November 27, 2016
நடிகர் தனுஷ் என் மகன்தான் - மரபணு சோதனைக்கு தயார்: சொந்தம் கொண்டாடிய மேலூர் தம்பதி திட்டவட்டம்
‘
நடிகர் தனுஷ் என் மகன்தான். இதற்காக மரபணு சோதனைக்கும் நான் தயாராக உள்ளேன். கஸ்தூரி ராஜா தன்னுடைய மகன் எனக் கூறுவதால் குழப்பத்துக்கு நீதிமன்றம்தான் சரியான தீர்வு அளிக்க முடியும்’ என மேலூரைச் சேர்ந்த தம்பதி தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம், மேலூர் மலம் பட்டியை சேர்ந்தவர் கதிரேசன்(60). ஓய்வுபெற்ற தனியார் பேருந்து நடத்துநர். தற்போது சிவகங்கை பேருந்து நிலையத்தில் டைம்கீப்ப ராக பணியாற்றுகிறார். இவரது மனைவி மீனாட்சி (55).
இந்த தம்பதி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் கலைச் செல்வன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 7.11.1985-ல் பிறந்தார். திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்தபோது, திடீரென காணாமல் போனார்.
சினிமாவில் நடிப்பதற்காக சென் னைக்கு சென்றதாக தகவல் கிடைத் தது. இதுவரை திரும்பிவரவில்லை. அவரைத் தேடியபோது, சினிமாவில் தற்போது பிரபல கதாநாயகனாக நடிக்கும் தனுஷ்தான் எனது மகன் என்பது தெரிந்தது.
சினிமாவில் சேர்ந்த பிறகு தனது பெயரை தனுஷ் கே.ராஜா என மாற்றிக் கொண்டார். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் கட்டுப்பாட்டில் தனுஷ் உள்ளார். அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. வறுமையில் வாடும் எங்களுக்கு குடும்ப பராமரிப்பு செலவுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க தனுஷுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையை 12.1.2017-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி செல்வக்குமார், நடிகர் தனுஷ் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
கஸ்தூரிராஜா கருத்து
சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் கஸ்தூரிராஜா, ‘எங்கள் குடும்பம், தனுஷ் குறித்து 40 ஆண்டுகளாக அனைவருக்கும் தெரியும். இதுபோன்ற வழக்கு களால் நீதிமன்றத்தின் பொன்னான நேரம் வீணாகிறதே என்று வருந்துகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்து நேற்று கதிரேசன் தம்பதி கூறியதாவது: எனது வழக்கறிஞர் மூலம் கஸ்தூரிராஜா பதில் அளித்துள்ள தகவல் கிடைத்தது. நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுவதாக அவர் தெரிவித்திருப்பது நீதிமன்றத் தையே அவமதிப்பதாகும். தனுஷ் என் மகன் என்கிறேன். கஸ்தூரி ராஜா அவரது மகன் என்கிறார். பிரச்சினை என வந்துவிட்டதால் தான் நீதிமன்றம் சென்றுள்ளேன். நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை ஏற்க நான் தயாராக உள்ளேன். தனுஷ் என் மகன் என நிரூபிக்க மரபணு உள்ளிட்ட எந்த சோதனைக்கும் தயாராக உள்ளேன்.
15 ஆண்டுகளாக வளர்த்த மகனை பார்த்ததும் கண்டுபிடித்துவிட மாட்டோமா?
‘திருடா திருடி’ படத்தில் ‘மன்மத ராஜா... மன்மத ராஜா’ என்ற பாடலுக்கு தனுஷின் நடனத்தை பார்த்து எனது பக்கத்து வீட்டுக்காரர்கள், ‘உன் மகன் கலைச்செல்வன்தான் சூப்பராக டான்ஸ் ஆடுறான்’ என சொன்ன பின்னர்தான் நாங்களும் அந்தப் படத்தைப் பார்த்தோம். என் மகன்தான் தனுஷ் என்பதை அங்க அடையாளங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மூலம் உறுதிப்படுத்தினோம். இதன் பின்னர் அவரை சந்திக்க பலமுறை முயற்சித்தும் நடக்கவில்லை. மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் அனுப்பியும் வரவில்லை. இந்த சட்டப் போராட்டத்தில் நான் வெற்றி பெறுவேன்’ என்றார் கதிரேசன்.
இதேபோன்ற வழக்கில் நடிகர் ஷாரூக் கான்
திரைப்பட பிரபலங்கள் இப்படி வழக்கில் சிக்குவது முதல்முறையல்ல. ஏற்கெனவே கடந்த 1996-ல் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானை தனது மகன் என மகாராஷ்டிரா மாநிலம் ஹிப்பெர்கா கிராமத்தைச் சேர்ந்த மலன்பாய் என்பவர் சொந்தம் கொண்டாடினார். மும்பைக்கு கூலி வேலைக்காக வந்தபோது அவரை தொலைத்து விட்டதாகவும், பல நாட்கள் தேடியும் காணாததால் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றதாகவும் லத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கை விரிவாக விசாரித்த நீதிமன்றம் பின்னர் வழக்கை தள்ளுபடி செய்தது.
நடிகர் தனுஷ் என் மகன்தான் - மரபணு சோதனைக்கு தயார்: சொந்தம் கொண்டாடிய மேலூர் தம்பதி திட்டவட்டம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.