Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 1, 2016

'இதற்குத்தான் உங்களுக்கு நீட்டிப்பு வழங்கினேனா?' -சிப்பெட் அதிகாரியிடம் சீறிய அழகிரி


சிப்பெட் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றும் முடிவில் இருந்து மத்திய அரசு பின்வாங்கிவிட்டாலும், அதற்கான உரிய உத்தரவுகள் இன்னும் வந்து சேரவில்லை. ' சிப்பெட் விவகாரத்தில் அழகிரி நேரடியாகத் தலையிட்டு, அதிகாரிகளிடம் சீற்றத்தை வெளிப்படுத்தினார்' என்கின்றனர் சிப்பெட் அதிகாரிகள்.

தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது சிப்பெட்(மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம்). மத்திய அரசின் உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சிப்பெட்டில், ஆறாயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலேயே லாபத்துடன் இயங்கும் இந்த நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றும் பணிகள் வேகமெடுத்தன. இதற்கு கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய உரத்துறை அமைச்சர் ஆனந்தகுமார் பின்னணியில் இருக்கிறார் என்ற தகவலால் அரசியல் கட்சிகள் அதிர்ந்தன. காவிரி விவகாரத்தை ஒட்டியே சிப்பெட்டை இடம் மாற்றும் வேலைகள் நடக்கின்றன என ஊழியர்களும் கொந்தளித்தனர். இதையடுத்து, சிப்பெட் ஊழியர்களின் தர்ணா போராட்டமும் நடைபெற்றது. தமிழக அரசியல் கட்சிகளின் அழுத்தத்தால், ' கிண்டி சிப்பெட்டை இடமாற்றம் செய்ய மாட்டோம். அதேவேளையில், டெல்லியை தலைமையகமாகவும் மற்ற மாநிலங்களில் மண்டல அலுவலகங்களையும் திறப்போம்' எனத் தெரிவித்தார் மத்திய அமைச்சர் ஆனந்தகுமார்.

" சிப்பெட் இடமாற்றம் தொடர்பாக, அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. இதனால், ஊழியர்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது. இதன் பின்னணியில் சிப்பெட்டின் உயர் அதிகாரிகள் சிலர் இருக்கிறார்கள். சிப்பெட் தொடர்பான எங்களது போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளிடம் ஆதரவு கேட்டோம். தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க இடதுசாரிகள், வி.சி.க உள்பட பெரும்பாலான கட்சிகள் எங்கள் போராட்டத்தை ஆதரித்தன. இதன்பின்னரே, மத்திய அரசு பின்வாங்கியது" என விளக்கிய சிப்பெட் ஊழியர் ஒருவர், " மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக மு.க.அழகிரி இருந்த காலத்தில், சிப்பெட்டின் வளர்ச்சிக்குப் பல உதவிகள் செய்திருக்கிறார்கள். கிண்டி, சிப்பெட்டில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட உயர்படிப்புக்கான மையத்தை அமைத்தது, மதுரையில் சிப்பெட்டைக் கொண்டு வந்தது, உள்கட்டமைப்புக்கான பணிகளுக்கு வேகம் கொடுத்தது என தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்பட்டார். அவருடைய காலத்தில்தான், சிப்பெட்டின் இயக்குநர் ஜெனரலாக எஸ்.கே.நாயக் நியமிக்கப்பட்டார். அவருக்குப் பதவி நீட்டிப்பு கொடுத்ததில் அழகிரிக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.

தற்போது சிப்பெட் இடமாற்றம் செய்யப்படுவதில், 'அதிகாரிகள் சிலரின் பங்கும் உண்டு' என அழகிரியின் பார்வைக்குக் கொண்டு சென்றோம். அவருக்கு எழுதிய கடிதத்தில், 'அன்புள்ள அண்ணன் அழகிரி அவர்களுக்கு...' என விளித்துவிட்டு, சிப்பெட்டின் சூழல் பற்றி விவரித்திருந்தோம். அன்று எங்களுக்கு ஆதரவாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதேநேரத்தில், கலைஞரும் அறிக்கை வெளியிட்டார். இதன் பின்னணியில் அழகிரி இருந்தார். அதிகாரிகளின் செயல்பாடுகளை அறிந்து, நேரடியாகவே இயக்குநர் ஜெனரலுக்குப் போன் செய்து, ' உங்களுக்கு நீட்டிப்பு கொடுத்ததற்கு நன்றிக்கடனாகத்தான் இதைச் செய்கிறீர்களா?' எனச் சீற்றத்தை வெளிப்படுத்தினார். இதை டி.ஜி எதிர்பார்க்கவில்லை. இன்றளவும் அவர் அழகிரியுடன் நட்பில் இருக்கிறார். சிப்பெட் தொடர்பாக சில விளக்கங்களையும் அளித்தார். அழகிரியின் பேச்சு தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது" என்றார் விரிவாக.

சிப்பெட் ஐக்கிய ஊழியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புச் செயலர் நீலகண்டனிடம் பேசினோம். " மத்திய அரசிடம் இருந்து இன்னமும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. அரசாணை வந்து சேரும் வரையில் எதையும் உறுதியாகச் சொல்ல இயலாது. தமிழ்நாட்டில் இயங்கும் சிப்பெட் தலைமையகத்தை, டெல்லிக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறோம். எங்களிடம் பேசும் அதிகாரிகளும், ' மாற்றம் இருக்காது. நம்புங்கள்' என்கின்றனர். அரசியல் கட்சிகளுக்குக் கடிதம் எழுதியது போலவே, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கும் கடிதம் எழுதியிருந்தோம். அவர் பதவியில் இருந்த காலத்தில் கிண்டிக்கு நேரடியாகவே வருகை தந்து, அடிக்கல் நாட்டினார். தற்போது இந்த விவகாரம் குறித்து, அவர் அதிகாரிகளுடன் பேசினாரா என்று தெரியவில்லை" என்றார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.