November 5, 2016
என்டிடிவிக்குத் தடை விதித்துள்ளது கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல்: கருணாநிதி
என்டிடிவி ஒளிபரப்புக்கு மத்திய அரசு 24 மணி நேரம் தடை விதித்துள்ளது கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் இந்திய விமானப் படைத்தளத்திற்குள், 2-1-2016 அன்று பயங்கரவாதிகள் திடீரென்று புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அந்த நிகழ்வினை என்.டி.டி.வி. இந்தியா இந்தி சேனல் அதனை ஒளிபரப்பியதாக மத்திய பாஜக அரசு குற்றம் சாட்டியதோடு, பத்து மாதங்கள் கழித்து, நவம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல், மறுநாள் பிற்பகல் 1 மணி வரை, என்.டி.டி.வி. இந்தி சேனலின் ஒளிபரப்புக்கு, 24 மணி நேரம் தடை உத்தரவையும் விதித்துள்ளது.
இது பற்றி என்.டி.டி.வி தொலைக்காட்சி நிர்வாகம் கூறும்போது, ''பதான்கோட் தாக்குதலை எல்லா தொலைக்காட்சிகளும் நேரலையாகவே ஒளிபரப்பின. அனைத்துப் பத்திரிகைகளும் அது குறித்து விரிவான தகவல்களை வெளியிட்டன. ஆனால் என்.டி.டி.வி. மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையில், எங்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு பாரபட்சமற்ற வகையில் இருந்தது. நாட்டில் நெருக்கடி நிலை அமலில் இருந்த இருண்ட காலகட்டத்தில் பத்திரிகைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அதன் பிறகு இப்போது என்.டி.டி.வி.க்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை அசாதாரணமானது'' என்று தெரிவித்துள்ளது.
மேலும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கிடும் மத்திய பாஜக அரசின் கடுமையான இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், ஊடகத் துறையினரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், இந்திய செய்தி ஆசிரியர் கூட்டமைப்பினர், காட்சி ஊடக செய்தி ஆசிரியர்கள் சங்கத்தினர், எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தோர் உட்பட்ட பலரும் கண்டன அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.
'இந்து' ஆங்கில நாளிதழ் இன்று எழுதியுள்ள தலையங்கத்தில், 'ஊடகச் சுதந்திரத்தை முற்றிலும் மறுத்த கடுமையான செயல் என்று மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்திருப்பதோடு, ''உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் ஒளிபரப்பு தொடர்பான தர நிர்ணய ஆணையத்தின் விசாரணைக்கும் முடிவுக்கும் இதை ஒப்படைக்காமல், நேரடியாக மத்திய அரசு அலுவலர்கள் கொண்ட ஒரு குழு முடிவெடுத்திருப்பது நியாயம் ஆகாது'' என்றும் கருத்து தெரிவித்திருக்கிறது.
மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கையைப் பார்க்கும்போது, நெருக்கடி நிலை காலத்தில் திமுக ஏடான முரசொலிக்கும், அதில் நான் எழுதிய கட்டுரைகளுக்கும் விதிக்கப்பட்ட தடை உத்தரவுதான் நினைவிற்கு வருகிறது. மத்திய பாஜக அரசின் செயல்பாடு கருத்துச் சுதந்திர விதிமுறை மீறலாகும்.
மத்திய அரசு இப்படிப்பட்ட நடைமுறைகளைத் தொடருமானால், அது இரண்டாவது நெருக்கடி நிலைக்குத்தான் வழி வகுக்கும் என்பதோடு, அந்தக் கறுப்பு நாட்களைத்தான் இந்திய மக்களின் நெஞ்சில் நிரந்தரமாகச் செதுக்கி விடும்.
எனவே பிரதமர் இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு, ஜனநாயக உரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் இந்த ஆட்சியில் இனி எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை வெளியிட முன் வர வேண்டும். இல்லாவிட்டால், மத்திய பாஜக அரசு, ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரத்தையே நடைமுறைப்படுத்துகிறது என்று நாடெங்கிலும் எழுந்துள்ள குற்றச்சாட்டு, உண்மை என்றாகி விடும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.
என்டிடிவிக்குத் தடை விதித்துள்ளது கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல்: கருணாநிதி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 05, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 05, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.