Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 13, 2016

மக்களின் டீ, காபி குடிக்கும் பழக்கத்தையே மாற்றி அமைத்த மோடி


பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8-ம் தேதி இரவு  500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்படுவது குறித்து அறிவித்த பின்னர், மறு நாள் காலையில் உடனடியாகப் பாதிக்கப்பட்டது சாதாரண மக்கள்தான்.

ஒரு நாளின் தொடக்கம் என்பது டீ, காபியில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. பெரும்பாலோனோர் அக்டோபர் மாத சம்பளத்தை நவம்பர் முதல்வாரம்தான் வங்கி கணக்கு மூலம் பெற்றனர். மோடி அறிவிப்பு தொலைக்காட்சியில் வெளியானதும் ஏ.டி.எம் சென்று பணம் எடுத்த சிலருக்கு மட்டுமே நூறு ரூபாய்தாள்கள் வந்தன. பின்னர் வந்தது எல்லாமே செல்லாத 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள்தான். ஏ.டி.எம்-ல் இருந்து செலவுக்காக பணத்தை எடுத்து வைத்திருந்த நபர்கள் கையில் காசிருந்தும் பால் கூட வாங்க முடியாத அளவுக்கு முடங்கிப் போயினர். பால் விற்பனை செய்யும் மளிகைக்கடைகள், சிறு கடைகளில் 500 ரூபாய் நோட்டுக்களை வாங்கவில்லை. சில்லறை வைத்திருந்தவர்கள் மட்டுமே பால் வாங்கினர்.

கையில் இருக்கும் சில நூறு ரூபாய்களை வைத்தே கடந்த இரண்டு நாட்களாக பலர் செலவு செய்து வருகின்றனர். வழக்கமாக ஒரு லிட்டர் பால் வாங்குபவர்கள் அரை லிட்டர் மட்டுமே வாங்கி இருக்கின்றனர்.

அரை லிட்டர் பாலில் வழக்கத்தை விட எவ்வளவு அதிகத் தண்ணீர் ஊற்ற வேண்டுமோ அவ்வளவு அதிகமாகத் தண்ணீர் ஊற்றி காய்ச்சி இருக்கின்றனர். பலருக்கும் 2  நாட்களாகவே சுவையில்லாத டீ குடிக்கும் நாட்களாகவே கடந்தது. வீட்டில் இருக்கும் பெண்கள் வழக்கமாக நான்கு முறை டீ குடிக்க வேண்டும் என்றால், 2 முறைதான் டீ குடிக்கும் அளவுக்கு பழக்கத்தையே  மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
சிறுவணிகர்களின் கடைகளில் வழக்கமாக காலை 10 மணிக்கெல்லாம் ஆவின் மற்றும் சில தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்கள் தீர்ந்து விடும். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக ஆவின் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் பால்பாக்கெட்களும் இரவு 10 மணி வரை கூட கிடைத்தன. கடந்த 10, 11-ம் தேதி இரண்டு  நாட்களிலும் பால் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்கத்தைச் சேர்ந்த சு.ஆ. பொன்னுச்சாமியிடம் பேசினோம். "ஆவின் உள்ளிட்ட பால் பாக்கெட்களை முகவர்களுக்கு விநியோகிக்கும் மொத்த விற்பனையாளர்கள் சிலர் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்குவதில்லை. அதே போல மளிகைக்கடைகள், சிறுகடைகளுக்கு பால் விநியோகிக்கும் முகவர்கள் பாலுக்கான பணத்தை 500 ரூபாய், 1000 ரூபாயாக வாங்குவதில்லை. பொதுமக்களிடம் இருந்தும் கடைக்காரர்கள் 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்களை வாங்குவதில்லை. இதனால் பால் விற்பனை குறைந்துள்ளது. 9,10 இரண்டு நாட்களில் மட்டும் 30 முதல் 35 சதவிகிதம் பால் விற்பனை குறைந்துள்ளது" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.