Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 19, 2016

'1969க்கு பிறகு மீண்டும் அதே நிலையா?'- வங்கிகளுக்குள் நடப்பது என்ன?


நள்ளிரவில் நாய்கள் திடீரென குரைத்தால், ‘ஓய் உறங்கச் செல்; வங்கி ஊழியர் வீட்டுக்குப் போகிறார்’ என நாயைப் பார்த்து மக்கள் கூறுவார்களாம். 1969-ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி வங்கிகளை தேசிய மயமாக்கியபோது இந்த ஜோக், மக்கள் மத்தியில் மிகப் பிரபலம். தற்போது மீண்டும் அந்த நாட்களில் திரும்பியுள்ளதுபோல் உணர்கிறார்கள் வங்கி ஊழியர்கள். ஒரு பக்கம், பற்றாக்குறையாக உள்ள ரூபாய் நோட்டுகள்... மறுபக்கம், பேங்க் வாசலில் நீண்டிருக்கும் மக்கள் கூட்டம்... என இரண்டு பக்கமும் அடிவாங்கிக்கொண்டிருக்கின்றனர் அவர்கள்.

நமக்கு மோடி அறிவித்ததும், அதையொட்டி வங்கிகளிலும், ஏ.டி.எம்-களிலும் மக்கள் கால்கடுக்கக் காத்திருப்பது மட்டுமே தெரிகிறது. ஆனால், உள்ளே என்ன நடக்கிறது... வங்கியாளர்கள் என்னென்ன சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. வங்கிகளிடம் தேவையான பணம் கையிருப்பு இருக்கிறதா... மோடி சொன்னதுபோல 50 நாட்களில் பிரச்னை தீருமா?

வங்கி ஊழியர்கள் சிலரிடம் பேசியதில் இருந்து கிடைத்த தகவல்கள் இங்கே... ‘‘2,100 கோடி எண்ணிக்கையிலான 1,000, 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சிடும் அச்சகங்களால் ஒரு மாதத்துக்கு 300 கோடி ரூபாய் நோட்டுகள் மட்டுமே அச்சடிக்க முடியும். அப்படி என்றால் தடை செய்யப்பட்ட 2,100 கோடி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க குறைந்தபட்சம் ஏழு மாதங்கள் ஆகும். ஆனால், மத்திய அரசு டிசம்பர் 30-க்குள் எல்லாம் சரியாகிவிடும் எனக் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. தற்போது வங்கிகளில் சுத்தமாக பணமே இல்லை. ஒரு வங்கி, நான்கு மடங்கு பணம் கேட்டால்... ரிசர்வ் பேங்க், ஒரு மடங்கு பணம் மட்டுமே அனுப்புகிறது.



மக்கள் கூட்டத்தைப் பொறுத்து நகரங்களில் உள்ள வங்கிகளுக்கு 25 லட்ச ரூபாய் அனுப்பச்சொல்லி வலியுறுத்தினோம். ஆனால், வந்ததோ 4 லட்சம் ரூபாய் மட்டுமே. கிராமப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 200 பேர் வருகிறார்கள் என்றால், தற்போது 2,000 - 3,000 பேர் வருகிறார்கள். இதனால், ஐந்து மணி நேரங்களிலேயே பணம் காலியாகிவிடுகிறது. ரிசர்வ்பேங்கிடமும் போதிய அளவு 100 ரூபாய் நோட்டுகள் இல்லாததால், உபயோகப்படுத்தாமல் ஒதுக்கிவைக்கப்பட்ட பழைய 100 ரூபாய் நோட்டுகளை அனுப்பிவைக்கிறார்கள். கிராமப்புற வங்கிகளில் 3 அல்லது 4 ஊழியர்களே பணியில் இருப்பார்கள். இன்று அவர்கள் எல்லாம் ஓய்வு இல்லாமல் 10 - 12 மணி நேரம் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் கூட்டத்தாலும், அவசரத்தாலும் கணக்காளர்களின் கணக்குகளில் பற்றாக்குறை வந்துள்ளன. பல வங்கிகளின் கணக்காளர்கள் 5,000, 10,000 ரூபாய் என தங்களது சொந்த பணத்தைப் போட்டு கணக்கு முடிக்கும் அளவுக்கு நிலைமை உள்ளது’’ என புலம்பினர்.

இவர்களின் புலம்பல் மத்திய அரசுக்கு தெரியுமா?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.