Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 11, 2016

‘ஸ்டாலின் தலைவராக வரட்டும்...ஆனால்...?' -கருணாநிதியை அமைதிப்படுத்திய அழகிரி


ஆறு நாட்கள் ஹாங்காங் பயணத்தை முடித்துவிட்டு, இன்று காலை கோபாலபுரம் வந்திருக்கிறார் மு.க.அழகிரி. இந்நிலையில்,  ' பத்து நாட்களுக்குள் நாங்கள் எதிர்பார்க்கும் அறிவிப்பை, கலைஞர் வெளியிடுவார்' என அதிர வைக்கின்றனர் அழகிரி ஆதரவாளர்கள்.

தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த சில வாரங்களாக சிகிச்சையில் இருக்கிறார். உடல் முழுக்க ஏற்பட்டிருந்த 'மீசெல்ஸ்' எனப்படும் சிறு கொப்புளங்களால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருந்தார். இதையடுத்து, கருணாநிதியை மூன்று முறை சந்தித்து உடல்நலம் விசாரித்துவிட்டு சென்றார் அழகிரி. இதை ஸ்டாலின் தரப்பினர் ரசிக்கவில்லை. மீண்டும் ' அழகிரியின் ஆதிக்கம் கட்சிக்குள் ஏற்படும்' என அரசியல் அரங்கில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், நான்காவது முறையாக இன்று கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் வந்திருக்கிறார் அழகிரி.

" தலைவரை சந்தித்துவிட்டு வந்ததில் இருந்து மிகுந்த மனவேதனையில் இருந்தார் அழகிரி. அவரது உடலில் இருந்த கொப்புளங்களைப் பார்த்துக் கதறி அழுதுவிட்டார். அழகிரியை நேரில் பார்த்தபோது, ' அழகிரி...அழகிரி..' என உருகினார் தலைவர். ' மீண்டும் கட்சிக்குள் அவர் சேர்க்கப்பட வேண்டும்' என்பதில் செல்வி உள்பட பலரும் உறுதியாக இருக்கிறார்கள். இதனை ஸ்டாலின் தரப்பில் ஏற்கவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம். அதையும் தாண்டி, இன்னும் பத்து நாட்களுக்குள் கட்சிக்குள் அழகிரி சேர்க்கப்படுவார். கருணாநிதியே இதை அறிவிப்பார்" என அதிர வைத்த அழகிரி ஆதரவாளர்கள், தொடர்ந்து,

" கலைஞரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக, தகவல் கிடைத்ததில் இருந்து மிகுந்த உற்சாகமாகிவிட்டார் அழகிரி. இதையடுத்து, ஹாங்காங்கில் உள்ள மெக்காவ் தீவுக்குப் பயணப்பட விரும்பினார். மற்ற நாடுகளுக்குச் சென்றால், நமது ஊர் ஆட்களின் ஆர்வத்தால் சில சிரமங்கள் ஏற்படுகின்றன. மெக்காவ் பகுதியில் அதுபோன்ற தொல்லைகள் இல்லை. மிகவும் தனிமையான பகுதி அது. இதுவரையில், இரண்டு முறை மெக்காவ் பகுதிக்குச் சென்று வந்திருக்கிறார். அவருடன் அவருடைய நண்பர்கள், ஆதரவாளர்கள் என ஆறு பேர் பயணப்பட்டார்கள். தீவில் இருந்த நாட்களில் மிகுந்த ஜாலி மூடில் இருந்தார் அழகிரி. நேற்று காலைதான் மதுரை வந்தார்" என விவரித்தவர்கள்,

" கட்சிக்குள் அழகிரி வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை என்றாலும், ஒரு விஷயத்தை தெளிவாகவே கூறிவிட்டார் அழகிரி. ' கலைஞர் இருக்கும் வரையில் தலைவர் பதவிக்கு இன்னொருவர் வருவதை நான் விரும்பவில்லை. அவருக்குப் பிறகு, ஸ்டாலின் வருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர் இருக்கும்போது இன்னொருவரை தலைவராக ஏற்க நான் விரும்பவில்லை என்றுதான் சொன்னேன். அவருக்குப் பிறகு ஸ்டானின் தலைவராக வருவதற்கு எந்த எதிர்ப்பையும் காட்ட விரும்பவில்லை' என உறுதியாகவே கூறிவிட்டார். தொடக்கத்தில், அழகிரியின் கருத்தை கலைஞர் புரிந்து கொள்ளவில்லை. தற்போது நிலைமை சரிசெய்யப்பட்டுவிட்டது. அழகிரி கட்சிக்குள் மீண்டும் வர வேண்டும் என்பதில் கலைஞர் உறுதியாக இருக்கிறார்" என்றார் உற்சாகத்தோடு.

அறிவாலய நிர்வாகி ஒருவரிடம், இதுகுறித்துக் கேட்டபோது, " நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகளை அழகிரி எப்படி ரசித்தார் என்பதை உடன்பிறப்புகள் மறந்துவிடவில்லை. சொந்தக் கட்சியின் தோல்வியை ரசித்ததோடு மட்டுமல்லாமல், ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே பயணத்தையும், 'காமெடி டைம்' என விமர்சித்தார். கலைஞருடன் அவர் நடத்திய நேரடி வாக்குவாதத்தையும் நாங்கள் மறக்கவில்லை. கடந்தமுறை, கலைஞரை அவர் சந்திக்க வந்தபோது, ஸ்டாலினையும் சந்த்துப் பேசினார் எனத் தகவல் வெளியானது. அப்படியொரு சந்திப்பே நடக்கவில்லை. அவரை மீண்டும் சேர்த்துக் கொள்வதை, ஸ்டாலின் விரும்பவில்லை. அப்படியொரு சம்பவம் நடக்கும் என்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. தலைவர் மனதில் என்ன உள்ளது என்பதையும் அறிய முடியவில்லை" என்கின்றனர்.

' கண்கள் பனித்தது இதயம் இனித்தது' என்பன போன்ற ஓர் அறிக்கைக்காக காத்திருக்கிறார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள். கோபாலபுரத்தில் உச்சகட்ட பாச மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.