Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 1, 2016

‘முக்காடு போட்டுட்டு சுட முடியாதுங்க!’ ஒரு வீராங்கனையின் குமுறல்


ஈரானில் டிசம்பர் மாதம் ஒன்பதாவது ஏசியன் ஏர்கன் ஷூட்டிங் போட்டி நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் அனைத்து வீராங்கனைகளும் முக்காடு அணிய வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நம்பர் -1 வீராங்கனையான இந்தியாவின் ஹீனா சித்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

‛‛விளையாட்டு என்பது மனித திறமைகளை வெளிப்படுத்துவதற்கான களம்தானே தவிர, வேறு எதுவும் இல்லை. விளையாட்டின் மூலம் நம் சக்தியை, திறமையை வலுப்படுத்தலாம். இதற்காகத்தான் நான் போட்டிகளில் பங்கேற்கிறேன். வேறு எதற்காகவும் அல்ல. என் மீது உங்கள் மத நம்பிக்கையைத் திணித்தால், நான் போட்டியில் பங்கேற்க மாட்டேன்’’ என, ஹீனா சித்து தெரிவித்துள்ளார்.


போட்டியில் இருந்து விலகுவது தொடர்பாக தேசிய ரைஃபிள் சங்கத்துக்கு ஹீனா கடிதம் எழுதியுள்ளார். அவரது முடிவை ரைஃபிள் சங்கம் ஏற்றுக் கொண்டது. ‛‛என் உணர்வுகளை மதித்து, இந்த முடிவை ஏற்றுக் கொண்ட ரைஃபிள் சங்கத்துக்கு நன்றி. இந்த போட்டியில் பங்கேற்க உள்ள சக வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். முக்காடு பிரச்னையை கருத்தில் கொள்ளாது, போட்டியில் கவனம் செலுத்துங்கள்’’ என அட்வைஸ் செய்துள்ளார் ஹீனா.


‛‛பாலினம், மதம், கொள்கை, கோட்பாடு, கலாசாரம் இவற்றையெல்லாம் கடந்து எவ்வித பாரபட்சமும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் போட்டியிட முடியும் என்பதாலேயே, விளையாட்டு வீராங்கனையாக இருப்பதில் பெருமை அடைகிறேன். நான் ஒன்றும் புரட்சியாளர் அல்ல. அதற்காக விளையாட்டு வீரர்களும் தலைப்பாகை அணிய வேண்டும் என கட்டாயப்படுத்துவது விளையாட்டு உணர்வையே அவமதிப்பது போலாகி விடும்’’ என விளாசும் ஹீனா, இந்த காரணத்துக்காக போட்டியில் இருந்து விலகுவது இது முதன் முறை அல்ல.

இதற்கு முன் ஆறாவது ஏசியன் ஏர்கன் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் ஈரானில் நடந்தது. அப்போதும் ஆடை கட்டுப்பாட்டு விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹீனா அந்த போட்டியில் இருந்து விலகினார்.


‛‛ஈரானில் நடக்கும் போட்டிகளில் பெண்கள் முக்காடு அணிந்து பங்கேற்க வேண்டும் எனும்போது, அதற்கு வித்தியாசமான பயிற்சி முறைகளும் தேவைப்படுகிறது. குறைந்தது மூன்று வாரம் வரை அதற்கென தனியாக பயிற்சி செய்ய வேண்டும். நான் அப்படி பயிற்சி செய்ததும் இல்லை, இனிமேல் பயிற்சி எடுக்கப் போவதும் இல்லை. ஈரானில் நடக்கும் போட்டிக்காக என்னைத் தயார் செய்வதில் நேரம், சக்தியை செலவிடுவதற்குப் பதிலாக, காயத்தில் இருந்து மீள்வதில் கவனம் செலுத்துவேன்’’ என்பது ஹீனா வாதம்.


கடந்த சில தினங்களுக்கு முன், அமெரிக்காவைச் சேர்ந்த செஸ் சாம்பியன் நஸி பெய்கிட்ஸ் பர்ன்ஸ் என்பவரும், இதே காரணத்தைச் சுட்டிக் காட்டி, டிசம்பர் மாதம் ஈரானில் நடக்கவுள்ள மகளிருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். ‛‛பெண்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படும், இரண்டாம் தர குடிமன்களாக நடத்தப்படும் ஈரான் போன்ற நாடுகளில், உலக சாம்பியன்ஷிப் நடத்துவது ஏற்கத்தக்கதல்ல’’ என நஸி பெய்கிட்ஸ் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.