Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 10, 2016

பணத்தை மாற்ற தங்கம் வாங்கும் மக்களே... கொஞ்சம் இதையும் கவனிக்கலாமே!


மோடி அலை இந்தியாவை 2014 மக்களவைத் தேர்தலின் போது தாக்கியதோ, இல்லையோ?, நவம்பர் 8-ம் தேதி இரவு செம தாக்கு தாக்கி இருக்கிறது. வீட்டில் இருக்கும் ஒட்டுமொத்த 500, 1000 ரூபாய் தாள்களையும் மாற்ற என்ன வழி? என்று திட்டம் தீட்டத் தொடங்கி விட்டார்கள் மக்கள்.

சாமான்ய மக்களுக்குப் பொதுவாகவே எளிதான முதலீடு என்று பார்த்தால் அது தங்கம்தான். கொஞ்சம் கொஞ்சமாக இல்லத்தரசிகள் சேர்த்து வைத்த பணத்தை தங்கத்தில்தான் போடுவார்கள். அதுவும் இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் இதை விட்டால் வேறுவழியில்லை என்ற நிலையில், நேற்று இரவு முழுக்க முழுக்க நகைக் கடைகள் இயங்கி இருக்கின்றன.

நகை வியாபாரிகளும் தங்களுடைய பில்களைக் கணக்குக் காட்ட ஒரு வார அவகாசம் இருப்பதாலும், 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கால அவகாசம் இருப்பதாலும் துணிந்து விற்பனையில் ஈடுபட்டனர்.

ஆனால் தங்கத்தைப் பொறுத்தவரை, அதன் விலையின் போக்கு எப்படி இருக்கும்? தங்கத்தை வாங்கி முதலீடு செய்வது இத்தகைய நெருக்கடியான சூழலில் சரிதானா? என்பது குறித்து கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தரிடம் கேட்டோம்.

"மக்கள் பணத்தை வங்கியில் போடுவதைக் காட்டிலும் தங்கத்தை வாங்கி வைப்பதில்தான் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனில், எப்போதும் பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதுதான் இதற்குக் காரணம். ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்துள்ளது. இதனால் அவுன்ஸ் தங்கம் 50 டாலர் வரை உயர்ந்து, 1,320 டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகிறது. கிட்டத்தட்ட 5 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

ட்ரம்ப் அதிபராக வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் வட்டிவிகிதத்தைக் குறைப்பாரே தவிர உயர்த்த மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு மேலும் குறையும். தங்கம் மேலும் மேலும் விலை அதிகரிக்கும். மேலும் முக்கியமான விஷயம், தங்கத்தின் விலை தற்போது டிமாண்டின் அடிப்படையில் உயரவில்லை. எனவே இந்த விலை உயர்வு நிரந்தமானது அல்ல. எப்போது வேண்டுமானாலும் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், தங்கத்தைப் பொறுத்தவரை முதலீடு செய்வதில் எந்தச் சிக்கலும் இல்லை.

அதற்காக சாதாரண மக்கள், தாங்கள் எதற்கோ வைத்திருக்கும் பணத்தை தங்கத்தில் கொண்டு போட வேண்டாம். பின்னர் தேவை வரும்போது தங்கத்தை விற்கப் போனால் விலை இறங்கி இருந்தால் நஷ்டமே ஏற்படும்.

உபரியாக, தற்போதைக்கு தேவைப்படாத நிலையில் இருக்கும் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்யலாம்" என்று விளக்கமளித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.