படும். தொகை அதிகரிக்க அதிகரிக்க கட்டும் மொத்த வரி அதிகரித்துக் கொண்டு வரும். உதாரணத்துக்கு 5 லட்ச ரூபாய் வங்கியில் டெபாசிட் ஆக கட்டினால் அபராதத்தையும் சேர்த்து 15% வரி கட்ட வேண்டி வரும். வங்கியில் ரூ. 15 லட்சம் கட்டினால்  மொத்தம் 55% வரி கட்ட வேண்டி வரும்.  மேலும் பிரிவு 234பி மற்றும் 234சி ஆகியவற்றின் கீழ் முன்வரி (அட்வான்ஸ் டேக்ஸ்) கட்டவில்லை என்றால் வட்டி வசூலிக்கப்படும். இது மாதத்துக்கு 1% என்பதாக இருக்கும். இதனையும் சேர்த்தால் வங்கியில் கட்டப்பட்ட தொகை மீது  இன்னும் கூடும்." என்றவர், சற்று நிறுத்தி தொடர்ந்தார்.

'' ஒருவர் கணக்கில் காட்டப்படாத தொகை ரூ.1 கோடியை வங்கி கணக்கில் கட்டினால் மொத்த  அபராதம் 85%, இது தாமதமாக கட்டுவதால் வட்டி சுமார் 10% என்றால் கிட்டத்தட்ட 95%  என்றால் ரூ.95 லட்சம் கழிக்கப்பட்டு மீதி 5 லட்சம்தான் கிடைக்கும். இதில் குறிப்பிட வேண்டியது கடந்த நிதி ஆண்டு 2015-16-க்குதான் இந்த கணக்கீடு. அதற்கு முந்தைய ஆண்டு என்றால் 12% வரை வட்டியாக மட்டுமே கூடுதலாக கட்ட வேண்டி வரும். அதாவது கிட்டத்தட்ட எதுவும் கிடைக்காது. அதேநேரத்தில், வங்கியில் ரொக்கமாக கட்டப்பட்ட தொகை வருமானமாக இருந்து, அது வரிக்கு உட்பட்டதாக இருந்தால் வரி, வட்டி, அபராதம் எதுவும் கட்ட வேண்டி வராது" என்றார்.

 வீட்டில் சேமித்த பணத்தை வங்கியில் செலுத்தும் சிறு வணிகர்கள், குடும்பத் தலைவிகள், கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் வருமான வரித்துறையை நினைத்து பயப்பட தேவையில்லை. அவர்கள் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்தால், வருமான வரித்துறையின் தொந்தரவு இருக்காது.

வரவேண்டிய கடன் தொகை இப்போது லட்சக் கணக்கில் பழைய 500, 1000 நோட்டுகளாக கிடைத்து அதனை  வங்கியில் டெபாசிட் செய்தால் ஏதாவது பிரச்னை ஏற்படுமா? என ஆடிட்டர் கே.ஆர். சத்திய நாராயணனிடம் கேட்டோம்.

'' ரூ.20,000க்கு மேல் கடன் கொடுத்தாலோ, வாங்கினாலோ அதனை ரொக்கமாக கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. அப்படி செய்தால் அது சட்டப்படி தவறு. ரூ. 20,000 தாண்டும் போது காசோலை மூலமாகதான் பணபரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். வாங்கிய கடனை நண்பர், உறவினர் இப்போது கொடுத்தார் என்றால், அதற்கான பணபரிமாற்றம் காசோலை அல்லது ஆன்லைன் மூலம் நடந்திருந்தால் மட்டுமே வருமான வரி அதிகாரி ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இல்லை என்றால் இந்தத் தொகையை இதர வருமானமாக எடுத்துக் கொண்டு வரி விதிக்கப்படும். மேலும் கணக்கில் காட்டாத, சட்ட விரோதமாக சம்பாதித்த பணம் என்றால் சிறைத் தண்டனை கூட விதிக்கப்படலாம்" என்றார்.


வரி ஏய்ப்பு..!

மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா, ''2016 டிசம்பர் 30–ம் வரை வங்கிகளில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் யார் யார் டெபாசிட் செய்கிறார்களோ, அவர்களின் விவரங்களை கேட்டுப் பெற இருக்கிறோம். அவர்கள் டெபாசிட் செய்த தொகையை, அவர்கள் ஏற்கனவே தாக்கல் செய்த வருமான வரி கணக்குடன் ஒப்பிட்டு பார்ப்போம். அவர்கள் டெபாசிட் செய்த தொகை, அவர்களின் வருமான அளவுக்கு பொருந்தாத வகையில் இருந்தால், அது வரி ஏய்ப்பாக கருதப்படும். அவர்களுக்குகு வருமான வரி சட்டத்தின் 270(ஏ) பிரிவின் கீழ், வருமான வரியுடன் 200 சதவிகித அபராதமும் விதிக்கப்படும்.  நகைக்கடைகளில் தங்க நகை வாங்குபவர்கள், வருமான வரி ‘பான்’ எண்ணை அளிக்க வேண்டும். அதை உறுதி செய்யுமாறு கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். பான் எண் வாங்காத நகைக்கடை அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.